ஓ கனடா! என்ற தேசிய பாடல் எங்கும் ஒலிக்கப்படும் நாள் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி கனடா நாடு உருவாக்கப் பட்ட நாள். அதாவது, கனடாவின் தேசிய நாள். அன்று பொது விடுமுறை அனுசரிக்கப்படுகிறது. ஜூலை 1, ஞாயிற்றுக் கிழமையாக இருந்தால், அடுத்த நாள் பொது விடுமுறையாக அறிவிக்கப்படும்.
இந்த நாள் முதலில் “டொ மினியன் டே” என்று அழைக்கப்பட்டு வந்தது. ஜூலை 1, 1867 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் நார்த் அமெரிக்கா ஆக்ட் (தற்போது இதனை கான்ஸ்டிட்யூஷன் ஆக்ட் 1867, என்று குறிப்பிடுகிறார்கள்), மூலம் பல காலனிகளாக இருந்தவைகளை ஒன்றிணைத்து, கனடா உருவாக்கினார்கள். இதில் இணைக்கப்பட்ட காலனிகள் நியூ ப்ரன்ஸ்விக், நோவா ஸ்காடியா, மற்றும் ஒன்டாரியோ, க்யூபெக், லாப்ராடர் இணைந்த பகுதிகள். இதன் மூலம் கனடா, பிரிட்டிஷ் ஆட்சியில் அடங்கிய சுயமாக அரசை உருவாக்கும் அதிகாரமுள்ள நாடாக மாறியது.
1879ஆம் வருடம், ஜூலை 1 பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டு, இந்த நாளை “டொமினியன் டே” என்று குறிப்பிட்டார்கள். ஆனால் இந்தப் பெயர் காலனி ஆதிக்கத்தை நினைவு படுத்துவதாகக் கருத்து நிலவியது. 1982ஆம் வருடம் கனடா நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து, கனடாவில் பிரிட்டனுக்கு இருந்த அதிகாரத்தை முடிவிற்கு கொண்டு வந்து, முழு சுதந்திர நாடாக கனடாவை அறிவித்தார்கள். அதனால், அக்டோபர் 27, 1982ல் “டொமினியன் டே” என்பதை “கனடா டே” என்று மாற்றினார்கள்.
ஜூலை 1, 1980, “ஓ கனடா” கனடாவின் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு மொழியில் உள்ள இந்தப் பாடல் முதன் முதலில் க்யூபெக் நகரில் ஜூன் 24, 1880 இல் இசைக்கப்பட்டது.
இந்த வருடம் ஜூலை 1, கனடா தன்னுடைய 157வது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது.
எங்கு பார்க்கினும் சிவப்பும் வெளுப்பும் கலந்த கனடா நாட்டுக் கொடி பறப்பதைப் பார்க்கலாம். பெரும்பாலான வீடுகளில் கொடி ஏற்றப்பட்டிருக்கும். இருபுறமும் சிவப்பு வண்ணப் பட்டை. இடையில் வெள்ளை நிறம். அதன் நடுவில் சிவப்பு நிறத்தில் மேப்பிள் பூ. இதுதான் கொடியின் அமைப்பு. பெரும்பாலான மக்களின் உடையில் ஒரு பகுதியாவது, மேல்சட்டை, கால்சட்டை அல்லது அணிந்திருந்த தொப்பி, சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும் சிலர் “ஐ லவ் கனடா” என்ற டீ ஷர்ட் அணிந்து வலம் வருவர். கையில் கொடியுடன் மக்கள் செல்வதைக் காணலாம்.. முகத்தில் சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தை, வர்ணமடித்துக் கொண்டு வருபவர்களும் உண்டு. “ஓ கனடா” என்ற கனடாவின் தேசிய கீதம் எங்கும் ஒலித்த வண்ணம் இருக்கும். உலகின் பல பாகங்களிள் இருந்து கனடாவில் குடியேறிய பல நாட்டைச் சேர்ந்த மக்களும் கையில் கொடியுடன் கனடா நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
கனடாவில் பூங்காக்கள் அதிகம். அங்கெல்லாம் மக்கள் வெள்ளம். இசை நிகழ்ச்சிகள், திறந்தவெளி விருந்து, அணிவகுப்பு, சிறுவர்களுக்கென்று பலவகையான போட்டிகள், தேசப்பற்றைத் தூண்டும் நடவடிக்கைகள் என்று பல நிகழ்வுகள் நடைபெறும். எல்லா நகரங்களிலும் பெரிய அணிவகுப்புகள் நடை பெறும்.
வண்டி நிறுத்துவதற்கென்று மீட்டர் பொருத்திய இடங்கள் உண்டு. இந்த இடம் தவிர வேறு இடங்களில் வண்டி நிறுத்தினால் அதற்கு அபராதம் உண்டு. ஆனால் கனடா நாளன்று மக்கள், எங்கு வேண்டுமானாலும் வண்டி நிறுத்திக் கொள்ளலாம். அபராதம் இல்லை என்று காவல் துறை அறிவிப்பைக் காணலாம். இரவில் பலவகையான வாணவேடிக்கைகளுடன் கனடா நாள் கொண்டாட்டங்கள் முடிவிற்கு வரும்.
இவற்றிற்கு முத்தாய்ப்பு வைத்தாற்போல டொரோணா நகரிலுள்ள 553 மீட்டர் உயரமுள்ள சி.என்.டவரில் வண்ண எல்.சி.டி விளக்குகளால் ஒளிரப்படும் கனடாவின் தேசியக்கொடி கண்ணைக் கவரும் நிகழ்வு. எல்லாவற்றையும் விட பெரிய கொண்டாட்ட நிகழ்வுகள் தலைநகர் ஒட்டாவாவில் நடைபெறும்.
அரசு கொடியேற்றும் அரசியல் விழாவாக இல்லாமல், மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்கும் தேசிய விழாவாக கனடா நாள் அனுசரிக்கப்படுகிறது. நம்முடைய சுதந்திர தினத்தையும் இதைப் போலவே கொண்டாடினால், தேசிய உணர்வுகள் மேலும் வலுப்பெறும். இப்போது சில வருடங்களாக வீட்டில் கொடியேற்றுவதை அரசு ஊக்குவிக்கிறது.
ஆனால் கொடியேற்றுவதற்கான விதிமுறைகளில் பலருக்கும் புரிதலில்லை. விதிமுறைகள் பரவலாக்கப்பட்டு, மக்கள் விழாவாக சுதந்திர தினமும், குடியரசு தினமும் கொண்டாடப்பட வேண்டும்.