100 மணிநேரம் சமைத்து உலக சாதனைப்படைத்த ஹில்டா பாசி!

ஹில்டா பாசி
ஹில்டா பாசி

நைஜீரியாவைச்  சேர்ந்த பெண் சமையல் கலைஞரான ஹில்டா பாசி தொடர்ந்து 100 மணிநேரம் சமைத்து உலக சாதனைப்படைத்துள்ளார்.

27 வயதான ஹில்டா பாசி நைஜீரியாவின் உணவு வகைகளைச் சமைக்கும் சிறந்த சமையல் கலைஞர்களில் ஒருவர், உணவு விடுதி உரிமையாளர், பேச்சாளர், நாடக கலைஞர் எனப் பன்முக திறமைகளைக் கொண்டவர். இந்நிலையில்தான், தொடர்ந்து 100 மணிநேரம் சமைத்து உலக சாதனைப்படைக்கும் முயற்சியில் இறங்கினார் அவர்.தொடர்ந்து 100 மணிநேரம் சமைத்து உலக சாதனைப்படைப்பது என்பது கேட்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், உண்மையில் அது மிகக் கடினமான விஷயமாகும்.  வெயில் கொளுத்தும் இந்த கோடைக் காலத்தில் நம்முடைய வீடுகளில் கூட ஒரு மணிநேரத்திற்கு மேல் சமையல் அறையில் இருப்பது என்பது எரியும் அடுப்பின்மேல் நாமே ஏறி உட்கார்ந்துகொள்வதற்குச் சமமாக உள்ளது.

இதுபோன்ற கடுமையான கோடை காலத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள நைஜீரியா போன்ற நாட்டில், 100 மணிநேரம் தொடர்ச்சியாக சமைத்து உலக சாதனை படைக்கவேண்டும் என்ற ஹில்டா பாசியின் இலக்கை எண்ணி பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் உள்ளது.ஹில்டா பாசி தன்னுடைய சாதனை பயணத்தை கடந்த மே 11ம் தேதி லாகோஸ் நகரில் உள்ள பிரத்தியேகமான சமையல் அறையில் தொடங்கினார். அவர் பெரும்பாலும் ஆப்பிரிக்காவின் மிகவும் பிரபலமான ஜோலோப் ரைஸ், அகாரா மற்றும் சில வெளிநாட்டு உணவுகளையும் சமைத்தார். ஒவ்வொரு ஒரு மணிநேரமும் ஐந்து நிமிடங்கள் மட்டும் இடைவெளி எடுத்துக்கொண்டார் ஹில்டா பாசி. அதேபோல், தொடர்ந்து 12 மணிநேரம் சமைத்து முடித்த பிறகு, குளிப்பது, மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது மற்றும் ஓய்வெடுப்பது என தனக்கான விஷயங்களை மேற்கொண்டார்.

இவ்வாறு 100 மணிநேரம் சமைத்து உலக சாதனை படைக்க வேண்டும் என்ற இலக்கை கடந்த மே 15ம் தேதி நிறைவேற்றினார் ஹில்டா பாசி. ஆனால், அவரின் இந்த சாதனை அப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஹில்டா பாசியின் சாதனை குறித்து ஆய்வு மேற்கொண்டனர் கின்னஸ் சாதனை புத்தக குழுவினர்.  ஹில்டா பாசி 100 மணிநேரம் தொடர்ச்சியாகச் சமைப்பதற்கு என்ன மாதிரியான ஏற்பாடுகளைச் செய்திருந்தார், எவ்வளவு நேரம் அவர் ஓய்வு எடுத்துக்கொண்டார் மற்றும் 100 மணிநேர தொடர் சமையலின்போது எத்தனை வகையான உணவுகளை ஹில்டா பாசி சமைத்தார் உள்ளிட்ட விஷயங்களை கின்னஸ் சாதனை குழுவினர் கணக்கில் எடுத்துக்கொண்டனர்.

இதுபோன்ற பல கட்ட சோதனைகளுக்கு பிறகு தொடர்ச்சியாக 100 மணிநேரம் சமைத்து உலக சாதனை படைத்தவர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார் ஹில்டா பாசி. இதுதொடர்பாக பேசிய கின்னஸ் சாதனை குழுவினர், ஹில்டா பாசி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பதற்கான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்திசெய்துள்ளார்” என்றனர்.  இதற்கு முன்பு இந்தியச் சமையல் கலைஞரான, லதா டாண்டன் தொடர்ச்சியாக 87 மணிநேரம் 45 நிமிடங்கள் சமைத்து சாதனைப்படைத்திருந்தார். தற்போது இந்தியரின் சாதனையை நைஜீரியா பெண்ணான ஹில்டா பாசி முறியடித்துள்ளார்.100 மணிநேரம் தொடர்ச்சியாகச் சமைத்து உலக சாதனைப்படைத்துள்ள ஹில்டா பாசி, மொத்தம் 110 வகையான உணவுகளைச் சமைத்திருந்தார். அதில் 55 வகையான சமையல் வகைகளைப் பயன்படுத்தி  110 உணவு வகைகளை அவர் சமைத்துள்ளார். தன்னுடைய சாதனை குறித்து பேசிய அவர், நைஜீரிய இளைஞர்கள் எவ்வளவு கடினமான உழைப்பாளிகள் மற்றும் உறுதியானவர்கள் என்பதை உலகிற்குக் காட்டவும், ஆப்பிரிக்க சமூகத்தில் மிகவும் பின்தங்கியவர்களாக உள்ள பெண்கள் எந்தளவுக்கு உறுதியானவர்கள் என்பதை வெளிப்படுத்த இந்த சாதனையை மேற்கொண்டதாகவும், மேலும், நைஜீரிய உணவு வகைகளைப் பற்றி உலக நாடுகள் அறிந்துகொள்ள தன்னுடைய சாதனை உதவியாக இருக்கும் என நம்புவதாக  ஹில்டா பாசி தெரிவித்தார்.

இதனையடுத்து அவருக்கு நைஜீரியா குடியரசுத் தலைவர் முகம்மது புகாரி தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஹில்டா பாசியின் உலக சாதனை மூலம் தற்போது அவர் ஆப்பிரிக்கத் தேசத்தில் மிகவும் பிரபலமான நபராக மாறியுள்ளார். லாகோஸ் நகரில் ஹில்டா பாசி சமைக்கத் தொடங்கிய ஒவ்வொரு நாளும் அவரை உற்சாகப்படுத்தப் பலர் அப்பகுதியில் குவிந்தனர். மேலும், ஹில்டா பாசி சமையல் நிகழ்ச்சிகள் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதனை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.

கீழே தாழ்த்தி பிடித்தாலும் மேலே நோக்கி எரியுமாம் நெருப்பு எனும் உவமையைப் போல் அடுப்படி மட்டும்தான் பெண்களுக்கு என்ற சமூகம் நிர்ப்பந்தித்தாலும் அதிலும் சாதனைப்படைப்போம் என்பதைச் செயல் வெளிப்படுத்தியுள்ள ஹில்டா பாசி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com