ஒரே நாளில் பன்னிரு கோல தரிசனத்தில் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன்!

ஒரே நாளில் பன்னிரு கோல தரிசனத்தில் குருவாயூர்
ஸ்ரீ கிருஷ்ணன்!

குரு மற்றும் வாயு பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் குருவாயூரில் குழந்தை வடிவில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கிருஷ்ணன். பூலோக வைகுண்டமாகத் திகழும் இத்தலத்தில் அருளும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நின்ற திருக்கோலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் தெய்வமாகத் திகழ்கிறார். குழந்தை சொரூபராக விளங்கும் இந்த ஸ்ரீ கிருஷ்ண மூர்த்தியை வணங்கினால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூம்மூர்த்திகளின் அனுக்கிரகத்தையும் பெறலாம் என்பது ஐதீகம்.

இத்தல ஸ்ரீ கிருஷ்ண பகவான் நான்கு திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை மலரை ஏந்திக் காட்சி தருகிறார். இப்பெருமானை உன்னிக்கண்ணன், உன்னிக்கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், குருவாயூரப்பன் என்றெல்லாம் அழைத்து பக்தர்கள் பரவசமடைகின்றனர். எத்தனை தொலைவிலிருந்து தரிசித்தாலும் பிரகாசமான வடிவில் தலையில் கிரீடம், கழுத்தில் மரகதம், இடுப்பில் சிவப்புப் பட்டு கௌபீனம் உடுத்தி பக்தர்களுக்கு அருட்காட்சி தருகிறான் குழந்தை குருவாயூரப்பன்.

இந்திய அளவில் மிகப்பெரிய வைணவத் தலமாகப் போற்றப்படும் இக்கோயில் கிருஷ்ணனுக்கு நெய்யப்பம், இலை அடை, பால் பிரதமன் போன்றவை நிவேதனமாகப் படைக்கப்படுகின்றன. குழந்தை வடிவில் தெய்வமே இக்கோயிலில் அருள்பாலிப்பதால் தங்களது அன்புக் குழந்தைகளுக்கு முதல் சோறூட்டும் வைபவமும் இக்கோயிலில் பலராலும் நிகழ்த்தப்படுகிறது. ஸ்ரீ குருவாயூரப்பனை வேண்டிக்கொண்டு திருமணம் கைகூடியவர்கள் இத்தலத்திலேயே தங்களது திருமண வைபவத்தையும் நடத்தி மகிழ்கின்றனர். இதனால் அவர்களுக்கு நீண்ட வாழ்நாளும், தீர்க்க சுமங்கலித்துவ பாக்கியமும் கிடைப்பதாக நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டி அது நிறைவேறப் பெற்றவர்கள் துலாபார நேர்த்திக்கடன் நிறைவேற்றி வழிபடுவது இக்கோயிலில் அடிக்கடி நிகழ்வதாகும்.

ஆயிரம் ரூபமெடுத்து அன்பர்களைக் காத்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணன், இக்கோயிலில் குழந்தை வடிவ குருவாயூரப்பனாக ஒரே நாளில் பன்னிரண்டு திருக்கோலங்களில் பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள்பாலிக்கிறார்.

*அதிகாலையில் நிர்மால்ய கோலத்தில் விஸ்வரூப தரிசனம் தரும் இப்பெருமானை கண்டு வழிபட்டால் சகல பாவங்களும் தீரும்.

*தொடர்ந்து நடைபெறும் எண்ணெய் அபிஷேக தரிசனத்தைக் கண்டால், நாராயண பட்டத்ரியின் நோயை நீக்கியது போல, சகல நோய் போக்கும் தன்வந்திரியாக அருள்பாலிக்கிறார்.

*அடுத்து, வகச்சார்த்து நேர தரிசனத்தின்போது கோகுலக் கண்ணனாகக் காட்சி தந்து பக்தர்களை ஆட்கொள்கிறார்.

*அடுத்து நிகழும் சங்காபிஷேகத்தின்போது சந்தானக் கோபாலனாக அருட்காட்சி தருகிறார்.

*அதைத் தொடர்ந்து செய்யப்படும் அலங்காரத்தின்போது உன்னிக் கண்ணனாக (குழந்தை கிருஷ்ணன்) காட்சி தந்து அருளுகின்றார்.

*அதையடுத்துச் செய்யப்படும் அபிஷேகத்தின்போது யசோதை வளர்த்த குழந்தைக் கிருஷ்ணனாகக் காட்சி தருகிறார்.

*அடுத்ததாகச் செய்யப்படும் நவகாபிஷேகத்தின்போது வனமாலி கோலத்தில் பக்தர்களுக்கு அருள் செய்கிறார். இந்த தரிசனம் காணும் பக்தர்களின் கண் சம்பந்தமான அனைத்து நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.

*அடுத்து, நண்பகலில் அனைத்து ஆபரணங்களையும் அணிந்து சர்வாலங்காரத்தோடு பக்தர்களுக்கு அருள்பாக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். இந்த தரிசனம் பக்தர்களின் அறிவை வளர்க்கும் அற்புதத் திருக்கோலமாகும்.

*தொடர்ந்து, சந்தியா வேளையில் அனைவரையும் அரவணைக்கும் சர்வ மங்கலத் தாயாக பக்தர்களுக்குக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.

*அதையடுத்து நடைபெறும் சந்தியா தீப ஆராதனையின்போது மோகன ரூபனாகக் காட்சி தந்து அருளுகின்றார்.

*அடுத்து, பிருந்தாவனத்தில் காட்சி தந்த பூ மாலைகள் அணிந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருட் காட்சி தருகிறார்.

*இறுதியாக, அன்றையப் பொழுதின் கடைசி அலங்கார ரூபமாக இரவில் திரிபுகஷயன கோலத்தில் அனைவருக்கும் மோட்சத்தை நல்கும் திருக்கோலத்தில் பகவான் குருவாயூரப்பன் காட்சி தந்து அருள் செய்கிறார்.

எந்தக் கோலத்தில் தரிசித்தாலும் அருளை வாரி வழங்கும் குழந்தை வடிவ ஸ்ரீ கிருஷ்ணனை, அதிகாலையில் விஸ்வரூப கோல தரிசனத்தில் தரிசிக்கவே பெரும்பாலான பக்தர்கள் கூட்டம் இக்கோயிலில் அலைமோதுகிறது. இதுவே பக்தர்களுக்குப் பேரானந்தத்தைத் தரும் திருக்கோலமாகத் திகழ்கிறது. நாராயண பட்டத்ரியின் கடும் நோய் தீர்த்த நாராயணீய பாராயணத்தைச் செய்து வழிபட்டு ஸ்ரீ குருவாயூரப்பனின் பேரருளைப் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com