கேள்வியின் நாயகனே......!

கேள்வியின் நாயகனே......!

தமிழ் சினிமாவில் மிக அழுத்தமாய் தடமும், தடயமும் பதித்தவர் இயக்குனர் கே. பாலச்சந்தர். புதுமை இயக்குனர் பாலச்சந்தர் அவர்களின் நினைவு தினத்தில் அவரை பற்றிய நினைவு துளிகள்.....

k.Balachnadar
k.Balachnadar

சினிமா உலகில் பெண்களின் நுண்ணிய மென் உணர்வுகளை துல்லியமாய் படம்பிடித்து காட்டியவர் அவரை தவிர எவருமில்லை. பெண்மை போற்றிய பெரும் கலைஞர் அவரை தவிர வேறு யாராய் இருக்க முடியும் . பெண்ணுரிமை பேசும் கேரக்டர்களை கதாநாயகிகளாக்கி நம் கண்முன்னே உலவ விட்டவர். 'அவள் ஒரு தொடர் கதை' கவிதாவை தான் மறக்கமுடியுமா? கடைசி வரை கண்ணீரே வராமல் ரசிகர்களை காட்சிக்கு காட்சி அழவைத்த "அவர்கள் நாயகி அனு"வை தான் மறக்க முடியுமா? எத்தனையோ புன்னகைகளை நாம் கண்டிருந்தாலும் "புன்னகை" படத்தில் இறுதி காட்சியில் ஜெயந்தியின் முகத்தில் தோன்றும் அந்த மென் புன்னகைக்கு ஈடு இணையுண்டா? "புன்னகை மன்னன் "ருக்கு இதுவொன்றும் புதியதல்லவே...! ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்விலும் ஏன் சினிமாவிலும் "எதிர் நீச்சல்" போட்டது நாகேஷ் மட்டுமா? இயக்குனர் சிகரமும் தானே!

தமிழ் சினிமாவில் புதுமைக்கும் புரட்சிக்கும் " அரங்கேற்றம் " போட்டவராயிற்றே? எத்தனை எத்தனை கேள்வி கணைகள் துளைத்தாலும் "கேள்வியின் நாயகனு'க்கு பதில் சொல்லவா தெரியாது. " சொல்லத்தான் நினைக்கிறேன்" என தான் நினைத்த அத்தனையும் சமரசமின்றி சொல்லியவராயிற்றே? அவர் சினிமாவில் கண்டுபிடித்த "அபூர்வ ராகங்கள்' தான் எத்தனையெத்தனை ? அத்தனையுமே அதிசய ராகங்களாய் ஜொலித்ததே! இதெல்லாமே அவருக்கு மட்டும் ஸ்பெஷலாய் "கடவுள் அமைத்து வைத்த மேடை"யோ என்னவோ! "நாணல்" போல் வளைந்துக் கொடுப்பதாகட்டும் "அச்சமில்லை அச்சமில்லை' என நிமிர்ந்து நிற்பதாகட்டும் "தாமரை நெஞ்சமாய்" தனித்து தெரிவார்.

தமிழ் சினிமாவிற்கே ' புது புது அர்த்தங்கள் 'தந்த புதுமை இயக்குனர் ஆயிற்றே! அவர் தமிழ் சினிமாவிற்கு கொடுத்த நடிப்புலக நாயக, நாயகிகள் இன்றும் வெற்றி கொடி நாட்டிக்கொண்டிருப்பது போல், அவர் திரையில் கொடுத்த பாத்திரங்களும் இன்னும் உயிப்போடு வாழ்ந்துக் கொண்டிருப்பது "அக்னி சாட்சி" யாய் உண்மை.

திரைப்படங்களில் மட்டுமா திரை பாடல்களிலும் பல்வேறு புதுமைகளை புகுத்திட்டவர். திரை பாடல்களில் "ஜூனியர் ஜுனியர் "மிமிக்கிரிகளை சேர்த்ததில் சீனியராய் மிளிந்தவர். அவர் படங்களில் 'சிந்துவையும் பைரவி'யையும் ரசிக்காதவர் இருக்க முடியுமா?

அவர் ஆட்கொண்டது சினிமாவின் வெள்ளித் திரைகளை மட்டுமல்ல சின்னத்திரையிலும் தான் தன் புதுமை தடத்தினை அழுத்தமாய் பதித்து வைத்தார் . அவர் இயக்கிய "கையளவு மனசு " கடலளவு நமது இதயத்தினை பதம் பார்த்தது யதார்த்தம் . அவரின் "மர்மதேசத்தில்" தொலைந்து போனது எவ்வளவு பேரோ? . இன்று வரை இவரே திரையுலகின் நிஜ துரோணச்சார்யார். "நூற்றுக்கு நுறு" அவருக்கு நிகர் அவரே! ரசிகர்களுக்கு இன்று வரை அவரது படங்களை "பார்த்தாலே பரவசம்" இறுதி மூச்சு வரை அவர் கற்பனைக்கு ஏது எல்லை 'வானமே அவருக்கு எல்லை" .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com