தற்காலிக ஆசிரியர் பணிக்கு வாய்ப்பு!

தற்காலிக ஆசிரியர் பணிக்கு வாய்ப்பு!
Published on

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியராக பணியாற்ற நாளை (ஜூலை 6) வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

-இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது;

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் படி வழங்கப்படுகிறது.

பள்ளிக் கல்வித்துறை வரையறுத்துள்ள கல்வித்தகுதிகள் அடிப்படையில் கடந்த ஜூன் 1-ம் தேதி வரை காலியாக உள்ள பணியிடங்களை மட்டுமே நிரப்ப வேண்டும்.

இந்த பணிக்கு விருப்பமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகளிடம் நாளை (ஜூலை 6) மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். அவற்றை, மாவட்ட கல்வி அதிகாரிகள் தொகுத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர் பணிக்கு 'டெட்' முதல் தாள் தேர்விலும், பட்டதாரி ஆசிரியருக்கு 'டெட்' 2-ம் தாள் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர் பணிக்கு முதுநிலை பட்டயப்படிப்புடன் பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தால் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும்.

இடைநிலை, பட்டதாரி பணிக்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள், அல்லது 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

முதுநிலை ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள், அல்லது பள்ளி அருகே வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

இதில் தகுதி பெறும் பட்டதாரிகளை வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வைத்து, அவர்களின் திறனறிந்து பின்னர் பணி நியமனம் செய்ய வேண்டும்.

மேலும், இந்தப் பணியிடம் தற்காலிகமானது. பணி மற்றும் நடத்தையில் திருப்தி இல்லையெனில் உடனடியாக விடுவிக்கப்படுவர் என பட்டதாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.பணி நியமனங்களை புகாருக்கு இடமளிக்காதவாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com