Internet Of திங்கறதுகள்!

Internet Of திங்கறதுகள்!
Published on

சமயலறையிலிருந்து அசரீரி.

“ஏங்க.. மளிகை லிஸ்ட்டுல கடலை மாவு போடலையா ?”

சென்னையின் சீதோஷ்ண எல்லைக்குள் நேற்றிரவு பெய்திருந்த மழையின் பலனால் அளவான குளிரோடும், சன்னமான தென்றலோடும், கொஞ்சம் மதாந்தமான மழை மேகங்களும், அடர்ந்த காற்றில் நகரமுடியாத பவழமல்லி சுகந்தமும் சுழ்ந்தபடி மிதமான ஆனந்தத்துடன் ஆரம்பித்திருந்த காலைப் பொழுதில், தொலைவில் டிவியையும், கையில் நியூஸ் பேப்பரையும், மேஜையில் காப்பியையும் – சராசரிக்கும் அதிகமாக புலன்களை வேலை வாங்கியபடி சுகமாக அமர்ந்திருந்த சுப்பையாவுக்கு, அந்த சுகம் சட்டென்று தடுமாற்றம் அடையப்போவது தெரிந்தது.

மனிதன் என்னதான் மல்ட்டி-டாஸ்க் செய்தாலும், மனைவியின் கேள்வி வரும்போது, மூளை அத்தனையையும் நிறுத்திவைத்துவிட்டு (மனைவியின் தாலி ஒரு hung thread என்பது ப்ரோக்ராமிங் ஜோக்) செவிப்புலன்களை – வார்த்தைகளோடு, அழுத்தம், தொணி, சப்த அளவு – அத்தனையையும் அளக்கச்செய்யும்.

“கடலை மாவு போட்டோமா போடலையா ? லிஸ்ட்டு அவ தானே எழுதினாள். நான் கடைக்குப் போய், நாடார் கடையில கால் கடுக்க நின்னு, எல்லாத்தையும் அள்ளிப் போட்டு, தூக்க முடியாம தூக்கி..”

தூணிலிருந்து திடீரென ப்ரசன்னமான ந்ரசிம்மனைப் போல, எதிரில் நின்றுகொண்டிருந்தாள் கோமதி. கையில் ஜாரிணிக் கரண்டியுடன். தீபாவளி பட்சணங்கள் உற்பத்தி ஆரம்பமாகியிருக்கிறது.

“எனக்கென்ன தெரியும் ? நீதானே லிஸ்ட் எழுதினே ? போட்டிருப்பான். ஒழுங்கா பார்த்தியா ?”

“அடுப்புல பாகு வெச்சுட்டேன். கடலை மாவைக் காணும். வேஸ்ட்டாப் போப்போகுது. “

நிலமையின் தீவிரம் உணர்ந்த நான்கு கண்களும் இப்போது ஹாலின் ஒரு மூலையில், காதில் ஹெட்ஃபோன் மாட்டிக்கொண்டு, மடியில் லேப்டாப்போடு அமர்ந்திருந்த ஆதித்யா மேல் விழுந்தன.

அவர்கள் பார்ப்பதைப் உணர்ந்த ஆதித்யா, 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் அதிகபட்ச மரியாதையாக, ஹெட்ஃபோன்களைக் காதை விட்டு நீக்கிவிட்டு “என்னாச்சு ?” என்றான்.

“ஆதி. டூ வீலர் எடுத்துண்டு போய் மணி கடையில் ஒரு கிலோ கடலமாவு வாங்கிட்டு வரியா ?” என்று கேட்டாள் கோமதி. உடனே ஒப்புதல் வராததால், “அப்பாட்ட வாங்கச்சொன்னா, வாங்காம வந்திருக்காரு. இப்ப பாகு வேற அடுப்புல வெச்சுட்டேன்.. “ என்ற சார்ஜ்ஷீட்டையும் சேர்த்துக்கொண்டாள்.

“நீ லிஸ்ட்டுல போட்டிருந்தா, நான் வாங்கிட்டு வந்திருப்பேன்” என்று எழுந்த மனதின் குரலை, இல்லற அனுபவ அறிவு அணைத்துவைத்தது.

“ம்மா ! ஆபீஸ் கால்ல இருக்கேன். ன்னாலல்லாம் போமுடியாது.” என்ற பதிலை உதிர்க்கும்போதே அவன் மூளை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.

“காலாகாலத்துல உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிவெச்சுட்டா..”ண்னு ஆரம்பிச்சுடுவாங்களே !! ம்ஹும். அதுக்கு இடம் கொடுக்கப்டாது.

“இப்ப என்ன ? கடலை மாவு வேணும். அவ்ளோதானே” என்ற ஆதித்யா, ஃபோனை எடுத்தான்.

“ஸிரி ! ஆர்டர் ஒன் கேஜி ஆஃப் கடலமாவு, ஃப்ரம் ஸெப்டோ !” என்றான். அவன் கையில் ஃபோன் மூன்று வினாடிகள் இயங்கிவிட்டு “One Kg Gram Flour ordered, through Zepto. “ என்று சொன்னது.

“ஒம்போது நிமிஷத்தில் வந்துடும்மா.. நான் போய் வாங்கிட்டு வந்தாக்கூட இவ்ளோ சீக்கிரம் வர முடியாது !”

சமையலறைக்குள் பரபரப்பாகச் சென்றாள், கோமதி. அவள் மனதில் crisis management ஓடிக்கொண்டிருந்தது.

இங்கே சுப்பையா – ஒரு மாபெரும் க்ரைசிஸ் தவிர்க்கப்பட்டதை எண்ணி வியந்துகொண்டிருந்தார். இருந்தாலும் லேசாக, மானசீக மீசையில் மண் ஒட்டியிருந்தது.

“எல்லாத்துக்கும் சிரி, சிரின்னா, சிரிப்பா சிரிச்சுடும் ஆதி !”

ஆதிக்கு சுயத்தை காயப்படுத்தினாலும் தாங்கிப்பான். சிரியை கிண்டல் செஞ்சதால் “தாய் தடுத்தாலும் விடேன் !”ந்னு தந்தையிடம் ஆர்க்யூ செய்ய ஆரம்பித்தான்.

“ப்பா. உங்க ஜெனரேஷனுக்கே டெக்னாலஜின்னா பயம். அதான், ஏதாவது புதுசா வந்தா அதைக் கிண்டல் செய்யறது. ஆனா, ஞாயித்துக் கிழமையாச்சுன்னா, ஆதி.. ஒரு ஓலா புக் செஞ்சுக் கொடுடான்ன்னு வந்துடுவே !”

“எல்லாரையும் சோம்பேறி ஆக்கறதுக்குப் பேர் டெக்னாலஜியா ?”

ப்ளிங்க்.. என்று சப்தம் கேட்டது. மொபைல் எடுத்துப் பார்த்தான்.

“பாரு, கடலை மாவு பேக் செஞ்சு, வழியில வந்துண்டிருக்கு. இன்னும் அஞ்சு நிமிஷத்தில் வந்துடும். யோசிச்சுப் பாரு, உங்க காலத்தில”

“என்னடா பாஸ்ட் டென்ஸ்ல பேசறே ?” என்று அதிர்ந்தார் சுப்பையா.

ஓரு விநாடி,pause விட்டான் ஆதி. “சரி. பாஸ்ட்டை விடு. அது எப்படி இருந்துதுன்னு உனக்கே தெரியும். ஃப்யூச்சரைச் சொல்றேன், கேளு. ரொம்ப ஹைஃபையாப் போகாம, சாதாரணமா, நம்மைச் சுத்தி நடக்கறதைப் பத்தி சொல்றேன். இதுக்குப் பேர் Internet of Things. நம்ம வீட்டுக்குள்ள இருக்கும் ஃப்ரிட்ஜ் – உதாரணத்துக்கு, அதுக்குள்ள என்னென்ன இருக்குன்னு தெரிஞ்சு வெச்சிருக்கும். தயிர், பால் திரப்போகுதுன்னா, முன்கூட்டியே அலர்ட் கொடுக்கும். இல்லை, அதிகப் படியாப் போய், நம்ம மணி கடையை அதுவே கால் செஞ்சு, தயிர், பால் வரவழைச்சுக்கும். நம்ம பேங்க் அக்கவுண்ட்லேர்ந்து காசை அனுப்பி விட்டுடும் !”

“ஹெஹெ.. !”

“சிரிக்காதப்பா.. இதெல்லாம் இப்பவே நடைமுறையில் இருக்கும் டெக்னாலஜி !”

“இல்லல்ல.. ஃபீச்சர் நல்லாத்தான் இருக்கு. நான் எதுக்குச் சிரிச்சேன்னா, உங்கம்மாவோட தோசை மாவு புளிக்க ஆரம்பிச்சிருச்சுன்னு கணிச்சு சொல்லுமா ? அதைத்தான் நினைச்சேன்.. சிரிச்சேன். நீ, மேல சொல்லு”

“Today’s joke is tomorrow’s reality. இப்ப சொல்றேன் பாரு.. இதெல்லாம் ரொம்ப சீக்கிரம் நடக்கும். கார்த்தால எழுந்திருக்கும்போது, மொத டிகாஷன் டைமர் வெச்சு, தானா போட்டிருக்கும். “

“ஏன் ? காஃபியாவே கலக்காதா ?”

“கொஞ்சம் சீரியசா கேளு.. இத்தனை செஞ்ச டெக்னாலஜிக்கு காப்பி கலக்கத் தெரியாதா ? உன் personalization choicesக்காகத்தான் டிகாஷனோட நிறுத்திக்கும். மேல, கேளு. நீ காப்பி குடிச்சு முடிக்கும் நேரத்துல, பாத்ரூம் கீஸரை ஆன் செஞ்சு வெச்சுடும். குளிச்சுட்டு வெளியே வரும்பொது, ரெண்டு நிமிஷம் ஃபேன் தானா ஆஃப் ஆகிக்கும். உனக்குத்தான் குளிருமே. மணி எட்டேகால் ஆகியிருக்கும். ஒரு ஓலா வண்டி ரெடியா வாசலுக்கு வந்திருக்கும். அதுல ட்ரைவர் இருக்காது. Self driving வண்டி வந்திருக்கும். பேங்க் கூட்டிண்டு போக.”

“என்னடா.. எத்தனை டெக்னாலஜி வந்தாலும், பேங்குக்கு போய்த்தான் ஆகனுமா ? “

“வீட்லேர்ந்து அத்தனை பேங்க் வேலையும் இன்னைக்கே செய்யலாம். ஆனா, நீ செய்யமாட்டியே. புதுசா கோயில் கும்பாபிஷேகம் ஆச்சுன்னா, 45 நாளைக்குள்ள போகனும்ங்கற கணக்கா, நம்ம ஊர்ல ஏதாவது ராஜஸ்தான் பேங்க் ஆரம்பிச்சாக் கூட ஓடிப்போய் ஒரு சேவிங்க்ஸ் அக்கவுண்ட் ஆரம்பிச்சுடுவே. மாசா மாசம், பல்லாங்குழில தோய்க்கற மாதிரி, ஒவ்வொரு அக்கவுண்ட்டுலேர்ந்தும் பணத்தை இதுலேர்ந்து அதுக்கு, அதுலேர்ந்து இதுக்குன்ன்னு மாத்தினே இருப்பியே.. கிட்டத்தட்ட மணி லாண்டரிங்க் மாதிரி.. உன்னை மாதிர் ஆட்களுக்காகத்தான் இன்னும் physical bankல்லாம் இயங்கிட்டிருக்கு.”

“சரி, சரி.. டேமேஜ் செய்யாம மேல சொல்லு”

“திரும்பி வீட்டுக்கு வந்தா – பயோ மெட்ரிக்.. அதாவது உன்னொட விரல் ரேகை வெச்சுத்தான் நம்ம வீட்டோட பூட்டு திறக்கும். உள்ளே நுழைஞ்சதும்..”

“தெரியும். ஃபேன் சுத்தும். டிவி. ஓடும். அடுத்த ரவுண்ட் டிக்காஷன் இறங்கும். அதானே ?”

“கரெக்ட். ! வீட்ல எந்த சாமான் இல்லைன்னாலும், தானா ரொப்பிக்கும். சர்ஃப் எக்ஸல் தீந்து போப்போகுதுன்னு வாஷிங்க் மெஷின் அமேசான்ல தானா ஆர்டர் செஞ்சுக்கும். தண்ணி கேன் தீரப்போகுதுன்னு ரெண்டு நாள் அட்வான்ஸாவே, தண்ணி காரனுக்கு மெசேஜ் அனுப்பிடும். ரங்காச்சாரில சீட்டு விழுந்துதுன்னு தெரிஞ்சா, சனிக்கிழமை காலைல அப்பாயிண்ட்மெண்ட் தானா புக் செய்யும். இதுல முக்கியமானது என்னன்னா, ஒவ்வொரு electronic / electrical ஐட்டமும் ஒண்ணோடொன்னு பேசி – உனக்கான உதவியைச் செய்யும். உன் கைல கட்டியிருக்கற வாட்ச், நீ ஸ்ட்ரெஸ்ஃபுல்லா இருக்கேன்னு தெரிஞ்சுதுன்னா, அதுக்கேத்த லைட், ஏசி எல்லாத்தையும் பதப்படுத்தி உன்னை ஆசுவாசப் படுத்தும். இதுதான் Internet of Things”

“இதெல்லாம் கேக்க சிம்பிளா இருக்கே. பெருசா ஆச்சரியமா இல்லையே !? “

“அப்பா. நீ சொல்றது கரெக்ட். ஏன்னா, இதை ஒரு முப்பது வருஷமாவே நாம யோசிச்சிட்டு வரோம். 2020ல் பறக்கும் காரெல்லாம் நினைச்சு வெச்சிருக்கோம். We seem to be slower. ஆனால், ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா… நம்ம adaptability அதிகமாயிட்டே இருக்கு. முன்னால, தொழில் நுட்பம் மட்டும் வளர்ந்துட்டு இருக்கும். ஆனால், அது கடைசி ஆள் வரை போறதுக்குள்ள அந்த டெக்னாலஜி ஒழிஞ்சேபூடும். உதாரணத்துக்கு CD. புதுசா வரப்போற digital native குழந்தைகளுக்கு – அப்படி ஒரு டெக்னாலஜி இருந்ததே தெரியாது. இந்த சிடி, நம்மூர் கிராமத்துக்குள்ள நுழையறதுக்குள்ள வழக்கொழிஞ்சு போச்சு. ஆனா, இந்த லாஸ்ட் பத்து பைஞ்சு வருஷத்துல MP3 ரீச் ஆகி, இடியாப்பம் விக்கறவங்கல்லாம், கத்தாம ஸ்பீக்கர்ல போட்டுட்டுப் போறாங்க. That’s the difference. Artificial Intelligence ஒவ்வொருத்தன் கையிலயும் இருக்கு“

“ஹ்ம்ம்.. !”

“அதாவது என்ன சொல்லவறேன்னா.. இனிமே ஒரு பத்து வருஷத்துக்கு கிக் எதுல இருக்கப்போகுதுன்னா, புது தொழில் நுட்பம்னு இல்லாம, ஏற்கனவே வந்த சில அபாரமான தொழில் நுட்பம் – அத்தனை பேர் வாழ்க்கையிலயும் பிண்ணிப் பிணையறா மாதிரி human adaptability வளரப்போகுது. அது என்னமோ பணக்காரன் வீட்டுலதான் இருக்கும்னு இல்லாம, எல்லார் கையிலும் வீட்டிலும் இருக்கப் போகுது. “

“நான் முதல்ல கேட்டதையே திரும்பக் கேக்கறேன். இதுவரைக்கும் நீ சொன்னதெல்லாம், மனுஷனை சோம்பேறியாக்கறா மாதிரியே இருக்கே !”

“கரெக்ட்டுதான். ஆனால், இப்படி கிடைக்கும் நேரத்துல வேற என்ன செய்யலாம்னு யோசிக்கறா மாதிரிதானே இருக்கனும். சுறுசுறுப்பா இருக்கேன்னு, இன்னும் அம்மிக்கல்லுல சட்னி அரைக்க முடியுமா ? அப்பா, மனிதனின் எல்லைகள் ரொம்ப விரிய ஆரம்பிச்சாச்சு. இது இயற்கைக்கு முரணானது, சோம்பேறித்தனம், மனிதனையே அழித்துவிடும் – இந்த மாதிரி சாதா தாட்ஸையெல்லாம் விட்டுட்டு – இன்னும் என்னென்ன அற்புதங்கள் இருக்குன்னு மேல் நோக்கிப் பறக்கணும் ! “

“நீ என்னதான் சொல்லு..”

“என்ன ? அம்மா மனசுல என்ன இருக்குன்னு ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் சொல்லுமா ? அதானெ கேக்கப்போற ?”

“ஸூப்பர். பாத்தியா. நீ யோசிச்சா மாதிரி, உன் சிரி யோசிச்சிருக்குமா ?”

“ஹஹா.. நாம என்னென்னல்லாம் யோசிப்போம்னு நாளாக நாளாக கத்துக்கும். அதுல பெரிய வித்தை இல்லை. ஆனால், எந்த சமயத்துல எந்த எண்ணத்தை எடுப்போம்னு சிரி இல்லை… அந்த ப்ரம்மனால கூட யூகிக்க முடியாது.”

காலிங்க்பெல் அடித்தது. கடலை மாவு வந்துவிட்டது. கதவு திறந்து போய் வாங்கினான் ஆதி.

சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த கோமதிக்கு கம்பிப் பாகு – ‘பாகு பலி’யாகாமல் தப்பித்த மகிழ்ச்சி.

கலிஃபோர்னியாவில் டிசைன் செய்து சைனாவில் உருப்பெற்ற ஒரு ஆப்பிள் ஃபோன், ஒரு பாம்பே கம்பெனியின் உதவியுடன், மடிப்பாக்கத்தில் ஒரு வீட்டில் மைசூர்பாகு கிண்ட உதவிக்கொண்டிருக்கிறது.

Meanwhile, அது சுப்பையாவின் ஷுகருக்கு நல்லதா கெட்டதா என்று ஒரு மைக்ரோ சிப் சிறப்புப் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com