இன்று மறைந்த நடிகர் விவேக் அவர்களின் பிறந்தநாள். விவேக் பற்றிய பல்வேறு நினைவுகுறிப்புகளை அவருடன் பணி புரிந்த பல்வேறு பிரபலங்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.
நட்டி :(நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் ) "யூத் என்ற படத்தில் நானும் விவேக் சாரும் இணைந்து பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது.அப்போது விவேக் சார் மிக பிரபலமாக இருந்த நேரம் நான் வளர்ந்து வரும் கேமராமேன். என்னுடன் எந்த ஈகோவும் இல்லாமல் பேசுவார்.
மரம் நடுவதன் முக்கியத்துவம் பற்றி அப்போதே எனக்கு சொன்னார். அவரின் அறிவுரை படி சென்னையிலும் என் சொந்த ஊரிலும் மரங்களை நட்டு பராமரித்து வருகிறேன். அப்துல் கலாமின் சிஷ்யர்.அப்துல் கலாமின் கனவை நினைவாக்க முயற்சித்தவர். சின்ன கலைவாணர் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர்.விவேக் சார் மறைந்தாலும் அவரின் கனவை நினைவாக்க நாம் இருக்கிறோமே.
விவேகா : "எனது பெயரும் விவேக் சாரின் பெயரும் விவேகானந்தன் என்று இருப்பது எனக்கு மகிழ்ச்சி.அவர் ஹீரோவாக நடித்த பஞ்சு படத்தில் நான் பாடல் எழுதினேன். விவேக் சார் ஒரு கவிஞரும் கூட. சார் எழுதிய கவிதைகளை என்னை படிக்க சொல்லி கருத்து கேட்ப்பார்.என் கவிதை பலவற்றை படித்து என்னிடம் பாராட்டை தெரிவித்து உள்ளார்.பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளை படித்து விவாதிப்பார்.
சினிமாவில் சொன்ன பல கருத்துக்களை நிஜ வாழ்வில் செய்து காட்டியவர். மறைந்தாலும் மறக்க முடியாத நட்சத்திரம் நம் விவேக் அய்யா அவர்கள்.
எம். எஸ். பாஸ்கர் (நடிகர் ) "விவேக் தம்பி மனதில் உறுதி வேண்டும் படத்தில் நடித்த நாள் முதல் நான் அறிவேன்.அவர் நடித்த சில படங்களில் என்னுடைய காம்பினேஷன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர்களிடம் சொல்லி எனக்கு பல வாய்ப்புகள் விவேக் படத்தில் கிடைத்திருக்கிறது.
பாளையத்துஅம்மன் படத்தில் இருந்து பல படங்களில் எங்கள் காம்பினேஷன் தொடர்ந்தது. நானும் தம்பியும் நடித்த குரு என் ஆளு படம் இன்றளவும் மக்களால் பேசப்ப டுகிறது. என்னை எப்போதும் பாஸ்மா என்று கூப்பிடுவார். இந்த பூமி செழிக்க வேண்டும் என்று பாடுபட்டவர்.
மரணம் அனைவருக்கும் பொதுவானது என்று சொன்னாலும் தம்பியின் மரணத்தை மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது.இந்த வையம் உள்ள வரை விவேக் புகழ் இருக்கும்.
வடிவுக்கரசி : "விவேக் சாரை பற்றி என்னிடம் கேள்வி கேட்பதற்கு நான் பாக்கியம் செய்து இருக்க வேண்டும்.விசு சார் படம் தொடங்கி ரஜினியின் சிவாஜி படம் வரை பல படங்கள் விவேக் உடன் நடித்துள்ளேன். அவரது அறிவு கூர்மையை பார்த்து வியந்து இருக்கிறேன்.
பார்ப்பதற்கு சின்ன பையன் மாதிரி இருந்தாலும் விஷய அறிவு அபாரம். கஸ்தூரிக்கும் விவேகிற்கும் வாக்கு வாதம் கூட நடந்து இருக்கிறது.ரஜினி சார் விவேக் தம்பி பேசுவதை கை கட்டி கேட்பார். மரணம் தம்பியை கொண்டு சென்றாலும் அவரது அறிவின் வழியாக வாழ்ந்து கொண்டு இருப்பதாக நினைக்கிறேன்.நான் தம்பியை பற்றி பேசாத நாளே கிடையாது.