
காந்திஜி வாழ்வில் நடந்த சில சுவையான சம்பவங்களை பார்ப்போமா...
அண்ணல் காந்தியடிகளும் நேருவும் ஒரு சமயம் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர். வழியில் ஒரு பெரிய பள்ளம் இருப்பதை கண்ட நேரு சிறிது தூரம் பின்னால் சென்று வேகமாக ஓடி வந்து பள்ளத்தை தாண்டினார். காந்திஜியும் ஒரு நீளமான மரப்பலகையை போட்டு அதன் மீது ஏறி அந்த பள்ளத்தை கடந்தார். இதை பார்த்த நேரு 'என்னை போல் நீங்களும் ஓடி வந்து பள்ளத்தை தாண்டி இருக்கலாமே' என்று கேட்டார் காந்தியடிகளிடம். உடனே காந்திஜி சிரித்துக்கொண்டே, 'இந்த பள்ளத்தை தாண்ட நீங்கள் எவ்வளவு தூரம் பின்னால் சென்று ஓடி வந்தீர்கள் தெரியுமா? அப்படி நான் பின்வாங்க விரும்பவில்லை. இருந்த இடத்தில் இருந்தே முன்னேற விரும்புகிறேன்' என்று கூறினாராம்...
காந்திஜியிடம் எத்தனையோ சிறந்த பழக்கங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று ஒவ்வொரு நாளும் தான் செய்யும் செலவுகளை இரவு படுப்பதற்கு முன்னே தனது டைரியில் குறித்து வைப்பதாகும். தென் அமெரிக்காவில் இந்தியர் படும் துயரையும் அவர்கள் உரிமையற்ற மிருகங்களாக நடத்தப்படும் கொடுமையையும் இந்தியாவில் உள்ள மக்களுக்கு எடுத்துக் கூறி அவர்களது ஆதரவை திரட்ட இந்தியாவிற்கு கிளம்பினார் காந்திஜி. அப்போது செலவிற்காக எழுபத்தைந்து பவுன் காந்திஜியிடம் தரப்பட்டது. காந்திஜி இறுதியில் தனது பணிகளை முடித்துவிட்டு மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்றதும், தனது செலவு கணக்கை அங்கிருந்த மக்களிடம் ஒப்படைத்தார். அந்த கணக்கை பார்த்த அத்தனை பேரும் மலைத்து விட்டனர். காரணம் ஹோட்டல் செலவு, கப்பல் செலவு, அச்சுக்கூலி போன்ற பெரிய பெரிய செலவுகள் மட்டுமின்றி பாதை ஓரத்தில் இருந்த பிச்சைக்காரனுக்கு காலணா கொடுத்ததையும், தந்தி சேவகனுக்கு அரையணா டிப்ஸ் கொடுத்ததையும் கூட அதில் குறித்திருந்தார். இதை பார்த்த ஒரு சில இளைஞர்கள் காந்திஜியிடம், 'உங்களை நாங்கள் நம்ப மாட்டோமா? ஏன் ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு எழுதி உள்ளீர்கள்' என்று வருத்தத்துடன் கேட்டனர். அதற்கு காந்திஜி, 'நீங்கள் அளித்த ஒவ்வொரு பைசாவும் உங்கள் உழைப்பால் வந்த பணம். அதை எப்படி செலவழித்தேன் என்ற விவரங்கள் உங்களுக்கு தெரிய வேண்டாமா? அதனால் தான் ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு எழுதினேன்" என்றாராம்.
காந்திஜி ஏற்படுத்திய சபர்மதி ஆசிரமத்தில் அனைவரும் தங்களால் முடிந்தவரை உழைக்க வேண்டும் என்பது விதி. காந்திஜியும் கூட தினசரி தனக்காக ஒதுக்கப்பட்ட வேலையை செய்து முடிப்பார். தண்ணீர் இறைப்பது, மாவு இடிப்பது, ஆசிரமத்தை சுத்தம் செய்வது, போன்ற வேலைகளை ஆசிரமவாசிகள் தங்களுக்குள் பங்கிட்டு கொண்டு செய்து முடிப்பது வழக்கம். ஒருநாள் காந்திஜி வெளியூர் பயணம் முடித்துவிட்டு வந்து மிகவும் களைப்பாக இருந்தார். இதை பார்த்து ஆசிரம ஆசிரியர் கலேல்கர், 'இன்று நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பதிலாக தண்ணீர் இறைக்கும் வேலையை நான் செய்து விடுகிறேன்,' என்றார்.
காந்திஜி பிடிவாதமாக மறுத்து நீர் இறைக்க கேணிக்கு வந்துவிட்டார்.
காந்திஜியை எப்படியாவது இன்று தண்ணீர் தூக்க வைக்க கூடாது என்று விரும்பிய கலேல்கர், உடனே ஆசிரமத்திற்கு ஓடி, அங்கிருந்த சிறுவர்களை திரட்டி, 'காந்திஜி தண்ணீர் இறைத்து ஊற்ற ஊற்ற அத்தனை பானைகளையும் தூக்கிக் கொண்டு வந்து ஆசிரமத்தில் வைத்து விடுங்கள்' என்று கூறிவிட்டார். நீர் இறைத்து ஊற்ற ஊற்ற பானைகளை தூக்கிக் கொண்டு வந்து ஆசிரமத்தில் சேர்த்துவிட்டனர். ஒரு பானை நீரை கூட காந்திஜி தூக்கி வர ஆசிரமச் சிறுவர்கள் சம்மதிக்கவில்லை. இதை பார்த்த காந்திஜி, ஆசிரமத்திற்கு வந்து அங்கு சிறுவர்கள் குளிக்கும் தண்ணீர் தொட்டியை தூக்கி வந்து அதில் நீரை இறைத்து ஊற்றியதுடன் அத்தனை பெரிய தொட்டியை மிகுந்த சிரமத்துடன் தூக்கி வந்து ஆசிரமத்தில் சேர்த்தார். 'இவ்வளவு களைப்பாக இருக்கும் தாங்கள், இந்த வேலையை இன்று ஒரு நாள் செய்யாவிட்டால் என்ன? ஏன் இப்படி சிரமப்படுகிறீர்கள்?' என்று காந்தியிடம் ஆசிரமவாசிகள் கேட்டபோது, காந்திஜி சிரித்துக்கொண்டே சொன்னார், 'வேலைப் பங்கீட்டில் யாருக்கும் சலுகை கிடையாது. உடல் உழைப்பு எல்லோருக்கும் பொது என்னும் போது எனக்கும் இந்த வழி பொருந்தும்." என்பதே.
காந்திஜியின் மேஜையின் மேல் மூன்று குரங்கு பொம்மை வைக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் ஒருவர், 'இது ஏன் இங்கு வைக்கப்பட்டுள்ளது?' என்று கேட்டார்.
'இவை மூன்றும் என் குரு' என்று பதிலளித்தார் அடிகள். பின் சொன்னார், 'எனக்கு சரியாக நினைவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் சீன நண்பர் ஒருவர் இதை மகாதேவ் தேசாயிடம் கொடுத்திருந்தார். பின் இது அவரிடமிருந்து என்னிடம் வந்தது. மேலான உயர்ந்த நீதிகள் சீன பண்பாட்டில் இன்றும் அழியாது இருக்கின்றன. உயர்ந்த தத்துவத்தை கூறுகிறது இந்த பொம்மை. ஒருபோதும் பொய் பேசாதே, எவரையும் பழிக்காதே என்ற நீதியைச் சொல்லும் முதல் குரங்கு வாயை மூடிக்கொண்டுள்ளது. இரண்டாவது குரங்கு தன் கண்ணை பொத்திக்கொண்டு உள்ளது. இது கண்களால் தீயதை பாராதே என்று அறிவுறுத்துகிறது. நான் உலாவச் செல்கையில் பிறர் தோளில் கை வைத்துக் கொண்டு செல்கையில் கண்களை மூடி கொள்வதும் உண்டு. என்னை கவனமாக அழைத்து செல்கிறார்கள். இதனால் எனக்கு அமைதியும் ஆற்றலும் கிட்டுகிறது' என்று அடிகள் கூறினார். 'மூன்றாவது குரங்கு என்ன சொல்லுகிறது தெரியுமா?' என்று மறுபடியும் பேச்சை தொடர்ந்தார். 'தீய செயல்களையும் தீய சொற்களையும் கேளாதே என்கிறது. எத்துணை உயர்ந்த கோட்பாடு இது. செவியை தீய வழிக்கு திருப்புவது மனிதனின் அமைதியை குலைக்கிறது; மேலும் உள்ளத்தை மன்னிக்க இயலாத குற்றத்திற்கு இழுத்துச் செல்கிறது. நாம் எல்லோருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது. காந்திஜி அப்பொழுது உணவருந்திக் கொண்டிருந்தார். கைகளை கழுவிய பின், மீண்டும் தொடர்ந்தார், 'நான் விளையாட்டு பொம்மையை கலையோடு கூடியது என்று கருதுகிறேன். இதன் புறவடிவம் மட்டும் அழகானதல்ல. மறைந்திருக்கும் தத்துவமும் மனித இனத்திற்கு பயன் அளிக்கும். மனித சமூகத்தை முன்னேற்றாத கலையையும் மனிதனுக்கு நன்மை தராத கலையையும் கலை என்று சொல்ல முடியாது. கலை மனத்தை தூய்மைப்படுத்தி ஆன்மாவையும் தூய்மையாக்குகிறது. நான் இந்த குரங்குகளை அறிவுபூர்வமாக குரு என்று கருதுகிறேன். அவைகளை நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் எடுத்துச் செல்லுகிறேன். அடிக்கடி இவை எனக்கு பாடம் கற்பிக்கின்றன.'
தொகுப்பு : காந்திஜி வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் என்ற நூலில் இருந்து...