உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி இடம்பிடித்துள்ளார்! ஆசியாவிலிருந்து இந்த இடத்துக்குத் தேர்வான முதல் பணக்காரரும்கூட!
குஜராத்தை சேர்ந்த தொழிலதிபரும், அதானி குழுமங்களின் தலைவருமான கவுதம் அதானி உலகின் முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.பிரான்ஸ் நாட்டை சேர்ந்த,பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளிவிட்டு,அதானி அந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.
ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவர், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைவது இதுவே முதல் முறை.மேலும் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் பெற்றுள்ளார் அதானி.
எப்படி இது சாத்தியமாயிற்று?!
இந்தியாவில் துறைமுகங்கள்,தளவாடங்கள்,சுரங்கம், எரிவாயு,மின் உற்பத்தி, நிலக்கரி,ஹைட்ரஜன் ,பசுமை மின் ஆற்றல்,தரவு மையம் ,பெட்ரோலிய பொருட்கள், சிறப்பு பொருளாதார மண்டலம்,உணவு பொருட்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்பட பல்வேறு துறைகளில் அதானி குழுமம் ஈடுபட்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்தார்.
அதே போன்று உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 10-வது இடத்தில் இருந்த அதானி படிப்படியாக முன்னேறி கடந்த ஜூலை மாதம் மைக்ரோ சாப்டின பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்திற்கு வந்தார். அப்போது 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.
தற்போது பிரபல ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் வெளியிட்ட பட்டியலில் தெரிவித்ததாவது:
இந்திய பணக்காரரான கௌதம் அதானி 137.4 பில்லியன் டாலர் ,இந்திய மதிப்பில் ரூபாய் 10.8 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்திருக்கிறார்.
இந்த உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்தையும் அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ் 2-வது இடத்தையும் அதானி குழுமத்தின் கவுதம் அதானி 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
இந்த தர வரிசைப் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 5-வது இடத்திலும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 11-வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
உலகின் 3-வது பெரிய பணக்காரர் பட்டியலில் ,இடம் பிடித்தாலும், கவுதம் அதானியும், அதானி குழுமமும் பெருமளவில் விமரிசிக்கப் படுகிறது.
கடந்த வாரம் தர மதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் ரேட்டிங் அதானி குழுமத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அதன்படி அதானியின் முதலீடுகள் பெருமளவு வங்கிக் கடன் சார்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது உலகின் 3-வது பெரும் பணக்காரராகத் தேர்ந்தெடுக்கப் பட்டாலும் அதே அளவுக்கு அக்குழுமத்துக்கு கடன் சுமையும் உண்டு என்று தெரிவித்துள்ளது.அதாவது அதானிக்கு ஏதாவதொரு நிறுவனத்தில் வருவாய் கிடைப்பது தாமதமானால் அக்குழுமம் கடன் சுமையில் சிக்கவும் வாய்ப்புள்ளது என்று எச்சரித்திருக்கிறது.
எது எப்படியோ.. கவுதம் அதானி, உலக அளவில் 3-ம் பெரிய பணக்காரராக மாறியுள்ளது, இந்திய பங்குச் சந்தையில் நம்பிக்கையூட்டும் விஷயமாகவேப் பார்க்கப்படுகிறது.