
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் அமைந்துள்ளது அறப்பளீஸ்வரர் திருக்கோயில். ஏராளமான சித்தர்களும், முனிவர்களும், பக்தர்களும் பல ஆண்டுகளாக வழிபட்ட பூமி இது. ஓங்கி உயர்ந்த மலைகள், மலையெங்கும் மரங்கள், அருவிகள், ஓடைகள், ஆங்காங்கே சின்னஞ்சிறு கிராமங்கள் எனக் கண்ணையும் கருத்தையும் கவர்கின்ற விதத்திலே எழிலோடு திகழ்கிறது கொல்லிமலை. பார்க்குமிடங்கள் எல்லாம் சில்வர் ஓக் மரங்களும், அவற்றைப் பின்னிப் பிணைந்திருக்கிற மிளகுக் கொடிகளும், பசுமை நிறைந்த வாழைத் தோட்டங்களும், மூலிகை வளம் மிக்க வனப் பகுதிகளும் இங்கே ரம்மியமான காட்சி தருவன ஆகும். இலக்கியத்திலும், வரலாற்றிலும் முக்கியமான இடம் கொல்லிமலைக்கு உண்டு. சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் கொல்லிமலையின் சிறப்பு இடம்பெற்றிருக்கிறது. உதாரணமாக, அகநானூற்றுப் பாடல் ஒன்றில்,
‘முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்இசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈந்த
செவ்வேர்ப் பலவின் பயம்கெழு கொல்லி‘
என்று வருவதைப் பார்க்கலாம். அப்படிப்பட்ட கொல்லிமலையில் அறப்பள்ளி என்ற இடத்தில் எழுந்தருளியிருக்கும் ஈசனுக்கு அறப்பளீஸ்வரர் என்ற திருநாமம். ‘கொல்லி குளிர் அறைப்பள்ளி’ என்று திருநாவுக்கரசர் பெருமான் தமது பாடல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். கொல்லிமலையில் இருக்கும் வளப்பூர் நாடு என்னும் இடத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. அறம் வளர்த்த நாயகி அம்மையுடன் அறப்பளீஸ்வரர் இங்கே எழுந்தருளியிருக்கிறார்.
இக்கோயில் உருவான புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. இந்த ஆலயம் இருந்த இடம் ஒரு காலத்தில் விவசாய நிலமாக இருந்தது. அந்த நிலத்தைக் கலப்பை கொண்டு உழுதபோது, ஏதோ ஒரு பொருள் மீது கலப்பை இடிக்க, அங்கிருந்து ரத்தம் பொங்கி வந்திருக்கிறது. அந்த இடத்தை ஆராய்ந்து பார்த்தபோது, அழகே உருவாக சுயம்பு சிவலிங்கத் திருமேனி ஒன்று காணப்பட்டது. அந்த சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பையினால் உண்டான காயம் பட்ட தழும்பு இன்றும் காணப்படுகிறது.
இந்த ஆலயம் சுமார் 1400 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ராஜராஜ சோழரின் பாட்டியாராகிய செம்பியன் மாதேவியார் இந்த ஆலயத்தை வணங்கிச் சென்றிருக்கிறார். அப்போது அவர் விலையுயர்ந்த ஆபரணங்கள் பலவற்றையும் இக்கோயிலுக்குக் காணிக்கையாக அளித்திருக்கிறார் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
இந்த ஆலயம் குறித்து இன்னொரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது. கோயிலுக்கு வடக்கே, ஐந்து நதிகள் சங்கமிக்கின்றன. அதற்கு, ‘பஞ்ச நதி’ என்று பெயர். அந்த ஆற்றில் ஒருவர் மீன் பிடித்து சமைக்க முயல, கொதிக்கும் குழம்பில் இருந்து உயிரோடு மீன்கள் துள்ளிக் குதித்து ஓடி மறைந்தனவாம். இதனாலேயே, ‘அறுத்த மீனைப் பொருத்தி உயிர்த்த அறப்பளீஸ்வரர்’ என்னும் சொலவடை உண்டாயிற்று.
கோயிலில் அறம் வளர்த்த நாயகி, அறப்பளீஸ்வரர், வினாயகர் மற்றும் முருகன் ஆகியோருக்குத் தனித்தனிச் சன்னிதிகள் உள்ளன. கோயிலின் குறிப்பிட்ட ஓரிடத்தில் நின்றால், மேற்கூறிய நான்கு தெய்வ சன்னிதிகளையும் ஒருசேர தரிசிக்கலாம். சுற்றுப் பிராகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, லட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்கை, கால பைரவர், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோரும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். நவக்கிரஹங்களுக்கான வழிபாட்டு இடமும் உள்ளது.
ஆலயத்துக்கு அருகிலேயே ஆகாச கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. இதன் உயரம் சுமார் 150 அடிகள் இருக்கும். இதனை அடைய தரைமட்டத்திலிருந்து 720 படிகள் கீழே இறங்கிச் செல்ல வேண்டும். இங்கே உள்ள ஆற்றில் அறப்பளீஸ்வரர் மீன் வடிவில் உள்ளதாக ஐதீகம். இந்த ஆற்றில் பக்தர்கள் மீன்களுக்கு உணவிட்டு மகிழ்ந்தும், மீன்களைப் பிடித்து அவற்றுக்கு மூக்குத்தி அணிவித்து, மீண்டும் நீரிலேயே விடுவதும் வாடிக்கை. இந்த ஆறு மலையிலிருந்து கீழிறங்கி துறையூர், முசிறி வழியாகப் பாய்ந்து காவிரியில் சங்கமிக்கிறது.
ஆடிப் பதினெட்டாம் பெருக்கு இங்கே முக்கியத் திருவிழாவாகும். அப்போது மக்கள் பெருவாரியாகத் திரண்டு ஆலய தரிசனம் செய்கின்றனர். மகா சிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை தீபம், திருவாதிரை மற்றும் பிரதோஷம் ஆகியவற்றின்போதும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. கொல்லிமலையில் தங்குவதற்கு, நெடுஞ்சாலைத் துறை மற்றும் வனத் துறை ஆகியவற்றின் ஓய்வில்லங்கள் இருக்கின்றன. இவையன்றி, பலவிதமான கட்டணங்களில் தனியார் விடுதிகள் மற்றும் ரிசார்ட்டு தங்குமிடங்களும் உள்ளன.
இக்கோயில் சேலத்தில் இருந்து ராசிபுரம் வழியாக சுமார் 90 கி.மீ. தொலைவிலும், நாமக்கல்லில் இருந்து சுமார் 64 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. கொல்லிமலைக்குப் போய் வர, காரவள்ளி வழியே அதிகக் கொண்டையூசி வளைவுகள் கொண்ட மலைப் பாதை ஒன்றும், முள்ளுக்குறிச்சி வழியாக இன்னொரு மலைப் பதையும் உள்ளன. சேலம் மற்றும் நாமக்கல்லில் இருந்து காலை, மாலை வேளைகளில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.