
சர்வதேச நுண் தன்னார்வ தொண்டு தினத்தின் வரலாறு.
சர்வதேச நுண் தன்னார்வத்தொண்டு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் பிரபலமாகி வரும் ஒரு கருத்தாக்கம்தான் மைக்ரோ வாலன்டியரிங் எனப்படும் நுண் தன்னார்வத் தொண்டு. இந்த வார்த்தை முதல் முதலில் இங்கிலாந்தில் 2006 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது.
சில மாதங்களுக்குப் பிறகு மைக்ரோ வாலன்டரியோஸ் என்ற வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 2008 ஆம் ஆண்டில் கூகுள் ஆண்ட்ராய்டு போட்டிக்கான ஒரு பயன்பாடாக சமர்ப்பிக்கப்பட்டபோது இந்தக் கருத்து சைபர் உலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போதிருந்து நுண் தன்னார்வத் தொண்டு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. சராசரி மக்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரு சில ஓய்வு தருணங்களை செலவழித்து அவர்களை சுற்றியுள்ள மனிதர்களுக்கு இடையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த ஊக்குவிக்கும் ஒரு உலகளாவிய சக்தியின் உந்துதலை பிரதிபலிக்கிறது.
நுண்தொண்டு சேவை என்றால் என்ன?
நுண் தொண்டு சேவை என்பது குறைந்தபட்ச நேரமும் அர்ப்பணிப்பும் தேவைப்படும், ஆனால் தகுதியான நோக்கத்திற்காக பங்களிக்கும் ஒரு சிறிய செயலைக் குறிக்கிறது. இந்தப் பணியை 30 நிமிடங்களுக்குள் செய்து முடிக்க முடியும். இவை அன்றாட வாழ்வில் பொதுமக்கள் பலருக்கும் உதவும் வகையில் இருக்கும். மனுக்களை நிரப்பித் தருதல், பார்வைக் குறைபாடுள்ள நபர்களுக்கு உதவுதல், ஆன்லைனில் புகைப்படங்களை டேக் செய்தல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கடிதங்கள் எழுதுதல், நடைபயணத்தின்போது குப்பைகளை அகற்றுதல் போன்றவை. இந்தச் சேவைகளை நேரிலும் ஆன்லைனிலும் செய்யலாம் என்பது இதன் சிறப்பு.
இதில் இரண்டு வகைகள் உண்டு. முதல் வகை இன்ஃபோ கிராபிக்ஸ் உருவாக்குதல் அதாவது தொண்டு நிறுவனங்களுக்கு வலைப்பதிவு இடுகைகளை எழுதுதல் போன்ற குறிப்பிட்ட நிபுணத்துவம் தேவைப்படும் செயல்பாடுகள் ஆகும். இரண்டாவது வகை சமூக ஊடகங்களில் தகவல் பகிர்வது அல்லது சமூக முயற்சிகளில் பங்களிப்பது போன்ற எளிய செயல்களை குறிக்கிறது.
சர்வதேச நுண் தன்னார்வத் தொண்டு தினத்தின் முக்கியத்துவம்;
இது உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதையும், சிறிய செயல்களின் பங்களிப்பையும் எடுத்துக் காட்டுகிறது. இதற்கு குறைந்த நேரம் போதும். நீண்டகால தன்னார்வ திட்டங்களில் ஈடுபடாமல் குறைந்த நேரத்தில் குறைந்த வளத்தை வைத்து தன்னால் முடிந்த பங்களிப்பை செய்வதை அனுமதிக்கிறது. குறுகிய கால முயற்சிகள் கூட சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழலில் கூட்டாக குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இது நிரூபிக்கிறது.
இந்த நாள் தன்னார்வத் தொண்டு பற்றிய உரையாடலை ஊக்குவிக்கிறது. தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த அணுகுமுறையை பின்பற்றவும் தொண்டு நோக்கங்களை ஆதரிக்கவும் ஊக்குவிக்கிறது. இந்த நாளை கொண்டாடுவதன் மூலம் ஒவ்வொரு சிறிய செயலும் முக்கியமானது என்பதை நினைவூட்டுகிறது. மேலும் சமூகத்திற்கும் சக மனிதர்களுக்கும் உதவுவதற்கு மனிதர்கள் தூண்டப்படுகிறார்கள்.
ஆன்லைன் நுண் தன்னார்வத் தொண்டு சேவைகள்;
இடுகைகளை பகிர்தல், உள்ளடக்கத்தை உருவாக்குதல் அல்லது தொண்டு நிறுவனங்களுக்கான கணக்குகளை நிறுவகித்தல், ஆன்லைன் மனுக்களில் கையொப் பமிடுவதன் மூலம் சமூக அல்லது சுற்றுச்சூழல் காரணங்களை ஆதரித்தல், காலநிலை முன்னறிவிப்பு தளங்களுக்கான வரலாற்று ஆவணப்படியெடுத்தல் போன்ற ஆராய்ச்சி திட்டங்களுக்கு பங்களித்தல், லாப நோக்கமற்ற நிறுவனங்களுக்கு உரைகளை மொழிபெயர்த்தல், ஆராய்ச்சி நோக்கங்களுக்காக தரவை வழங்குவதற்கான செயல்களில் பங்கேற்பது, வீடியோ கான்பரன்சிங் தளங்கள் வழியாக தொலைதூரத்தில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் அல்லது பயிற்சி அளித்தல்.
ஆஃப்லைன் நுண் தன்னார்வத் தொண்டு சேவைகள்;
பூங்காக்கள் அல்லது கடற்கரைகள் போன்ற பொது இடங்களில் நடக்கும்போது குப்பைகளை அகற்றுதல், கீமோதெரபி நோயாளிகளுக்கு கையால் செய்யப்பட்ட பொருள்களை உருவாக்குதல், முதியவர்கள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான அட்டைகளை உருவாக்குதல், நிகழ்ச்சிகளுக்கான பொருள்களை பேக்கிங் செய்தல், பார்வைக் குறைபாடுள்ள நபர்களுக்கு மொபைல் செயலி மூலம் காலாவதி தேதிகளை படிப்பது, பேச்சுக் குறைபாடுள்ள நபர்களுக்கு உதவுதல், நிறுவனங்களுக்கான துண்டு பிரசுரங்கள், லோகோக்கள் அல்லது சமூக ஊடக கிராபிக்ஸ்களை வடிவமைத்தல் போன்றவை.