எழுத்தாளர் சுஜாதா...
எழுத்தாளர் சுஜாதா...

அறிவியலை ஊடகம் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர்!

துப்பறியும் நாவல் துறையில் புதிய உத்தியை கையாண்டவர்!

நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை ஈடுபாடு கொண்டு எளிய முறையில் புதிய நடையில் மறுஉருவாக்கம் செய்தவர்! 

அறிவியல் நாவலின் முதன்மை முன்னோடி! 

ஹைக்கூ கவிதைகளை எளிதாக விளங்குபவர்!!

இப்படி பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் எழுத்தாளர் சுஜாதாவுக்கு அன்பான 89வது பிறந்த நாள் வாழ்த்துகள். 

பள்ளிப்பருவத்தில் அவரது 'என் இனிய இயந்திரா' (சரித்திரம் படைத்த) அறிவியல் புதினத்தை பிரபல வார இதழில் தொடராக வந்ததைப் படித்தபோது அவரின் எழுத்தின் மீது காதல் வந்தது.  குறிப்பாக 'ஜீனோவை' யாராலும் மறக்க முடியாது.  இந்த நாவலின் தொடர்ச்சியாக, மீண்டும் ஜீனோ' வந்தபோது கல்லூரியில் காலடி எடுத்து வைத்திருந்தேன். புத்தகம் எப்போது வரும் என காத்திருந்து, படித்து, விமர்சித்த காலம் அது.

'ஏறக்குறைய சொர்க்கம்'  சொர்க்கத்தைப் பற்றி பேசாதவர்கள் நம்மில் யாரும் இல்லை.  வாழும்போதே சொர்க்கத்தை அனுபவித்தால்... பார்க்க நேர்ந்தால்... அதைவிட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும்?

இப்படி யோசித்ததன் விளைவே இந்தப் பதிவு. காதலிக்கும் / காதலித்து திருமணம் செய்ய/ (செய்திருக்கும்) திருமண வெள்ளிவிழா/ பொன்விழாவை நெருங்கிக் கொண்டிருக்கும் தம்பதிகள்... இப்படி அனைவருக்குமான சொர்க்கம் அவர்கள் கையிலேதான்! 

நம் சினிமாக்களும் கதைகளும் சேர்ந்து 'ஐ லவ் யூ' என்பதை ஒரு மோசமான கெட்ட வார்த்தை போல் மாற்றி விட்டன.  உண்மையில் நம்முடைய நேசத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான விஷயமது.  அதை முடிந்தபோதெல்லாம் சொல்ல வேண்டும். 

'ஐ லவ் யூ' சொல்ல கூச்சமா?!  நோ ப்ராப்ளம் உங்களுடைய துணையை எப்படி நேசிக்கிறீர்கள் என்பதை வேறு விதங்களில் சொல்லலாம். 'இந்த ட்ரஸ் உனக்கு அழகாக இருக்கிறது', 'இன்னைக்கு சமையல் பிரமாதம்', அந்த வேலைய கரெக்டா ஞாபகம் வைத்திருந்து செஞ்சு முடிச்சிட்டீங்களே!" சமத்து!! இப்படியெல்லாம் சொல்லலாம்.

இதையெல்லாம் சொல்ல கூச்சமா..?! பேப்பரை எடுங்கள். எழுதுங்கள் ஒரு கடிதத்தை…

உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்கள் முன்னே  கணவன் அல்லது மனைவியைக் குறிப்பிட்டு பாராட்டுங்கள். 'அம்மா போல ஒரு விஷயத்தைச் சிறப்பாகச் செய்ய கற்றுக்கொள்', 'அப்பா மாதிரி ஸ்மார்ட்டா இருக்கப் பழகிக்கொள்' என்றெல்லாம். தினமும் நீங்கள் இருவரும் பேசுவதற்காக என்று சில மணி நேரங்களை ஒதுக்குங்கள்... அந்த நேரம் நீங்கள் இருவரும் பேசுவதற்காக மட்டுமே! அப்பொழுது டிவியை ஓட விடாதீங்க... புத்தகத்தைப் படிக்காதீங்க... செல்போனை நோண்டாதீங்க.. காதுகளில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு சினிமா பாட்டுக் கேட்காதீங்க.. சமையலறையில் வேலை இருக்கிறது என ஓடாதீங்க... ஒரு நாளைக்கு சில நிமிடங்கள்  உங்கள் கவனத்தை முழுமையாகப் பேச்சில் செலுத்துங்கள்.

இப்படி தனிமையில் பேசும்பொழுது வார்த்தைகளைவிட உணர்வுகள்தான் முக்கியம். உங்கள் கணவர் அல்லது மனைவி வாயை திறந்து சொல்லாத விஷயங்களைக்கூட கூர்ந்து கவனித்துப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.  அவ்வப்பொழுது சின்ன சின்னதாய் ஏதாவது பரிசளியுங்கள். காதல் என்பது வெறும் பேச்சுப், பரிசுகளோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை .

கணவரும் மனைவியும் வழக்கமாக ஒருவர் செய்யும் வேலையை மற்றவர் ஏற்றுக்கொண்டு அதன் மூலம் அவருக்கு நேரத்தை மிச்சப்படுத்தி தரலாம்.  அடுத்தது மிக முக்கியமானது  உணர்வுகளை எல்லாம்விட தொடுதல் ஏற்படுத்தும் நெருக்கம் மிகவும் தீவிரமானது. சாதாரணமாக தெருவில் நடந்து செல்லும்போது கைகளைக் கோர்த்துக்கொள்ளுதல், அவ்வப்போது சின்னச் சின்ன செல்ல அணைப்புகள், எதிர்பார்க்காத தருணத்தில் முத்தமிடுதல்  இதெல்லாம் சின்னப் பிள்ளைகளின் விளையாட்டு என்று நினைத்தால் நீங்கள் சொர்க்கத்தை அடைவது மிகவும் கடினம் பாஸ்…

இப்படி சில அழகான விஷயங்களை வாழ்க்கையில் பின்பற்ற, கண்டிப்பாக வாழும்போதே  சொர்க்கத்தைப் பார்த்துவிடுவீர்கள்.  நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏறக்குறைய சொர்க்கத்தைப் பார்க்க சின்னச்சின்ன  விஷயங்களைத்தான் நான்  பட்டியலிட்டுள்ளேன். இப்படித்தான் பேச வேண்டும்/ நடக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.

அவரவர் பாணியில் சந்தோஷத்தைத் தொடருங்கள். மொத்தத்தில் சொர்க்கத்தை வாழும்போதே பார்த்துவிடுங்கள். அழகான வானவில் வாழ்த்துகள். (இது தம்பதிகளுக்கு மட்டும் இல்லை வீட்டில் உள்ள அனைத்து உறவுகளுக்கும் பொருந்தக்கூடியது).

logo
Kalki Online
kalkionline.com