மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அனைத்து மாநிலங்களிலும் அறிவிக்கப் பட்டது. அப்படி முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப் பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வது குறித்து நேற்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று நடத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. அதையடுத்து இன்று முதல் அம்மாநிலத்தில் முகக்கவசம் அணிவது அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடிய கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்த்து போராடியதில் இப்போது அந்த துயரம் மறைந்து வருவதாக தெரிகிறது. எனவே கொரோனா ஊரடங்குக்கு முன்பு இருந்ததுபோல அனைவரும் செயல்படத் துவங்கலாம். மக்கள் அவரவர் சொந்த விருப்பத்தின் பேரில் முகக்கவசம் அணிய விரும்பினால் அணிந்து கொள்ளலாம். மற்றபடி இன்று முதல் முக்கவசம் அணிவது கட்டாயமல்ல.
-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.