சுதந்திரப் போராட்ட வீராங்கனை உதாதேவியின் தைரியமும் தியாகமும் பற்றி தெரியுமா?

நவம்பர் 16, உதா தேவி நினைவு நாள்
Freedom fighter Udadevi
Freedom fighter Udadevi
Published on

ஜான்சிராணி போன்ற இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளின் வரலாறு பலருக்கும் தெரியும். ஆனால், உதாதேவி போன்ற தலித் எதிர்ப்புப் போராளிகளும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளனர் என்பது வெளி உலகிற்கு அவ்வளவாகத் தெரியாது. உதாதேவியின் நினைவு நாளான இன்று அவரது வீரமும் தியாகமும் பற்றித் தெரிந்து கொள்வோம்.

தைரியம் மற்றும் தலைமைத்துவம்: உதாதேவி ஒரு இந்திய பெண் சுதந்திரப் போராளி. பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான இந்தியக் கிளர்ச்சியில் பங்கு பெற்ற இந்திய வீரர்களுள் முக்கியமானவர். அவர் ஆவாத்தின் ஆறாவது நவாப் வாஜித் அலி ஷாவின் மகளிர் அணியில் உறுப்பினராக இருந்தார். உதாதேவி தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்தாலும் அவரது தைரியம் மற்றும் தலைமைத்துவத்திற்காக இந்திய மக்களால் கொண்டாடப்பட்டார்.

சபதமும், வீரமும்: உத்திரப்பிரதேசத்தின் லக்னோ மாவட்டத்தில் உள்ள உஜாரியா கிராமத்தில் 1825ம் ஆண்டு பாசி குடும்பத்தில் பிறந்தார் உதாதேவி. அவருடைய கணவர் மக்கா ஒரு சிறந்த மல்யுத்த வீரர். அவர் சின்ஹாட்டில் நடந்த இந்திய சுதந்திரப் போரில் வீர மரணம் எய்தினார். உதாதேவி அவரது மரணத்துக்குப் பழி வாங்குவதாக சபதம் செய்தார். துப்பாக்கிச் சுடுதல், குதிரை ஏற்றம் போன்ற கலைகளைக் கற்றுத் தேர்ந்தார். நவாப் வாஜித் அலி ஷாவின் படையில் சேர்ந்தார். ஆங்கிலேயர்களுடன் ஏற்பட்ட பல சந்திப்புகளின்போது அவரது வீரம் வெளிப்பட்டது. ஒரு சிப்பாயாக உடை அணிந்து அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவதற்கான கடுமையான மன உறுதியை வெளிப்படுத்தினார்.

ஆச்சரியமான தாக்குதல்கள்: பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியின்போது ஒரு முக்கியத் தலைவராக உருவெடுத்தார். பேகம் ஹஜ்ரத் மஹால் போன்ற பிற சுதந்திரப் போராளிகளுடன் இணைந்து போராடினார். உள்ளூர் புவியியல் பற்றிய தனது அறிவைப் பயன்படுத்தி ஆச்சரியமான தாக்குதல்களைத் தொடங்கவும் பிரிட்டிஷ் தொகுப்புகளை பதுக்கி வைக்கவும் உதாதேவியின் தலைமையும் போராட்ட குணமும், ஆச்சரியப்பட வைத்தன.

இதையும் படியுங்கள்:
சமூக ஒருங்கிணைப்புக்கு அவசியமாகும் சகிப்புத்தன்மை!
Freedom fighter Udadevi

கொரில்லாப் போரில் உதாதேவியின் பங்கு: உதாதேவி நவம்பர் 1857 சிக்கந்தர் பாக் போரில் பங்கேற்று பிரிட்டிஷ் கோட்டையை முற்றுகையிட்டார். அங்கு பாசி போராளிகளின் குழுவிற்கு தலைமை தாங்கி கொரில்லாப் போரில் முக்கியப் பங்கு வகித்தார். 2000 பேர் கொண்ட பிரிட்டிஷ் பட்டாளம், கிளர்ச்சியாளர்களால் கோமதி ஆற்றின் கரையில் சூழப்பட்டது. ஆண் வேடமிட்ட உதாதேவி தனது படைக்கு பல விதமான அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கிய பிறகு ஒரு ஆலமரத்தில் ஏறி பிரிட்டிஷ் வீரர்களை சுடத் தொடங்கினார். இரண்டு டசனுக்கும் அதிகமான ஆங்கிலேயர்களைக் கொன்றார்.

வீர மரணம்: ஆலமரத்தை சோதனையிட்ட பிரிட்டிஷார் அங்கிருந்த உதாதேவியை சுட்டுக் கொன்றனர். ஒரு ஜோடி கனமான பழைய பாணி குதிரை படைத்துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்தி வீர மரணம் எய்தினார் உதாதேவி. அந்த வீர மங்கைக்கு பிரிட்டிஷ் ஜெனரல் கால்வின் காம்ப்பெல் தனது தொப்பியைக் கழற்றி அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி: உத்திரபிரதேசத்தில், 1990ல் உதாதேவியின் சிலை நிறுவப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 அன்று உதாதேவியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம், பீகாரை சேர்ந்த மாநிலங்களில் இருந்து உதாதேவியின் திருவுருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்த மக்கள் வருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com