நெஞ்சை அள்ளும் வயல்வெளி சூழ்ந்த தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகே சத்திரம் கருப்பூர் என்ற இடத்தில் இருக்கிறது சோழா ஆர்ட்ஸ் அகாடமி. நவராத்திரி கொலுவில் வைக்கும் வகையிலான கண் கவரும் காகிதக்கூழ் பொம்மைகளை இங்கு தயார் செய்கிறார்கள். நூறு வருடங்களுக்கு மேலாக பரம்பரையாக இந்த பொம்மைகளை இங்கு தயார் செய்து வருகிறார்கள்.
சோழா ஆர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் ரமேஷ் குமார். இப்போது இவர் மகனும் ஐடி துறையில் இருந்து கொண்டு தந்தைக்கு உதவியாக இந்த பொம்மை தயாரிப்பிற்கும் விற்பனைக்கும் உதவி வருகிறார். இணையதளத்தில் இவரது படைப்புகள் மிகப் பிரபலம்.
நவராத்திரி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சோழா ஆர்ட்ஸ் அகாடமிக்கு ஒரு விசிட் அடித்தோம்.. இந்த சீசனுக்கு இங்கு என்ன ஸ்பெஷாலிடி?!
பொதுவாக ,பண்ருட்டி ,காஞ்சிபுரம் மதுரை போன்ற இடங்களிலிருந்து நவராத்திரி சமயத்தில் பளபளவென்று புது மெருகுடன் பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்வதை பார்த்திருக்கிறோம்.
ஆனால் சோழா ஆர்ட்ஸ் அகாடமியில் பிரத்தியேகமாக நாம் ஆர்டர் கொடுத்து பொம்மைகளை தயாரித்து வாங்கிக் கொள்ளலாம்.
''வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாக (customised) அவர்கள் விரும்பும் வடிவத்தில் ,நிறங்களில் பொம்மைகள் தயாரித்து தருகிறோம். நவராத்திரி நேரம் முடிந்த பின்னும், அந்த பொம்மைகளை பரணில் போட்டு வைக்க மனமில்லாமல் நாம் ஷோகேஸில் வைப்பதற்கேற்ற வகையில் செய்துத் தரச் சொல்லி பலர் கேட்கிறார்கள்'' என்கிறார் ரமேஷ் குமார்.
நவராத்திரிக்குப் பிறகும்கூட இந்தக் கலைக்கூடம் பிசிதான்! கணினியின் மூலமாக படங்களை தரவிறக்கம் செய்து அதன் அடிப்படையில் பொம்மைகளை உருவாக்கித் தரச் சொல்லி அயல்நாடுகள் மற்றும் நிரந்தர வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்கள் குவிகின்றன.
குறிப்பாக ராஜா ரவிவர்மா வரைந்த ஓவியங்களுக்குக்கூட பொம்மை வடிவத்தில் உயிரூட்டுகிறார்கள். பொம்மைகளை பக்காவாக பேக் செய்து அயல் நாட்டிற்கும் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நவராத்திரி சீசனுக்கு புதிதாக பொம்மை வாங்க விரும்புபவர்கள் சோழா ஆர்ட்ஸ் அகாடமியை ஒரு தரம் பார்த்துவிட்டுத் தான் வாருங்களேன். ஒரு சின்ன பொம்மையாவது உங்கள் பையில் இடம் பிடித்திருக்கும்.