மெட்ராஸ சுத்தி காட்டப் போறேன்… 

மெட்ராஸ சுத்தி காட்டப் போறேன்… 

– மஞ்சுளா சுவாமிநாதன் 

இன்று தமிழகத்தில் 'மெட்ராஸ் டே" என்று சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. 

அதாவது, சென்னை நகரத்தின் ஸ்தாபக நாள் ஆகஸ்ட் 22, 1639 என்று கருதப்படுகிறது. அந்த வகையில் 2004-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மெட்ராஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று St. ஜார்ஜ் கோட்டை இருக்கும் நிலப்பரப்பை, கிழக்கிந்திய கம்பெனி உள்ளூர் நாயக்கர் ஆட்சியாளர்களிடமிருந்து  ஆகஸ்ட் 22-ம் தேதியன்று தான் வாங்கினர்.  

மெட்ராஸ் மியூசிங்ஸின் பதிப்பாளரான மறைந்த எஸ்.முத்தையா மற்றும் ஒரு சில வரலாற்று ஆர்வலர்களால்  முன்னெடுக்கப்பட்ட மெட்ராஸ் தின கொண்டாட்டம் முதலில் சிறிய அளவில் தொடங்கியது. பிறகு அதன் நிகழ்வுகள் மெதுவாக ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டு மெட்ராஸ் வார கொண்டாட்டங்கள் என்று அறியப்பட்டது.

சமீபத்திய ஆண்டுகளில், ஆகஸ்ட் மாதம்  முழுவதும் மெட்ராஸ் தின நிகழ்வுகள் நடைபெற தொடங்கின. சென்னையின் பழைய பாரம்பரிய கட்டடங்களின் உலா, வரலாற்றாசிரியர்களின் பேச்சுக்கள், வினாடி வினாக்கள் என்று பல நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் மாதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நானும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன்.  

ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக கோவிட் சூழ்நிலையால், மெட்ராஸ் டே நிகழ்வுகள் பெரும்பாலும் ஆன்லைன் பேச்சுக்கள் மற்றும் மெய்நிகர் நிகழ்வுகளாக குறைக்கப்பட்டன. இந்த ஆண்டு மெட்ராஸ் தினத்தை எனது குடும்பத்துடன்  கொண்டாட முடிவு செய்தேன்.

மெரினா கடற்கரை ஓரம் பழைய மெட்ராஸின் அடையாளமாக விளங்கும் சில பாரம்பரிய  கட்டடங்களை குறித்துக்கொண்டு அந்த இடங்களுக்குச் சென்றோம். எனது குழந்தைகள் இந்த பயணத்தை மிகவும் ரசித்தார்கள். அவர்கள் மெட்ராஸ் வரலாற்றில் மூழ்கியது மட்டுமல்லாமல், அவர்கள் ஆர்வத்துடன் எங்கள் சிறிய பயணத்திற்கு உயிர் சேர்த்தனர். 

கலங்கரை விளக்கம் 

சிகப்பு  நிறத்தில் உயரமாக அமைந்திருக்கும் கலங்கரை விளக்கம் மெரினா கடற்கரையில் பிரபலமான அடையாளமாகும். இது மதராசின் பழைய கலங்கரை விளக்கத்திற்கு பதிலாக 1976-ல் கட்டப்பட்டது. 1841-ல் அமைக்கப்பட்ட பழைய கலங்கரை விளக்கத்தை இன்றும்  சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காணலாம். 

விவேகானந்தர் இல்லம் 

முன்பு ஐஸ் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட  விவேகானந்தா இல்லம் இப்போது மறுவடிவமைப்பு செய்யப்பட்டாலும், அசல் அமைப்பு பெரும்பாலும் மாறாமல் உள்ளது. கொல்கத்தா மற்றும் மும்பையில் இருந்த இதேபோன்ற பனிக்கட்டி சேமிப்பதற்காக ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கட்டடங்கள்  இடிக்கப்பட்ட நிலையில் இந்த ஒன்று மட்டுமே இந்தியாவில் எஞ்சியுள்ளது.  

இந்த கட்டிடம் 1842-ல் அமெரிக்காவிலிருந்து ஒரு வர்த்தகப் பொருளாக கொண்டு வரப்பட்ட பனியை சேமிப்பதற்காக கட்டப்பட்டது. இது 1880-களில் பனியை சேமிக்க பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1897-ம் ஆண்டு, சுவாமி விவேகானந்தர்  இந்த கட்டடத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார்.

இகட்டடம் இப்போது ராமகிருஷ்ணா மிஷனால் நிர்வகிக்கப்படுகிறது. பழைய பனி மாளிகை மற்றும் சுவாமி விவேகானந்தரின் போதனைகள் இரண்டையும் காட்சிப்படுத்தும் கண்காட்சியை இங்கே காணலாம். 

மெட்ராஸ் பல்கலைக்கழகம் 

சுமார் 164 ஆண்டுகள் பழமையான மெட்ராஸ் பல்கலைக்கழகம் 1857-ல் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது. இன்றும் இந்த நிறுவனம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறது. படத்தில் நீங்கள் பார்க்கும் பல்கலைக்கழகத்தின் செனட் கட்டிடம் இந்தோ-சராசெனிக் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக  கருதப்படுகிறது.  

செயின்ட் ஜார்ஜ் கோட்டை 

இந்த கோட்டையில் தற்போது தமிழ்நாடு சட்டமன்றம் மற்றும் பிற அதிகாரப்பூர்வ கட்டடங்கள் உள்ளன. இங்குள்ள கொடிமரம் 150 அடி உயரம் கொண்டது. இது தேக்கு மரத்தால் ஆனது மற்றும் நாட்டிலேயே மிக உயரமான ஒன்றாகும்.

1678-80 க்கு இடையில் கட்டப்பட்ட புனித மேரி தேவாலயம் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் உள்ள மற்றொரு முக்கியமான கட்டடமாகும். இந்த கோட்டை சென்னையின் மையமாக அமைந்ததால், மற்ற அனைத்து முக்கிய கட்டிடங்களும் கோட்டையைச் சுற்றி ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டன. 

பொது அஞ்சல் அலுவலகம் 

கடற்கரை ரயில் நிலையத்திற்கு எதிரே 1884-ம் ஆண்டு இந்த பொது தபால் நிலையம் கட்டப்பட்டது. இந்த கட்டடம் அமைந்துள்ள இடத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 600 001. எனவே சென்னையின் பாரிமுனை பகுதி தான்  அதிகாரப்பூர்வமாக சென்னை – 1 என்று அறியப்படுகிறது. 

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் 

உயர் நீதிமன்ற வளாகம் 1862-ல் கட்டப்பட்டது. பெரும்பாலான கட்டடங்களில் 'மெட்ராஸ்' என்ற வார்த்தை நீக்கப்பட்டு சென்னை என்று மாறிய நிலையில், உயர்நீதிமன்றமும், பல்கலைக்கழகமும் மெட்ராஸைத் தக்கவைத்துக் கொண்டன.  

சென்ட்ரல் ஸ்டேஷன் 

அனைத்து இந்தியத் திரைப்படங்களிலும் சென்னையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முத்திரை கட்டடம் நினைவிருக்கிறதா? அது சென்ட்ரல் ரயில் நிலையம் தான்.1873–ல் திறக்கப்பட்ட இந்த பிரதான ரயில் நிலையம், சமீபத்தில் புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் என்று பெயர் மாற்றப்பட்டது.  

ரிப்பன் கட்டடம் 

சென்ட்ரல் ஸ்டேஷன் அருகில் உள்ள இந்த கம்பீரமான கட்டிடம் சென்னை மாநகராட்சியின் தலைமையகம் ஆகும். இந்தக் கட்டடம் 1913-ல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்தியாவின் முன்னாள் வைஸ்ராய் லார்ட் ரிப்பனின் நினைவாக பெயரிடப்பட்டது.

கட்டிடத்தின் உள்ளே ரிப்பன் சிலை ஒன்று உள்ளது. என் குழந்தைப் பருவத்தில் ஒருமுறை எனது  தாத்தா என்னை இங்கே அழைத்து வந்தார். அப்போது அகலமான படிகள், உயரமான மேற்கூரை, பார்த்வுடன் ஈர்க்கும் மர வேலைப்பாடுகள்  கொண்ட இந்த பிரமாண்டமான கட்டிடத்தின் உள்ளே நான் திகைத்து நின்ற நினைவு இன்றும் எனது மனதில் நீங்காது உள்ளது. 

கடந்த 1996 –ம் ஆண்டு தமிழ்நாடு அரசு இந்த நகரத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக சென்னை என மாற்றியது குறிப்பிடத் தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com