
ஒவ்வொரு குழந்தையின் முதல் ஹீரோ, அன்பையும், கட்டுப்பாடையும் ஒரே நேரத்தில் காட்டும் முகம், எந்த ஒரு இன்னல்களையும் தன் பிள்ளைகளின் கண் முன் காட்டாத உடல் மொழி - அவர் தான் தந்தை.
ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த தந்தையாக மட்டுமல்லாமல் நல்ல நண்பனாகவும் இருந்து அவர்களுடைய வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றுபவர். தனது வாழ்நாளில் பெற்ற அனுபவங்களை குழந்தைகளுக்கு எடுத்துரைத்து அவர்களை நல்வழியில் வழிநடத்துப்பவரும் இவரே. இவ்வாறு, தந்தையருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை (இந்த ஆண்டு ஜூன் 15, 2025) தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.
தந்தையர் தினத்தையொட்டி அவரது உடல் நலனையும், பொழுதுபோக்கையும் மேம்படுத்தும் பரிசுகளை கொடுத்து தந்தையர்களை மகிழ்ச்சியடையச் செய்யலாம். அவற்றில் சில சுவாரசியமான பயனுள்ள பரிசுகள் என்னவென்று இங்கே பார்ப்போம்.
1. ஸ்மார்ட் வாட்ச் / ஃபிட்னஸ் ட்ராக்கர்
ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் ஃபிட்னஸ் ட்ராக்கர்கள் தினசரி உடல் இயக்கங்களை எளிதாக கண்காணிக்க உதவும் பயனுள்ள சாதனமாகும். அதன் வகையில், தந்தையின் தினசரி அடிப்படை செயல்பாடுகளான நடை அடிகள், தூக்க நேரம், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றை கண்காணிக்க இது உதவும்.
சாம்சங், ஆப்பிள் உள்ளிட்ட பிரபல பிராண்டுகளில் ஏராளமான மாடல்கள் உள்ளதால், பட்ஜெட்டிற்கும் தேவைக்கும் ஏற்றவாறு தேர்ந்தெடுத்து பரிசளிக்கலாம்.
2. வாக்கிங் / ரன்னிங் ஷூஸ்
அதிகாலையில் நடைப்பயிற்சி அல்லது ஜாக்கிங் செல்லும் தந்தைக்கு, ஒரு பிராண்டட் வாக்கிங் அல்லது ரன்னிங் ஷூவை பரிசளிக்கலாம்.
நல்ல கிரிப் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஷூ சாலையில் சறுக்காமல் நம்பிக்கையுடன் நடக்க உதவும்.
சரியான ஷூவை தேர்ந்தெடுத்து பரிசளிப்பதால், தினசரி உடற்பயிற்சியை மேலும் சுலபமாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றலாம்.
3. ஹெல்த்தி ஸ்னாக்ஸ் ஹாம்பர்
நவீன வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிக மிக முக்கியம். சர்க்கரை இல்லாத, நார்ச்சத்து அதிகமுள்ள, இயற்கை சத்துக்கள் நிறைந்த ஸ்னாக்ஸ்களை பரிசளிப்பதால் அவர் தினமும் சுறுசுறுப்பாக வேலைகளை எளிதாக செய்யலாம். மேலும், இது உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து பல நன்மைகளை வழங்கும்.
4. புத்தகம்
சிறந்த எழுத்தாளர்களின் நூல்கள், ஆன்மீகம், சுயமுன்னேற்றம், வரலாறு, வணிகம் சார்ந்த நூல்களை பரிசளிக்கலாம். நல்ல புத்தகம் மன நிம்மதியையும் வழங்குவதுடன் அறிவையும் வலுவாக்கும்.
5. நினைவு ஆல்பம்
குடும்ப விழாக்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், சுற்றுலா சென்ற தருணங்கள் ஆகியவற்றின் சிறுவயது படங்களில் இருந்து தற்போது வரையில் எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படங்களை ஒன்று சேர்த்து ஒரு அழகான ஆல்பமாக பரிசளிக்கலாம்.
ஒவ்வொரு படத்தின் கீழும் படத்தை நினைவூட்டும் ஒரு நினைவு செய்தி எழுதினால் அது அந்த பரிசை மறக்க முடியாததாக மாற்றும்.
இந்த தந்தையர் தினத்தில், அவர்களை மகிழ்விப்பதோடு உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தும் விதமான பரிசுகளை வழங்கி நம் அன்பு தந்தையருக்கு நன்றியை வெளிப்படுத்தலாம்.