எது உண்மையான காதல்?

எது உண்மையான காதல்?

- வழக்கறிஞர் சுமதி

ண்மையான காதல் எது தெரியுங்களா? உண்மையான காதலுக்கு நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். விக்ரம் பத்ரா - இவர் நமது இந்திய ராணுவத்தில் இருந்தவர். சொந்த ஊரில் இவர் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். ‘ஒரு ராணுவ வீரருக்குப் பெண் கொடுக்க மாட்டேன்’ என்கிறார்கள் அந்தப் பெண்ணின் பெற்றோர். அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் பேசுவதற்காக ராணுவத்திலிருந்து ஊருக்கு வருகிறார் விக்ரம் பத்ரா. வீட்டிற்கு வந்து பெட்டியை கீழே வைத்ததும், ‘கார்கிலில் போர், உடனே பணிக்கு வர வேண்டும்’ என்ற செய்தி அவருக்கு வந்து சேர்கிறது. உடனே அவர் அந்தப் பெண்ணிடம், ‘நான் போருக்குச் சென்றுவிட்டு மீண்டும் வந்து உனது பெற்றோரிடம் பேசுகிறேன்’ என்று கூறிவிட்டு அவசரமாகப் பணிக்குத் திரும்புகிறார்.

போருக்குப் போன அந்த வீரர், தன்னுடன் இருந்த பன்னிரண்டு ராணுவ வீரர்களைக் காப்பாற்றிவிட்டு, பாகிஸ்தானிய பங்கரில் இருக்கக்கூடியவர்கள் மீது சுடுகிறார். அவருக்கு முன்பு ஒரு ராணுவ வீரர் செல்ல ஆசைப்படுகிறார். ஆனால், அவரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ‘உனக்குக் குடும்பம், குழந்தைகள் இருக்கிறது’ எனக் கூறி, விக்ரம் பத்ரா முன்னே செல்கிறார். சென்ற அடுத்த நொடி, அவர் மீது எதிரிகளின் குண்டு மழை பொழிகிறது. அப்போது அவர் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? ‘என் மீது இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குண்டு மழை பொழி. என் மனது அதை இன்னும் கேட்கிறது. அதை நான் வீரமாக எதிர்கொள்வேன்’ என்று சொன்னதாக அவர் கூறியதுதான், ‘யே தில் மாங்கே மோர்’ எனும் வார்த்தை. நீங்கள் நினைப்பது போல் அது குளிர் பான விளம்பரத்துக்கான வாசகம் அல்ல.

கேப்டன் விக்ரம் பத்ரா
கேப்டன் விக்ரம் பத்ரா

‘தில் மாங்கே மோர்’ என்று சொன்னது ஒரு ராணுவ வீரன் எதிராளியின் குண்டு மழை தன்னுடைய இதயத்தைத் துளைக்கட்டும் என்று சொன்னதற்காக கூறிய வார்த்தைகள். அவன் இறந்து போகிறான். அவன் ஒரு பெண்ணைக் காதலித்தானே, அந்தக் காதலி இன்று வரைக்கும், அதாவது 1999ல் கார்கில் போர் நடைபெற்றது. இன்றைய தினம் வரை அந்தப் பெண் திருமணமே செய்துகொள்ளாமல் எங்கோ ஒரு சிறிய கிராம பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை செய்கிறாள். இதுதான் உண்மையான காதல். உண்மையான காதலை நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் சிலரிடமே நாம் காணலாம். சினிமாவில் காட்டுவதையெல்லாம் காதல் என்று நினைத்துக்கொண்டு, கரடி பொம்மை கொடுப்பதுதான் காதல், ஒத்தைக் கவிதை எழுதினால் காதல், எஸ்.எம்.எஸ். செய்தால் காதல், பீட்சா வாங்கிக் கொடுத்தால் காதல் என… இது எதுவுமே காதல் இல்லை.

நீங்கள் முதலில் நன்கு படியுங்கள். நல்ல வேலைக்குச் செல்லுங்கள். பெற்றவர்களை நன்கு பார்த்துக்கொள்ளுங்கள். இந்த சமூகத்துக்கும், உங்கள் பெற்றோர்களுக்கும், நீங்கள் படித்த பள்ளிக்கூடத்துக்கும் உங்களால் ஏதாவது நல்லது செய்ய முடியுமென்கிற தகுதி வருகிறபோதுதான், உங்கள் வாழ்க்கையை முடிவு செய்கின்ற தகுதியும், பக்குவமும் உங்களுக்கு வரும். எனவே, சினிமா காதலை பார்த்து ஏமாந்து விடாமல், நல்ல நட்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள். சந்தோஷமாக எல்லோரும் நண்பர்களாக இருங்கள். ‘உங்க பொண்ணை ஒரு பையனோட பார்த்தேனே’ என்று நமது அப்பா அம்மாவிடம் யாராவது சொன்னால், ‘நல்லா தெரியுமே... எனது பெண்ணும் அந்தப் பையனும் நல்ல நண்பர்கள். அவன் எங்கள் வீட்டுக்குக்கூட வருவான். எனது பிள்ளை போல அவன்’ அப்படியென்று நமது பெற்றோர் சொல்வது போல இருக்க வேண்டும் அந்த நட்பு. அடுத்தவர்கள் வந்து கோல் சொன்னால், நமது அம்மா, அப்பா கவலைப்படாமல் இருக்கக்கூடியதான நட்பாக அது இருக்க வேண்டும் என்பதிலே நீங்கள் கவனமாக இருந்தால், அது அனைத்துப் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தரக்கூடிய வாழ்க்கையாக இருக்கும்!

தொகுப்பு: எம்.கோதண்டபாணி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com