எலிசபெத் – ஒரு சகாப்தம்! 

எலிசபெத் – ஒரு சகாப்தம்! 
Published on

(1926 – 2022)

-லண்டனிலிருந்து கோமதி.

இங்கிலாந்து என்றவுடன் எலிசபெத் மஹாராணி என நம் நினைவோட்டம் செல்லுமளவிற்கு  70 ஆண்டுகளாக நடத்தப்பட்ட அவரது ஏகாதிபத்திய ஆட்சி நேற்றுடன் (செப்டம்பர் 8) முற்றுப்பெற்றது.

பக்கிங்கம் அரண்மனையில் இப்போது பாதி கம்பத்தில் பறந்து கொண்டிருக்கும் கொடியை காணும்பொழுது நம் மனமும் கனக்கிறது. தன்னுடைய இறுதி நாள் வரை  கடமை தவறாது பணியாற்றிய இவர், இங்கிலாந்து நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்தவர் என்னும் பெருமைக்குரியவர். எழுபது ஆண்டு காலம் அரசியாக பணியாற்றிய இவரது தன்னிகரில்லா பணியை சிறப்பித்து, பவள விழா கொண்டாடிய தருணம் இன்னும் நம் கண் முன்னே காட்சியளிக்கிறது.

96 வயது நிரம்பிய மஹாராணி எலிசபெத் II என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இந்த இவரது முழுப்பெயர் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி வின்ட்சர். இவர் நேற்று மதியம் (செப்டம்பர் 8) ஸ்காட்லாந்தில் உள்ள தனது பால்மோரல் கோட்டையில் காலமானார்.

எலிசபெத் மகாராணி 1926-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி டியூக் ஆப் யார்க்  (Duke of York)  மற்றும் டச்செஸ் ஆப் யார்க் (Duchess of York) என்ற பட்டம் பெற்ற அரசர் ஜார்ஜ், மற்றும் ராணி எலிசபெத் ஆகிய அரச தம்பதிக்கு மகளாகப் பிறந்தார்.

அரச குடும்பத்தின் ஒரே வாரிசான இவர், தனது தந்தை காலமான பின்னர் இங்கிலாந்து நாட்டின் ராணியாக 1952 ஆம் ஆண்டு மகுடம் சூட்டினார். அப்பொழுது அவரின் வயது 25! பதவி ஏற்ற இவர் இரண்டாம் உலகப்போரின் பொழுது பல சமுதாய பணிகளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து நாட்டின் அரசி மட்டுமல்லாது காமன் வெல்த் நாடுகளின் தலைவியாகவும்  நியமிக்கப்பட்டார். இவரது ஆட்சி காலத்தில் பல வரலாற்று சிறப்பு மிக்க சம்பவங்கள் அரங்கேறின.

"The Troubles" என்று அழைக்கப்படும் அயர்லாந்தில் ஏற்பட்ட பூசல் முதல் ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறிய Brexit என எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தேறியது. 15 பிரதம மந்திரிகளை இவரது ஆட்சி காலம் கண்டிருக்கிறது.

சார்லஸ் மற்றும் டயானாவுடன் ராணி

இங்கிலாந்து அரச குடும்பம் எல்லோராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு எல்லோராலும் பாராட்டப்படும் அமைப்பாக இருந்தாலும் இதுவும் பல சர்ச்சைகளை எதிர்நோக்கியது என்றே கூறலாம்.

தற்பொழுது அரசராக பதவியேற்ற சார்லஸ், அவரது முன்னாள் மனைவி டயானா  திருமணம், அவர்களின் மகனான ஹாரி தான் அரச குடும்பத்திலிருந்து விலகுவதாக வெளியிட்ட செய்தி.. என பல குழப்பங்கள் நிறைந்து விளங்கியது.

இவை அனைத்தையும் தாண்டி மக்களின் பேரன்பிற்குரிய அரச குடும்பமாக விலகுவதற்கு ராணியின் தனித்துவமும் அவரது பேராற்றலுமே காரணம் எனக் கூறலாம்.

ஹாரி (Prince Harry) 

முதன் முறையாக பொது மேடையில் மக்களின் முன் உரையாற்றிய பொழுது அவர் கூறிய உறுதிமொழி  –

"எனது முழு வாழ்க்கையும் நீண்டதாக இருந்தாலும் சரி, குறுகியதாக இருந்தாலும் சரி, உங்கள் சேவைக்காகவும், நாங்கள் அனைவரும் சேர்ந்திருக்கும் எங்கள் மகத்தான ஏகாதிபத்திய குடும்பத்தின் சேவைக்காகவும் அர்ப்பணிக்கப்படும் என்பதை உங்கள் முன் நான் உறுதியளிக்கிறேன். "

இக்கூற்றிற்கிணங்க அவர் வாழ்ந்து காட்டிச்சென்றுள்ளார் என்றே கூறலாம். 65 வயதில் ஒய்வு பெற்று விடுவார் என அனைவரும் எண்ணியபொழுது மாறாக தன் வாழ்நாள் முழுவதும் மக்களின் சேவைக்காக அர்ப்பணித்து அயராது பணியாற்றிய அரிய பெண்மணி!

இங்கிலாந்து மட்டுமல்லாது உலக மக்கள் அனைவராலும் நேசிக்கப்படுவதற்கு காரணம் – இவரின் ஆளுமை, பாரபட்சம் இல்லா அன்பு, காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் பண்பு என பல காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

சம்பிரதாய முறைப்படி வானொலியில் ஒளிபரப்பாகும் தன் பதவி ஏற்பு விழாவை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என ஆணை பிறப்பித்தார். வின்ஸ்டன் சர்ச்சில் வழக்கத்தை மாற்ற வேண்டாம் என எடுத்துக் கூறியும், விஞ்ஞான வளர்ச்சியால் மக்கள் என்னை நேரில் தொலைக்காட்சியின் மூலம் சந்திக்க இயலும் என வாதிட்டு செயல்படுத்தி காண்பித்தார்.

1976-ல் இணையதளம் மற்றும் கணிப்பொறி வளர்ந்து கொண்டிருந்த வேளையில் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு சாதனை படைத்தவர். இவர் வாழ்ந்த வின்ட்சர் கோட்டை சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக அமைந்தது என்றே கூறலாம்.

எப்பொழுதும் புன்முறுவலுடன், சீரான நேர்த்தியான ஆடை அலங்காரத்துடன் விளங்கும் இவரை காண்பது மனதிற்கு மகிழவே. இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பது கூடுதல் மகிழ்ச்சி, பெருமையும் கூட!!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com