முத்துராமலிங்கத் தேவர் மீசையை எடுக்க காரணம் என்ன? இப்படியும் ஒரு கதையா?

Muthuramalinga Devar
Muthuramalinga Devar

தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் ஒருவர். இவரது ஆன்மீகப் பணி அளவிட முடியாதது. ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றிய போது தேவர் மீசையை எடுக்க எது காரணமாய் சொல்லப்படுகிறது என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.

முத்துராமலிங்கத் தேவர் மிகச் சிறந்த ஆன்மீகவாதி மற்றும் பேச்சாளர் என்பது அனைவரும் அறிந்தது தான். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் எனும் ஊரில் பிறந்த தேவர், சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழ்நாட்டில் இருந்து பெரும்படையைத் திரட்டி அனுப்பிய பெருமை தேவரையேச் சேரும்.

சிறந்த பேச்சாற்றல் திறன் கொண்ட தேவர் குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை இடைவிடாமல் சொற்பொழிவு ஆற்றுவார். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் புலமை பெற்றவராகத் திகழ்ந்தார் தேவர். ஆன்மீகத்தில் தேவர் கொண்டிருந்த ஞானமும், பேச்சாற்றலும் இவருக்குத் 'தெய்வத்திருமகன்' என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தது.

சாதிய பாகுபாட்டிற்கு எதிராகவும், தீவிர ஆன்மீகவாதியாகவும் வாழ்ந்த தேவர் மீசையுடன் கம்பீரமாய் வலம் வந்தார். ஆனால், அவர் மீசையை எடுத்ததற்குப் பின்னால், ஒரு உயரிய எண்ணம் இருந்தது எனச் சொல்லப்படுகிறது.

தேவர் ஆன்மீகச் சொற்பொழிவாற்றச் செல்லும் இடங்களில் கூட்டம் அலைமோதும். அப்படி ஒருமுறை கேரளாவில் திருவிதாங்கூர் மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு சொற்பொழிவு ஆற்றச் சென்றுள்ளார். இவரின் சொற்பொழிவைக் கேட்ட மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். அன்றைய சொற்பொழிவு முடிந்ததும் இரவு அங்கேயே தங்கியதாகவும், இவரின் அறையை அறிந்து கொண்டு திருவிதாங்கூர் இளவரசி முத்துராமலிங்கத் தேவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

அப்போது, உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா என இளவரிசி கேட்க, இல்லை என பதில் கூறினாராம் தேவர். அப்படி எனில் என்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா என இளவரசி கேட்டதும், தேவர் ஒருகணம் திடுக்கிட்டுப் போய் , உடனே ஏனம்மா உங்களுக்கு இந்த ஆசை தோன்றியது என கேட்க,'உங்களுடைய சொற்பொழிவைக் கேட்டேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதோடு உங்கள் மீசையை எனக்கு மிகப் பிடித்திருக்கிறது' என்று இளவரசி பதில் கூறியதாகவும், தீவிர பிரம்மச்சாரி மற்றும் ஆன்மீகவாதியான தேவர் இளவரசியின் எண்ணத்தைக் கேட்ட பிறகு தீர்க்கமான முடிவொன்றை எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா: தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை!
Muthuramalinga Devar

அடுத்த நாள் மீண்டும் சொற்பொழிவாற்ற தேவர் மேடையேறிய போது, அவர் மீசையை எடுத்து விட்டாராம். இதைக் கண்ட பொதுமக்கள் எதனால் தேவர் மீசையை எடுத்து விட்டார் எனக் குழம்பியுள்ளனர். அப்போது 'எனது மீசை ஒரு பெண்ணின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி விட்டது என்றால், எனக்கு மீசை முக்கியம் இல்லை; என்றென்றும் நான் போற்றும் ஆன்மீகமே முக்கியம்' என பதில் கூறி மக்களின் குழப்பத்தைத் தீர்த்து வைத்தாராம் தேவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com