தமிழ்த் திரையுலக வரலாற்றில் உணர்ச்சிபூர்வமான நடிப்புக்கும், அசாத்தியமான வசன உச்சரிப்புகளுக்கும் சொந்தக்காரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிகர் சிவாஜி கணேசன் விழுப்புரம் மாவட்டத்தில் அக்டோபர் 1, 1927 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது உண்மையான பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன். நடிப்பு மீது அவருக்கு இருந்த ஆர்வத்தினால் தனது ஒன்பதாவது வயதிலேயே வீட்டை விட்டு வந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அவர் நடித்த இந்து ராஜ்ஜியம் என்ற நாடகத்தில் அவர் நடித்த பேரரசர் சிவாஜி கதாபாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நாடகத்தைப் பார்த்த தந்தை பெரியார், அவரை பாராட்டியதோடு சிவாஜி கணேசன் என்று பெயரிட்டு அழைத்தார். பின்னர், அதுவே அவரது புனைபெயராகி நிலைத்து நிற்கிறது.
பராசக்தி தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த நடிகர் சிவாஜி கணேசன் முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தி திரைப்படங்கள், ஒன்பது தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஓரு மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
அவரது நடிப்புத் திறமையும் தெளிவான மற்றும் உணர்ச்சிபூர்வமான உச்சரிப்பும், குரல் வளமும் நடிகர் திலகம் என்றும் நடிப்புச் சக்கரவர்த்தி என்றும் மக்களாலும் திரையுலகினாராலும் அழைக்கப்பட்டார்.
மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் இவர் பேசிய வீர வசனங்களுக்கு புகழ்பெற்றவை. இவரது உணர்வுபூர்வமான நடிப்புத்த திறனை வெளிப்படுத்தும் திரைப்படங்களாக பாசமலர், வசந்த மாளிகை போன்றவற்றைக் கூறலாம்.
ஒரு பெரிய திரைப்பட நடிகராக அவரை நிலைநிறுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல், பெரிய அரசியல் வாதியாகவும் திகழ்ந்தவர். 1955 ல் திராவிடக் கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர், 1961ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1982ல் நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பின், கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1987ல் கட்சியில் இருந்து விளகினார். தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். பெரும் நடிகராக இருந்தாலும், அரசியலில் இவருக்கு போதிய செல்வாக்கு கிடைக்கவில்லை. எனவே, அவரது இறுதி காலத்தில் அரசியலில் இருந்து விலகினார்.
பத்மஸ்ரீ விருது, பத்மஷன் விருது, செவாலியே விருது மற்றும் தாதா சாகேப் பால்கே விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
அதுபோக, ஆப்பிரிக்க ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றுள்ளார்.
அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, நயாகரா மாநகரின் ஒருநாள் நகரத் தந்தை என கௌவிரக்கப்பட்டார்.
தென்னிந்திய திரைப்பட உலகில் சிறந்த நடிகராக திகழ்ந்த நடிகர் சிவாஜி கணேசன் ஜூலை 21, 2001 ஆம் ஆண்டு தனது 74 வைத்து வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.
கல்கி 25-08 -1974 தேதியிட்ட இதழில் நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் சிறப்புக் கட்டுரை வெளியானது. அக்கட்டுரையின் பக்கங்களைக் கொடுத்துள்ளோம். படித்து மகிழுங்கள்.