100 ஆண்டு காணும் எழுத்தாளர் அகிலன்; சில நினைவுகள்! 

100 ஆண்டு காணும் எழுத்தாளர் அகிலன்; சில நினைவுகள்! 

– ஜே.வி.நாதன். 

தமிழ் எழுத்தாளர்களில் முதன்முதலாக ஞானபீட விருது பெற்றவர் எழுத்தாளர் அகிலன். அவர் எழுதிய 'சித்திரப் பாவை' என்ற நாவலுக்கு 1975-ல் இந்த விருது கிடைத்தது. இப்போது அகிலன் அவர்களின் நூற்றாண்டு விழா தொடங்கியுள்ளது.  

இச்சமயத்தில் அவருடனான என் நினைவுகளைப் திரும்பிப் பார்க்கிறேன்..  

அகிலன் புதுக்கோட்டைக்கு 18 கி.மீ. தொலைவில் உள்ள பெருங்களூர் கிராமத்தில் 27-6-1922 ல் பிறந்தவர் அகிலன். தந்தை பெயர் வைத்தியலிங்கம். தாயார் பெயர் அமிர்தம்மாள். பெருங்களூர் வைத்தியலிங்கம் என்பதை இனிஷியலாக்கி பி.வி.அகிலாண்டம் என அவர் பெயர் பதிவேடுகளில் இருந்தாலும், சுருக்கமாக,  'அகிலன்' என்பதே அவருக்குப் பிரபலம் சேர்த்த பெயராக விளங்கியது.  

அகிலனின் புகழ்பெற்ற பல நாவல்கள் 'கல்கி' இதழில்தான் வெளிவந்தன. 

அமரர் கல்கி தான் எழுதிய 'பொன்னியின் செல்வன்' ஐந்து பாகங்களின் முடிவில் அவரே எழுதிய வரிகள் இவை: 

''இந்தக் கதையின் ஆசிரியரைக் காட்டிலும் அறிவிலும் ஆற்றலிலும் ஆராய்ச்சியிலும் மிக்கவர்கள் வருங்காலத்தில் சோழ சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட பல மகோன்னதமான நவீனங்களை எழுதி தமிழகத்திற்கு மேலும் மேலும் தொண்டு செய்வார்கள் என்று நம்புகிறேன்.''  

அமரர் கல்கியின் இந்த வரிகளை அடியொற்றி, 'பொன்னியின் செல்வன்' நாவலுக்குப் பிறகு சோழ சாம்ராஜ்யத்தின் வரலாற்றை 'கல்கி' இதழில்   'வேங்கையின் மைந்தன்' என்ற தலைப்பில் சிறப்பாக எழுதி, அதற்கு 'சாகித்ய அகாதமி' விருதையும் பெற்றார் அகிலன்.  

 'எங்கே போகிறோம்?' நாவலுக்கு ராஜா ஸர் அண்ணாமலை செட்டியார் விருது,  'கயல்விழி' நாவலுக்கு தமிழக அரசின் பரிசு, (இது எம்.ஜி.ஆர். நடித்த 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்; திரைப்படமாக வெளிவந்தது.), விஜயநகர சாம்ராஜ்யத்தைப் பின்னணியாக வைத்து எழுதிய 'வெற்றித் திருநகர்' நாவல் – இப்படி புகழ்பெற்ற பல நாவல்களை எழுதிக் குவித்திருந்தாலும், 'பாவை விளக்கு'தான் அவருக்கு மிக அதிகமான புகழைப் பெற்றுத் தந்த நாவல். இந்த நாவல், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படமாகவும் வெளிவந்தது. இவை அனைத்துமே  'கல்கி' இத்ழில் வெளி வந்த நாவல்கள்தாம். 

'பாவை விளக்கு' ஒரு அமர காவியம். கதாநாயகன் தணிகாசலம் ஓர் எழுத்தாளன். அவனை கெளரி, தேவகி, செங்கமலம், உமா ஆகிய நான்கு பெண்கள் அவனை நேசிக்கிறார்கள். முள் மேல் நடப்பது போன்ற ஜாக்கிரதையோடு, தமிழ்ப் பண்புக்குப் பங்கம் நேராத வகையில் சுவாரஸ்யம் குன்றாமல் எழுதப்பட்ட – கையில் எடுத்தால் கீழே வைக்கத் தோன்றாதபடிக்கு – வாசகரை இழுத்துச் செல்லும் நாவல் இது.

இந்தியாவிலேயே இலக்கியத்துக்கு வழங்கப்படும் மிக உயர்வான 'ஞானபீட' விருது தமிழ் மொழியில் இதுவரை அகிலன், ஜெயகாந்தன் என இருவருக்கு  மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அதிலும் இந்த விருதைப் பெற்ற முதல் எழுத்தளர் அகிலனதான். அவரது 'சித்திரப்பாவை' என்ற நாவலுக்கு 1975-ல் இந்த விருது வழங்கப்பட்டது. (ஜெயகாந்தனுக்கு , அவருடைய சீரிய இலக்கியப் பங்களிப்புக்காக 2002-ம் வருடம் 'ஞானபீட' விருது வழங்கப்பட்டது).  

அகிலன் 1938-ல் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'கலைமகள்' நடத்திய நாவல் போட்டியில் இவர் எழுதிய 'பெண்' நாவல் முதல் பரிசு பெற்றது. தொடர்ந்து எழுத்துலகில் அகிலன் கோலோச்சத் தொடங்கினார். 

சுதந்திரப் போராட்டம் ஈர்த்ததால், கல்லூரிப் படிப்பைப் பாதியில் உதறினார். ரெயில்வே மெயில் சர்வீசில் வேலை. பின்னர் அகில இந்திய வானொலியில் பணி…  

அகிலன் அவர்களுக்கு ஓர் வாசகனாக நிறையக் கடிதங்களை நான் எழுதியிருக்கிறேன். உடனுக்குடன் அவர் பதில் எழுதுவார். 1966 முதல் 1982 வரை எனக்கு அவருடன் கடிதப் போக்குவரத்து இருந்தது. அதன்பிறகு,  நேரில் 31-1-1988 ல் அவர் அமரர் ஆகும்வரை பலமுறை சந்தித்திருக்கிறேன் நான்.  

அகிலன் அவர்கள் 27-6-1969 – ல் எனக்கு எழுதிய ஒரு கடிதத்தை என்னால் மறக்க முடியாது.. பிறந்து ஒரு வருடம் கூட முடியாத என் தங்கை விஜயா இறந்தபோது ஆறுதல் கூறி அவர் எழுதிய கடிதம் அது… 

'அன்புமிக்க திரு ஜே.வி.நாதன் அவர்களுக்கு, ஆசி பல. தங்கள் கடிதம் கிடைத்தது. உணர்ச்சிவயப்படும் இயல்புள்ள என்னால், எவ்வளவோ அதைக் கட்டுப்படுத்தப் பழகிவந்தபோதிலும் இம்முறை இயலவில்லை.. கலங்கிப் போய் விட்டேன். விஜயாவின் பிரிவுத் துயரில் பங்கு கேட்கும் என்னாலும் தங்கள் துயரத்தையும் குறைக்க முடியாது என்பது தெரியும். இறைவனின் செயல்கள் நம்மால் உணர்ந்துகொள்ள முடியாதவையாக இருக்கின்றன. நன்றாக மலர்ந்து குலுங்கும் மலர்களையும் அவன் தன் அர்ச்சனைக்கெனக் கொய்து கொள்கிறான். பழுத்து உதிரும் இலைகளையும் கனிகளையும் அவன் ஏற்றுக் கொள்கிறான். ஆனால், சின்னஞ்சிறு அரும்புகளிடம் ஏன் அவனுக்கு இந்த ஆவலோ… தெரியவில்லை! இத்தகைய துயரை நான் அனுபவித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். கொடுத்தவனே தன்னிடம் கொஞ்சி விளையாட அழைத்துக் கொண்டான் என்று நினைத்து ஆறுதல் அடையுங்கள்.  

காலம் என்னும் மருத்துவனும் கடமை என்னும் வழிகாட்டியும் துயர் துடைப்பதில் வல்லவரகள். அவர்கள் தங்களுக்கு அமைதியையும் ஆறுதலையும் வழங்குவார்கள்.

மீண்டும் என் ஆறுதலை அனைவருக்கும் கூறிக் கொள்கிறேன். இந்த என் பிறந்த நாளில், நான் எழுதும் முதற்கடிதத்துக்குச் சிறிதளவாவது துன்பம் துடைக்கும் ஆற்றல் வேண்டுமென இறைவனை இறைஞ்சுகிறேன்.  

– அன்புள்ள, அகிலன்.  

அப்போது கோவையிலிருந்து வெளிவந்த மாதமிருமுறை இதழான 'வான்மதி' யில் 'யாமறிந்த மாந்தரிலே…' என்ற தலைப்பில், பல பிரபலங்களைப் பேட்டி கண்டு எழுதி வந்தேன். அகிலன் அவர்களைப் பேட்டி காணுவதற்கு 1969 நவம்பரில் சென்னை சென்றேன். என்னோடு சென்னை வாசியான பாசி.ராமச்சந்திரன் என்ற எழுத்தாள நண்பர் உடன் வர, லாயிட்ஸ் ரோட்டில் வசித்த அகிலன் அவர்களின் வீட்டுக்குச் சென்றேன். 

அப்போது மாலை வேளை. அகிலன் அவர்கள் எங்கோ வெளியில் சென்றிருந்தார். அங்கு எங்களுக்கு முன்பாக வந்து அகிலனைப் பேட்டி காணுவதற்காகக் காத்திருந்தனர், கேரளாவின் புகழ் பெற்ற பத்திரிகையான 'மாத்ரு பூமி' நிருபரும் புகைப்படக்காரரும். வேறு சிலரும் அவரைச் சந்திக்க வந்து காத்திருந்தார்கள். 

வீட்டிற்குள் அகிலன் நுழைந்ததுமே எல்லோரும் எழுந்து நின்று வணங்கினோம். ''இதில் யார் ஜே.வி.நாதன்?'' என்று முதலில் எங்களைப் பார்த்துக் கேட்டார் அகிலன்.  நான் முன்னே சென்று வணங்கி, ''நான் தான் ஸார்!'' என்றேன். (அப்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. 2-ம் வருடம் படித்துக் கொண்டிருந்த மாணவன் நான்) அவர் சிரித்துக்கொண்டே என் கைகளைப் பிடித்துக் குலுக்கியபடியே, மாத்ரு பூமி குழுவைப் பார்த்து, ''நாங்க பல வருடங்களாகப் பேனா நண்பர்கள். இன்றுதான் முதல்முறையாகச் சந்திக்கிறோம்!'' என்று சொன்னார்.  

வந்தவர்களையெல்லாம் பேசி, பேட்டி கொடுத்து அனுப்பிவிட்டு, என்னிடம் ''இன்னிக்கு என்னோடு நீங்க சாப்பிட்டுத்தான் போகணும்!'' என்றார்.  

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் என் கேள்விகளைக் கேட்டு, பேட்டிக்கான பதில்களைப் பெற்றுக் கொண்டேன். அகிலன் அவர்களுக்குப் பக்கத்தில் நான். இலை போட்டு அறுசுவை விருந்து பரிமாறினார், அகிலனின் மனைவி. ஆனால் அகிலன் வெறும் சப்பாத்தி மட்டுமே சாப்பிட்டார்.  

லைஃப் சைஸ் உருவமாக அவருக்குப் பரிசளிக்கப்பட்ட 'பாவை விளக்கு' உலோகச் சிலை கூடத்தில் நின்றிருக்க, அதன் அருகில் அமர்ந்து அந்த விருந்தை ருசித்தது தனி அனுபவம். காக்கைகளுக்கு தினமும் மதிய உணவு அளிக்கும் அகிலன், சிதம்பரத்திலிருந்து தன்னைத் தேடிவந்த வாசக நண்பருக்கு உணவு உபசரிப்பு நடத்தாமல் அனுப்பி விடுவாரா என்ன? 

அதன்பின் விடைபெற்று சிதம்பரம் திரும்பி, அவர் பேட்டியை வான்மதிக்கு எழுதி அனுப்பி, அவருடைய பேட்டி பிரசுரமாயிற்று.  

'கல்கி' அவர்களின் மைந்தர் ராஜேந்திரன் அவர்களின் மகள் திருமண வரவேற்பு, சென்னை ராதாகிருஷ்ணா சாலையிலுள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்தது.  

இந்த நிகழ்ச்சிக்கு அகிலன், அவர் மகன் திரு கண்ணன், நான் மூவரும் போனோம். அதற்கு முன்னதாக ராஜா அண்ணாமலை மன்றத்தில்  'கல்கி' இதழில் வெளிவந்த் 'தீபம்' நா.பார்த்தசாரதி அவர்களின் 'துளசி மாடம்' நாவலுக்கு ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியார் விருது வழங்கும் விழாவில் அகிலன் உரையாற்ற வேண்டியிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக நான், அகிலன் கண்ணன் இருவரும் கலந்து கொண்டோம். நிகழ்ச்சி முடிந்ததும் அகிலன் அவர்களின் காரில் அவரோடு நாங்கள் சேர்ந்து ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் சென்றோம்.  

அது ஒரு அழகான மாலை நேரம். ரிசப்ஷன் நிகழ்ச்சி துவங்குமுன் எழுத்தாளர்கள் முன்வரிசையில் நாற்காலிகளில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நாரண. துரைக்கண்ணன்,  'குமுதம் வால்கள்' புகழ் ராஜேந்திரகுமார், சு.சமுத்திரம்,  'லக்ஷ்மி' என்ற டாக்டர் திரிபுரசுந்தரி எனப் பல பிரபலங்கள். அவர்களுக்கு என்னை ''சிதம்பரத்தில் வசிக்கும் இளம் எழுத்தாளர்'' என்று பெருந்தன்மையுடன் அறிமுகம் செய்துவைத்தார் அகிலன். 

அன்றைய திருமண வரவேற்பில், மணமக்களுக்கு நாங்கள் கொண்டு போன பரிசுகளைக் கொடுத்தபிறகு விருந்து சாப்பிடச் சென்றோம். 

அங்கு ஒரு விசித்திரக் காட்சி…  

சாதம், காய்கறிகளை அகிலன் கேட்டு வாங்கி இலையில் சேகரித்தாரே தவிர, அவற்றைச் சாப்பிடவில்லை. மூடி வைத்து விட்டு எழுந்து கையலம்பி விட்டார். அதன்பிறகு, கிளம்பினோம். வாசலில் ஒரு கூடையில் தாம்பூலப் பை கொடுக்கப்பட்டது. நாங்கள் வாசலுக்கு வந்தபோது கூடையில் தேங்காய் போட்ட தாம்பூலப் பை  தீர்ந்து விட்டது. அதை எடுத்து வர அங்கிருந்தவர் ஸ்டோர் ரூமுக்குப் போயிருந்தார். நானும் கண்ணனும் பரவாயில்லை என்று கல்யாண மண்டபத்துக்கு வெளியில் வந்தோம். எங்களோடு அகிலன் வரவில்லை. 

திரும்பிப் பார்த்தேன். அவர் தாம்பூலப் பை கொடுக்கும் இடத்தில் பிடிவாதமாக நின்று, அந்தத் தேங்காய்ப் பையை வாங்கிய பிறகே வந்தார்.  ''என்ன இப்படிச் செய்கிறாரே?'' என்று மனதுள் எனக்கு ஒரு மாதிரி இருந்தது.  

திருமண மண்டபத்துக்குச் சற்றுத் தொலைவில் அகிலன் போனதைப் பார்த்தேன். அங்கு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அருகில் குறவர்கள் மண்டபத்துள் விருந்து சாப்பிட்ட எச்சில் இலைகளைப் பிரித்து, அதில் மிச்சம் மீதியிருந்தவற்றைத் தங்களிடம் இருந்த தகர டப்பாவில் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். அதையே அகிலன் சிறிது நேரம் பார்த்து நின்றிருந்தார். கையில் இருந்த தேங்காய் தாம்பூலப் பையை அங்கு விளையாடிய சிறுமி ஒருத்தியை அழைத்துக் கொடுத்தார். பிறகு காருக்குத் திரும்பினார்.  

எனக்குப் பளீரென்று புரிந்தது. தனக்கு வழங்கப்பட்ட உணவைச் சாப்பிடாமல், அதை மூடி வைத்தது, இந்த ஏழைகள் வயிறு நிரம்பத்தானா? 

கடந்த 1988 ஜனவரியில் அகிலன் உடல் நலமில்லாமல் ஒரு தனியார் மருத்துவமனயில் சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது சென்று அவரைப் பார்த்துத் திரும்பினேன். சிகிச்சை பலனின்றி 31-ம் தேதி அவர் அமரர் ஆன செய்திதான் கிடைத்தது.                             

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com