

எழுபதுகளின் தொடக்கத்தில் தமிழ் திரை இசையில் சத்தமே இல்லாமல் ஒரு மாறுதல் நிகழ ஆரம்பித்தது.
ஆம். தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் ராமசாமி ஐயாவுக்கும், சின்னத்தாய் அம்மாளுக்கும் பிறந்த ராசையா (இசைஞானியாக) இளையராஜாவாக அறிமுகமான தருணம்.
இளையராஜா இசை மட்டும் தெரிந்த வெறும் ஞானி அல்ல... சமஸ்கிருதம், உச்சரிப்பு மற்றும் நம்மளுடைய மெல்டிங் பாயின்ட் எல்லாம் தெரிந்த இசைவிஞ்ஞானி.
ஆர்மோனியம் இவர் விரல்பட்டு குழையும்.. நெகிழும்..வளையும்.
கிராமப்புற மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம், உழைப்பு மற்றும் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அவரது பாடல்கள் இருந்தன. பாடல்கள் ஒவ்வொன்றும் மண்ணின் வாசனையுடன் தலைமுறை கடந்தும் பாடப்பட்டு வருவதே அதற்கு சாட்சி.
தாலாட்டு, காதல் ,தெம்மாங்கு, கும்மி, ஒப்பாரி... இப்படி ஒவ்வொரு பாடல்களிலும் மண் மணம் வீசியது.
நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல் கர்நாடக இசையிலும் பட்டையை கிளப்பிய பாடல் மோகன ராகத்தில் பத்ரகாளி படத்தில் இடம்பெற்ற 'கண்ணன் ஒரு கைக்குழந்தை' பாடல். கண்ணை மூடிய நிலையில் இந்தப் பாடலைக் கேட்க, ஆத்மா வெளியில் போய் விட்டு உள்ளே வருவது போல் இருக்கும்.
'ஓல குடிசையிலே...' (கிராமத்து அத்தியாயம்)... புதிதாக இசைக்கருவிகள் ஏதும் இல்லாமல் ரம்யமான இசையில் ஒரு மென் சோக தாலாட்டு இந்தப் பாடல்
'நீ பொட்டு வெச்ச தங்க குடம் ஊருக்கு நீ மகுடம்'.. (பொன்மனச் செல்வன்) பாடலில் நம் மனம் கரைந்து போவது நிஜம்.
'வாட(டை)வாட்டுது
ஒரு போர்வை கேக்குது
இது ராத்திரி நேரமடி..' சக்களத்தி என்ற படத்தில் இடம் பெற்றிருந்த இந்தப் பாடல் ஒரு கிராமத்து கணவனின் தவிப்பை/ தாபத்தை அழகாக வெளிகொணர்ந்திருக்கும்.
இரவில் அமைதியாக இந்தப் பாடலைக் கேட்க மனம் ஏதோ அமைதியாய் நம்மை ஆசிர்வதிக்கும்.
காற்றினிலே வரும் கீதம் 'திரைப்படத்தில் இடம்பெற்ற தையர தையா தையரத்தையா.. (ஹம்மிங் வேற லெவல)
"சித்திர செவ்வானம்
சிரிக்க கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா..."
"போய் வரவா என்றாலே
ஏக்கத்துடன் பார்ப்பா ..
நான் திரும்பி வரும் வரைக்கும்
கரையினிலே நிற்பா.." ஜெயச்சந்திரனின் காந்த குரலில் தவழ்ந்த இந்தப்பாடலின் இசையில் வாழ்ந்திருப்பார் இசைஞானி.
அன்று பல படங்களின் வெற்றிக்கு விளம்பரமாக இருந்ததெல்லாம் 'இசை: இளையராஜா'ன்ற நீலம் பச்சை சிகப்பு கலரில் இருந்த போஸ்டர்கள் தான் என்றால் மிகை இல்லை.
பூவிழி வாசலில் யாரடி வந்தது... (தீபம்) - ஒரு விமானம் வழக்கமான முறையில் அல்லாமல் ஜிவ்வென்று அப்படியே டேக்ஆஃப் ஆனால் எப்படி இருக்கும் .. அப்படி இருக்கும் இந்த பாடலின் இசை. கீழே இறங்காமல் உயரத்திலேயே பறந்து அப்படியே பல்லவியில் மீண்டும் இணைவது போல மிகச் சிறப்பான இசையை தந்திருப்பார் இசைஞானி.
பாடலில் மூன்று சரணம்.. மூன்றுக்குமே தனித்தனிப் பின்னணி இசை... வெளுத்து வாங்கியிருப்பார். பாடலில் வயலின், குழல் எல்லாம் தனி ஆவர்த்தனம் செய்யும்.
இப்படி
இசைஞானியின் சில பாடல்களைக் கேட்கும்போது
அழகிய நினைவுகள்
அழையாமலேயே
வந்து அமர்ந்து விடுகின்றன.
மெலடிகளின் காலகட்டம் என்றே சொல்லலாம்...
(மீண்டும் ஒரு காதல் கதை)
"அதிகாலை நேரமே
புதிதான ராகமே
எங்கெங்கிலும்.. ஆலாபனை
கூடாத நெஞ்சம் இரண்டும் கூடுதே பாடுதே
அதிகாலை நேரமே..."
குழந்தை சுபாவம் கொண்ட மனதளவில் வளராத காதலர்கள் பாடுவதாய் அமைந்த பாடலுக்கு மிகப் பொருத்தமான இசை. இனம்புரியாத சோகம் இழையோடும்..
"காற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது.." இசைக்கும் இயற்கைக்குமான பந்தத்தை மிக அழகாக இசையில் வெளிப்படுத்தி இருப்பார் இசைஞானி. பாடலைக் கேட்கும்போது ஒருவித மென் சோகம் நம்மை அழுத்தும்.
சில படங்கள் மனதுக்கு நெருக்கமாக இல்லாதபோதும் கூட அந்தப் படத்தின் பாடல்கள் நம்மில் இரண்டறக் கலந்து விடும். அதற்கு மிக முக்கிய காரணம் இசை இசைஞானி என்பதே அப்படிப்பட்ட ஒரு பாடல் தான் இது...
"தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து
வந்தபின்பு வேர்த்து
தலையை குனியும் தாமரையே."
வயலின் குழையும். துவக்கத்தில் வரும் நாதஸ்வரம், வீணை , புல்லாங்குழல் தவில் ,கெட்டி மேளம் .. இசைஞானி தேவ லோகத்தில் இசைத்த கானம்.
"ஒரு குங்கும செங்கமலம் (ஆராதனை)
இளமங்கையின் தங்க முகம்
பசி தூண்டும் அமுதம்
தரவேண்டிய கமலம்"..
காதல், வளைகாப்பு... என வாழ்க்கையை முதுமை வரை உணர்வோடு சொல்லும் பாடலுக்கு மிக அருமையாக இசை கோர்வை செய்திருப்பார் இசைஞானி. இது டூயட் தான் ஆனால் டூயட் இல்லை. இசைஞானியின் கற்பனையை என்னவென்று சொல்வது? (உண்மையில் இந்த பாடலைப் பாடுபவர் எஸ்பிபி மட்டுமே! இடையிடையே கொஞ்சலான குரலுடன் அவ்வப்போது சிணுங்கி, சிரித்தபடி ஆலாபனை மட்டுமே செய்திருப்பார் ஜானகியம்மா.) கடைசியா 'குங்குமசெங்கமலம்' என இழுத்து எஸ்பிபி பாடறப்ப ஒரு பின்னணி இசை வரும் பாருங்கள் உள்ளம் சிலிர்க்கும்..
"வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா நேசத்திலே என் மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா"... (செண்பகமே செண்பகமே) அந்தக் கால காதலர்களின் உணர்வுகளை நிஜத்தில் காட்டிடும் காட்சியமைப்பு பாடலுக்கு பிளஸ்ன்னா.. இசைஞானி இசைகூடுதல் பிளஸ். காதலர்கள் கொஞ்சுவது போல் இசைஞானியின் இசையும் நம்மிடம் கொஞ்சும். இசைஞானியின் புல்லாங்குழல் இசை அப்படியே நம்மை தாலாட்டும். கிராமத்து மணம் வீசும் இந்தப் பாடல் உயிரைத் தொட வல்லது
"காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே
என் நெஞ்சில்...
இந்தப் பாடல் காதல் என்று சொல்லும் போதே நினைவு அடுக்குகளில் இருந்து விடுபட்டு மேலே எழும்பி வந்துவிடும். இசை ஞானி அப்படி ஒரு இசையை போட்டு இருப்பார்.. இன்னும் 50 ஆண்டுகாலம் ஆனாலும் இந்த பாடலுக்கு என்று ஒரு தனி வசியம் உண்டு. இதுவரை காதலிக்காதவர்களை கூட காதலிக்கச் செய்துவிடும் . கவிதை எழுதத் தெரியாதவர்களையும் ஒரு சில வரிகளாவது எழுதச் செய்துவிடும் .
வீட்டில் யாரும் இல்லாத நேரம் இசைஞானியின் பாடலை சத்தமாக கேட்டுக் கொண்டே வேலைகள் பார்ப்பதில் ஒரு அலாதி இன்பம் இருக்கத்தான் செய்கிறது.
இசைஞானியின் இசையை ரசிக்க ஆரம்பித்த பின்னர் தான் பல பேர் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து வருகிறார்கள்..
இசைஞானியின் இசை மட்டுமல்ல... இசைஞானி குரலும் உள்ளே உள்ளே எங்கோ கூட்டிச் செல்லும் . இசைஞானியின் குரலை உணரத்தான் முடியும் .விவரிக்க வார்த்தை இல்லை.
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ... இந்தப் பாடலை எப்படி விவரிப்பது...?
"ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும் சடை வார் குழலும் விடை வாகனமும் கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே.."
மனதை மயக்கும் தேனிசை. தெய்வீகம் கமழும் பாடல். மனம் எங்கோ செல்லும் அமைதியைத் தேடி, ஆன்மீகத்தை தேடி.
இசைதாயின் செல்லப்பிள்ளையின் குரலை/பாடலைக் கேட்க மூகாம்பிகைதாயே ஓடி வருவார்.
துள்ளல் இசை, மென் சோகம் , ஒரு தலை காதல், விரகதாபம், உற்சாகம், நெருக்கம், அந்நியோன்யம், தெய்வீகம்... இப்படி எல்லா வித உணர்வுகளையும் தன் இசையின் மூலம் விருந்து படைப்பதில் இசைஞானிக்கு நிகர் இசைஞானி தான்!
தொழில்நுட்பம் வளர்ந்தது. இரைச்சல் இசையில் பாடல்களின் வரிகள் புரியாமல் அர்த்தம் விளங்காமல்.. காட்டு கத்தலாக இருப்பதுதான் இசை என்றாகிப் போனது.
ஆனாலும் என்ன இசை ஞானியின் இசைக்கு வயது என்றும் பதினாறு தான்!
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் ... கிறங்க வைத்த கிறங்க வைக்கிற இரண்டு பாடல்கள் இதோ
"உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா...
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா
அழகா"... சைக்கோ பட பாடல்.
வரிகளும், இசையும்
ஒன்றோடொன்று போட்டி போடும்.
இசையால் அழவைக்க முடியும் என்பது இந்தப் பாடலைக் கேட்ட போதுதான் புரிந்தது.
இந்த பாடலின் இசை.. இரைச்சல் இல்லா இசை. ரத்தம், சதை, மூளை, உயிர், ஆயுள், ஆத்மா வரை ஊடுருவும் இசை.
கபிலனின் ஆழமான வரிகள்.. சித் ஸிராமின் காந்த குரல்.. ராஜாவின் உயிரை உருக்கும் இசையால் இன்னும் அழகாய் மெருகூட்டப்பட்டிருக்கும் இந்தப் பாடலில்.
'தினம் தினம் உன் நெனப்பு.. வளைக்கிறதே...
அவரே பாடல் எழுதி அவரே பாடி அவரே இசையமைத்த உள்ளம் கொள்ளை போகும் பாடல்.
இரைச்சல் இல்லாத இசை இளமைப் பருவத்துக் காதலை தேட வைக்கும்.. 'ஐயா உங்க குரலுக்கும் இசைக்கும் வயசே ஆகாதா?' ன்னு கேட்கத் தோணும்.
இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த ஆளுமை.
தினம் தினம் உன் பாட்டு இனிக்கிறதே சுவைக்கிறதே...
இன்னும் பலஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் இசைஞானியின் இந்த இசையை எங்கோ ஒரு இடத்தில் யாரோ ஒருவன் ஏதோ ஒரு வாத்தியத்தில் வாசித்துக் கொண்டுதான் இருப்பான். அதைக்கேட்டு மானுடம் மட்டுமல்ல மரமும், செடியும் கூட மயங்கி கொண்டுதான் இருக்கும்.
இதயத்திற்கு நெருக்கமான இசையைத் தரும் இசைஞானி, ரொம்ப நல்லா இருக்கணும். நல்லா இருப்பார். நூறாண்டு தாண்டி வாழி!