தேறுமா தேர்தல் கூட்டணிகள்? கூட்டணிக்கு அச்சாரமிடும் பிறந்த நாள் விழா!

தேறுமா தேர்தல் கூட்டணிகள்?
கூட்டணிக்கு அச்சாரமிடும் பிறந்த நாள் விழா!
Published on

மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளை திமுகவினர் மிக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வினி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பொதுவாக திருமண வீடுகளில் அடுத்த புதிய திருமணம் பற்றிய பேச்சுகள் முடிவாகும். அரசியல் களத்திலோ, கட்சித் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களிலும், திருமண விழாக்களிலும் புதிய கூட்டணிக்கான அச்சாரம் இடப்படுகிறது. அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தேர்தல் கணக்குகளைத் தொடங்கியுள்ளது. தேறுமா இந்தத் தேர்தல் கணக்குகள்? பத்தாண்டுகளை நிறைவு செய்துள்ள பாஜக அரசு ஹாட்ரிக் அடித்து அடுத்த ஐந்தாண்டுகளைத் தக்கவைக்க தீவிரமாக களமிறங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டு தொடர்ந்த அதிமுகவுடனான கூட்டணியை இம்முறையும் தொடர ஒற்றைத் தலைமை, இரட்டை இலையை உறுதி செய்து கொடுத்துள்ளது பாஜக. ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் கொடியையும், தலைவர்களையும் அதிமுக தலைமை பயன்படுத்திக் கொள்ள தயக்கம் காட்டினாலும் மக்களவைத் தேர்தலை பாஜகவுடன் இணைந்து சந்திக்கவே தயாராகி வருகிறது. ஆனால் அது அதிமுகவிற்கு எந்தளவிற்குப் பலனளிக்கும் என்பது 2024 ல் தான் தெரியும்.

பாஜகவிற்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து பெரிய கூட்டணியுடன் களமிறங்கத் திட்டமிட்டு வருகிறது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி. மக்களிடம் பெருவாரியான கவனத்தை ஈர்ப்பதற்காக ராகுல் மேற்கொண்ட ஜூடோ பாரத் பயணமும் வரும் தேர்தலில் பயனளிக்கும் என காங்கிரஸ் தொண்டர்களும், கூட்டணி கட்சியினரும் நம்புகின்றனர்.

2021 ஆம் சேலம் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒன்றாகத் திரட்டி ஓரணியாக ஆக்கி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிட்டோம். அதனால் தான் மகத்தான வெற்றியைப் பெற முடிந்தது. முழுமையான வெற்றியைப் பெற முடிந்தது. அதுபோல நீங்களும் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்று சேருங்கள் அதுதான் என்னுடைய  கோரிக்கை" எனப் பேசினார்.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராயபேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற இதுபோன்றதொரு பெரிய கூட்டத்தில் தான் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

பாஜகவிற்கு மாற்றாக காங்கிரசையும், மோடிக்கு மாற்றாக ராகுலையும் திமுக தொடர்ந்து முன் வைத்து வருகிறது. 2004 ல் எப்படி மெகா கூட்டணி அமைத்து பாஜக வீழ்த்தப்பட்டதோ அதே போன்றதொரு கூட்டணியை அமைக்க காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனால் அப்போது கூட்டணியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இப்போது இந்தக் கூட்டணியில் இல்லை. அதே சமயம், காங்கிரசை தீவிரமாக ஆதரித்து வரும் திமுகவுடன் மமதா நெருக்கம் காட்டி வருகிறார். இந்த நட்பைப் பயன்படுத்தி திரிணாமுல் காங்கிரசையும், திமுக கூட்டணிக்குள் இழுத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தெலுங்கானா முதலமைச்சர் கே.சி. ஆர், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வியூகத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் 85 வது மாநாடு சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூரில் கடந்த 24 ந் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் முக்கிய தீர்மானமாக, நாட்டின் அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும் சவால்களை எதிர் கொள்ளவும் பொதுவான, ஆக்கப்பூர்வமான செயல் திட்டத்தின் அடிப்படையில் ஒரே சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து செயல்படத் தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாஜகவிற்கு மாற்று வேண்டும் என விரும்பும் பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதைப் போல அமைந்திருக்கிறது.

"நாட்டின் சுதந்திரத்தில் பங்களிப்பு இல்லாதவர்கள் இப்பொழுது வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறார்கள். அரசுக்கு எதிராக குரல் எழுப்புபவர்களை ஒடுக்குவதற்கு புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துகின்றனர். பாஜகவின் பிடியிலிருந்து நாட்டை மீட்க வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் உள்ளடக்கிய வலுவான கூட்டணியை உருவாக்கினால் பாஜகவை 100 இடங்களுக்குள் சுருட்டி விடலாம்" என கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார். ஆக, பாஜகவிற்கு எதிராக அணி திரளும் கட்சிகள் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்க ஆரம்பித்துள்ளன.

"மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் இலக்கை காங்கிரஸ் தொண்டர்கள் சாதித்து காட்ட வேண்டும்" என சோனியா காந்தி காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் மறைமுகமாக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் உற்சாக அழைப்பு விடுத்திருக்கிறார்.

"பாஜகவின் சித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள் நிச்சயமாக ஒருங்கிணைந்து போராட வேண்டும் ஒவ்வொருவரும் இதற்காக போராட வேண்டும்" என பிரியங்கா காந்தி தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மாநிலக் கட்சிகளை இணைத்தோ, தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்தோ பாஜகவை அகற்றிட எதிர்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் வரும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அமைய உள்ளது.

பத்தாண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜக பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாலும் பல முடிவுகளை துணிச்சலாக எடுத்திருக்கிறது. இவையெல்லாம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு சாதகமாக இருக்குமா? எதிர்கட்சிகளின் வியூகம் புதிய ஆட்சிக்கு வழிவகுக்குமா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கான எழுபதாவது பிறந்தநாள் விழாவானது அவருக்கான வாழ்த்துகளோடு, இந்த எதிர்கட்சிக் கூட்டணியில் மேலும் பல கட்சிகளை கொண்டு வந்து சேர்க்குமா?

பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com