ஆளுநரின் வலியுறுத்தல்... ஆளுமைகளின் அறிவுறுத்தல் !

  தொகுப்பு: தனுஜா ஜெயராமன் 
ஆளுநரின் வலியுறுத்தல்... ஆளுமைகளின் அறிவுறுத்தல் !
Published on

சென்னை மவுண்ட் ரோட்டரி சங்கம் மற்றும் அதனுடன் இணைந்த 46 ரோட்டரி சங்கங்கள் (RI District 3232) இணைந்து வழங்கிய பெண்களின் உடல் மற்றும் மன நல ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு மாநாடு (Womens Wellness Conclave) தரமணியில் உள்ள ஐஐடி வளாகத்தில் சென்ற ஞாயிற்றுகிழமையன்று (02.04.2023) நடைபெற்றது. சென்னை மவுண்ட் ரோட்டரி சங்கத்தின் தலைவர் Dr. தீபா முன்னின்று இந்த நிகழ்ச்சியினை வெகு விமரிசையாகவும் , சிறப்பாகவும் நடத்தினார் .இவ்விழாவில் பல்வேறு மருத்துவமனைகளை சார்ந்த 13 மருத்துவர்களும், ஆளுமைகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பெண்களின் மனநலம், ஆரோக்கியம், அழகு, உடற்பயிற்சி குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. இன்றைய மாறி வரும் அதிதுரித நவீன சூழலில் பெண்களின் உடல்நலம் மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வுகள் அதிகளவில் முன்னெடுக்கப் பட வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் சென்னை ரோட்டரி சங்கம் இதற்காக ஒரு சிறப்பான மாநாடு ஏற்பாடு செய்திருந்தது பாராட்டுக்குரியது.

இந்த நிகழ்ச்சி பெண்களுக்கு ஒரு பயனுள்ள தகவல் களஞ்சியமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை. பெண்களுக்கான பல்வேறு பயனுள்ள தகவல்கள் அங்கு விவாதிக்கப்பட்டு, அதற்கான எளிய வழி முறைகள் மற்றும் தீர்வுகள் பரிந்துரைக்கப்பட்டன. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியினை மிக அழகாகவும், சிறப்பாகவும் தொகுத்து வழங்கினார் DR. சுமேதா நந்தகுமார் . நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் டாக்டர் ஜனனி ரெக்ஸ்.

இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் மருத்துவரான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டது நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விரிவாகப் பேசினார்.

குடும்பத்தில் கணவன் மற்றும் குழந்தைகளின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அது குறித்து அதீத கவலை கொள்ளும் பெண்கள் தங்கள் உடல்நலத்தைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை என்றும் அனைத்துப் பெண்களும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயமாக முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் பெண்கள் அனைத்து பரிசோதனைகளையும் செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், அரசாங்கத் திட்டங்கள் பல இருந்தாலும், தனி மனித பொறுப்புணர்வு மூலமே பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இயலும் என்றும் தெரிவித்தார்.

இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மூலம் நம் உடலை நோயின்றி பாதுகாக்க முடியும். ஆனால், தீவிர நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்வதே சிறந்தது என்று மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். இயற்கை உணவு, சமச்சீர் உணவு பழக்கம், வழக்கமான உடற்பயிற்சி போன்றவற்றைப் பெண்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். மொத்தத்தில் பெண்கள் தங்கள் உடல் நலனில் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பெண்களுக்காக அரசாங்கம் எவ்வளவோ திட்டங்களைப் போடலாம், ஆனால், பெண்கள் மருத்துவமனைகளுக்கு சென்று அதனை முறையாக பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பெண்கள் அவ்வாறு செய்வதில்லை தாங்களே சுய மருத்துவம் செய்துகொள்கிறார்கள் என வருத்தப்பட்டார். பெண்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை ஆண்களும் தமது கடமையாகவே நினைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முன்னதாக இந்த நிகழ்வில் பேசிய மருத்துவர்கள் மற்றும் பெண் ஆளுமைகள், பெண்களின் உடல் மற்றும் உளவியல் தொடர்பான விழிப்புணர்வு குறித்த பல்வேறு செய்திகளைப் பகிர்ந்துகொண்டனர். பெண்களின் உடல், மனநலம், ஆரோக்கியப் பிரச்னைகள், வாழ்க்கை முறை, அவர்களின் பாலியல் தேவைகள், அழகு சிகிச்சை முறைகள் , ஃபிட்னஸ் சீக்ரெட்ஸ் என பலவும் விவாதிக்கப்பட்டது.

மாநாட்டில் பங்கேற்ற ஆளுமைகள்:

ஆளுமைகளின் உரைகளிலிருந்து சில துளி்கள்:-

சிறப்பு ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் வனிதா முரளிகுமார்:

பெண்கள் இளமையாக இருக்க நிம்மதியான உறக்கமும் திருப்தியான தாம்பத்திய உறவுமே காரணம். மசாஜ் சிகிச்சைகள் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் பெண்களின் மன அழுத்தம் மற்றும் வலிகளை குறைக்கலாம்.

ரேடியோலஜி மற்றும் ஸும்பா ட்ரைனர் டாக்டர் தீபாஸ்ரீ:

(Radiology and zumba fitness trainer):

என்னிடம் வரும் கேன்சர் நோயாளிகள் மற்றும் இதர நோயாளிகளை மிகுந்த அன்புடன் கவனித்துக்கொள்கிறேன். கேன்சர் நோயாளிகளுக்கு நோய் குறித்த சிகிச்சையைக் காட்டிலும் அனுசரணையும், அன்புமே முக்கியம்.

நரம்பியல் நிபுணர் டாக்டர் சுபா சுப்ரமணியம்:

மைக்ரேனும் சாதாரண தலைவலியும் ஒன்றல்ல. எதுவாக இருந்தாலும் தானே சுய மருத்துவம் செய்வதுகொள்வது ஆபத்தானது. தொடர்ந்து ஆன்டிபயாடிக் மாத்திரைகளைப் போடுவது மிகத் தவறு . மருத்துவரிடம் காண்பித்துவிட்டாலே போதும், ஆரம்ப நிலை நோய்களைக் கண்டறிந்து எளிதில் குணப்படுத்தி விடலாம்.

ஓமெட் ஆலோசனை நிறுவனர் பிரதிபா குப்தா:

பெண்கள் தினசரி பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ட்விட்டரைப் பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு சமூக வலைதளங்களில் உலாவுவது என்பதே மிகப் பெரிய பிராண்டிங்தான். பிராண்டிங் செய்வதன் மூலம் பெண்கள் தங்கள் தொழிலினை மேம்படுத்தலாம். இதற்கு பல வழிமுறைகள் உள்ளன. தகுந்த நிபுணரிடம் ஆலோசனைப் பெற்ற தொழில் வளர்ச்சிக்கு ஆவன செய்யலாம்.

டாக்டர் பாரதி ராஜஸ்ரீதர்:

பெண்கள் தங்கள் அக அழகோடு புறஅழகையும் முழுமையாக பராமரிக்க வேண்டும். பெண்களின் முக அழகு தொடர்பான சிகிச்சை முறைகள் , பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் ஒப்பனை அறுவை சிகிச்சை (plastic surgery and cosmetic surgery) ஆகிய பிரிவுகளில் முன்னேற்றங்கள் பல வந்துவிட்டன. புற அழகுக்கு கவனம் செலுத்தும்போது அகம் மகிழ்ந்து அழகுறும்.

காஸ்ட்ரோ என்டேரோலொஜிஸ்ட் மற்றும் கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்வாதி ராஜு:

மது அருந்துதல் மட்டுமில்லாமல் தொடர்ந்து சில மாத்திரைகளை நீண்ட நாட்கள் உட்கொள்வது, மாறும் வாழ்க்கை முறைகள், drugs போன்ற பல்வேறு காரணிகளால் கல்லீரல் தொடர்பான நோய்கள் மற்றும் பிரச்னைகள் வருகின்றன. மது மற்றும் போதை பொருட்களுக்கு பெண்களும் அடிமையாகி வருகின்றனர். இது வருந்தத்தக்க விஷயம்.

பிட்னெஸ் ட்ரைனர் S. அனு:

தயவு செய்து தினமும் 45 நிமிடங்களாவது உங்களுக்கான நேரமாக ஒதுக்குங்கள் பெண்களே! .

டாக்டர் ஜனனி ரெக்ஸ்:

" life is magical " எண்ணம் போல் வாழ்க்கை என்கிற அழகிய தத்துவத்தை மனதில் நிறுத்தி நேர்மறை சிந்தனைகளோடு வாழ்வது அவசியம். நம் வாழ்க்கை நம் கையில். நம் வாழ்க்கை நமது சிந்தனைகளின் அடிப்படையில்...

டயடிஷியன் சுஜாதா:

பிறருக்காக சமைத்து, உணவளித்து ஆரோக்கியம் காக்கும் பெண்கள், தங்கள் தினசரி உணவு பழக்க வழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் ஆரோக்கியமே குடும்ப ஆரோக்கியம்.

எனவே, பெண்கள் சரிவிகித உணவு உட்கொள்ளுதல் அவசியம். நியூட்ரிஷியஸ் டயட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

யோகா ஆலோசகர் சங்கீதா:

பெண்கள் மூச்சு பயிற்சி, பிராணாயாமம் போன்ற எளிய ஆசனங்கள் செய்வது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம் (மூச்சு பயிற்சி, பிராணயாமம் போன்ற எளிய ஆசனங்களை செய்தும் காண்பித்தார்.)

டாக்டர் ஸ்ருதி சந்திரசேகர்:

பெண்களுக்கு ஏற்படும் இருதயக் கோளாறுகள் அதற்கான அறிகுறிகள் ஆண்களை போல் இல்லாமல் வேறு மாதிரியாகத் தென்படும். அதனை அக்கறையாக கவனித்தாலே உயிரிழப்புகளைத் தடுக்கலாம்.

டாக்டர் தீப்தி சஞ்சான்:

ஹீமோகுளோபின் அளவு 12.5 இருக்கவேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான பெண்கள் தாராளமாக ரத்த தானம் அளிக்கலாம். கருவுற்ற பெண்கள் மற்றும் நோய்கள் இருக்கும் பெண்கள் ரத்த தானம் செய்ய கூடாது.

(life coach) ஹேமா மனுஆனந்த்:

மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கையை வளப்படுத்தும். சோகம் உங்கள் உடல்நிலையை கடுமையாக பாதிக்கும் . எனவே மகிழ்ச்சியுடன் இருங்கள். நெகட்டிவ் எண்ணங்களைத் தவிர்த்து பாசிட்டிவ் எண்ணங்களை வளர்த்துகொள்ளுங்கள்.

இவ்வாறாக இந்நிகழ்ச்சி பெண்களுக்கான பல்வேறு தகவல்கள் மற்றும் விழிப்புணர்வு குறித்த செய்திகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொள்ளும் மிக சிறந்த தளமாக அமைந்தது இம் மாநாடு. இதுபோன்ற பெண்களுக்கான பயனுள்ள நிகழ்ச்சிகள் மேன்மேலும் நடத்தப்பட வேண்டும்; கிராமங்களில் உட்பட... !!! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com