மார்ச் மாதம் எட்டாம் தேதி உலகெங்கும் சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப் படுகிறது. மகளிர் சக்தி இப்பூவலுகத்திற்கு ஏற்படுத்திய தாக்கத்தை நினைவு கூர்வதற்கும், சாதனைப் பெண்களைப் போற்றுவதற்கும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
முதன் முதலில் 1911ஆம் வருடம் மகளிர் தினம் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்ஸர்லாந்த் ஆகிய இடங்களில் நடந்தேறியது. ஆனால், இதற்கானப் பிள்ளையார் சுழி 1908 ஆம் வருடம் அமெரிக்காவில், நியூயார்க் நகரத்தில்தான் போடப்பட்டது.
அன்றைய தினம் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பிரம்மாண்டமான பேரணி ஒன்றை நியூயார்க்கில் நடத்தினர். அவர்களின் கோரிக்கை நேர்மையான வேலை நேரம், வேலைக்கேற்ற ஊதியம், பெண்களுக்கு வாக்குரிமை. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க சோஷலிஸ்ட் பார்ட்டி 1909ஆம் வருடம் மகளிர் தினம் அறிவித்தது.
1910ஆம் வருடம் வேலைக்குச் செல்லும் மகளிர் சர்வதேசக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய க்ளாரா ஸெட்கின் மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த க்ளாரா ஸெட்கின், மகளிர் உரிமைக்காகப் போராடியவர்.
மகளிர் தினத்திற்கென்று குறிப்பிட்ட நாள் அப்போது வரையறைக்கப் படவில்லை. 1917ஆம் வருடம் ஜார்ஜ் மன்னர் ஆட்சியை எதிர்த்து ரஷியாவில் புரட்சி நடைபெற்றது. அப்போது ரஷிய மகளிர் “ரொட்டி மற்றும் சமாதானம்” கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நடைபெற்றது பிப்ரவரி 23ஆம் தேதி. அப்போது ரஷிய அரசு ஜூலியன் நாட்காட்டியை உபயோகித்து வந்தது. கிரிகோரியன் நாட்காட்டிபடி இந்த தேதி மார்ச் 8ஆம் தேதி. இந்த நாள் மகளிர் தினத்திற்கான நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் 1975ஆம் வருடம் தான் ஐக்கிய நாடுகள் சபை “சர்வதேச மகளிர் தினம்” கொண்டாட்டத்திற்கு அங்கீகாரம் அளித்தது.
இந்த நாள் அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றில் பெண்களின் சாதனைப் பற்றிப் பறைசாற்றவும், இதை மற்றவர்கள், குறிப்பாக இதைப் பற்றி அறியாத பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் நடத்தப்படுகிறது. இதனை நடத்துபவர்கள் சாதனைப் பெண்டிர்களை கௌரவிப்பதுடன், மகளிர் சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்வதற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியாகவும் நடத்துகிறார்கள். இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பாலின சமத்துவம் துரிதப் படுத்தப்படும் என்பது எதிர்பார்ப்பு.
சர்வதேச மகளிர் தினத்திற்கான வண்ணங்கள் – ஊதா, பச்சை, வெள்ளை. ஊதா நிறம் நீதியையும், கண்ணியத்தையும், பச்சை நம்பிக்கையையும், வெள்ளை தூய்மையையும் குறிக்கின்றன.
ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினத்திற்கு, பிரச்சாரக் குறிக்கோள் ஒன்றினை தேர்ந்தெடுப்பார்கள்.. 2022க்கான பிரச்சாரக் குறிக்கோள் “சார்பு சிதைக்க வேண்டும்”. அதாவது ஆண், பெண் இரு பாலாரும் சமம் என்ற நிலை, பாலின பாகுபாடு கூடாது என்ற நிலை வரவேண்டும் என்பது. 2023ஆம் வருடத்திற்கான பிரச்சாரக் குறிக்கோள் “பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில் நுட்பம்.”
மகளிரைப் போற்றுவோம்.