மதுரை சித்திரை திருவிழா: நாளை கொடியேற்றம்!

மதுரை சித்திரை திருவிழா: நாளை கொடியேற்றம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற சித்திரைத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்ததாவது:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற சித்திரைத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. அதையடுத்து  தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று (ஏப்ரல் 14) மீனாட்சித் திருக்கல்யாணம் நடைபெறும். அதற்கடுத்த நாள் தேரோட்டமும் நடைபெறும். ஏப்ரல் 16-ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவமும் நடைபெறும்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த சித்திரை திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இப்போது நாட்டில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து இந்த வருட சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்குபெற அனுமதி வழங்கப்படும்.

-இவ்வாறு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரசித்தி பெற்ற இந்த மதுரை சித்திரை திருவிழா நாளை காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. இதையடுத்து தினமும் காலையிலும், இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். விழாவில் வருகிற 12-ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13-ம் தேதி திக்விஜயம் நடைபெறும்.

அதையடுத்து ஏப்ரல் 14-ம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும். இத்திருக்கல்யாணத்தை காண சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான கட்டணச்சீட்டு முன்பதிவை www.maduraimeenakshi.org என்ற இணைய தளத்தில் இன்று முதல் 7ஆம் தேதி வரை செய்து பெறலாம். மேலும் 16-ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளி தீர்த்தவாரியுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறும்.

-இவ்வாறு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com