ஹிஜாப் விவகாரம்: கர்நாடகா மாணவிக்கு அல்கொய்தா தலைவர் பாராட்டு!

ஹிஜாப் விவகாரம்: கர்நாடகா மாணவிக்கு அல்கொய்தா தலைவர் பாராட்டு!
Published on

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய அனுமதி கேட்டு வலியுறுத்தும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அம்மாநிலத்தின் இஸ்லாமிய மாணவி முஸ்கானுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி பாராட்டு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 8 ம் தேதி மண்டியாவில உள்ள தனியார் கல்லூரியில் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது முஸ்கான் என்ற மாணவி முன்பு 'ஜெய்ஸ்ரீராம்' என்று கோஷமிட, அதற்கு அந்த மாணவி 'அல்லாஹு அக்பர்' என பதில் கோஷமிட்டபடி நடந்து சென்றார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாபுக்கு தடைவிதித்தும் அனைவருக்கும் பொதுவான சீருடை அணிய வேண்டும் என்றும் கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதை கர்நாடக உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன.

இந்நிலையில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி,  இந்தியாவின் ஹிஜாப் பிரச்சனை குறித்து பேசி, அந்த அமைப்பின் ஷபாப் ஊடகத்தில் 9 நிமிட வீடியோ வெளியிடப் பட்டுள்ளது. அதில் அவர் பேசியதாவது:

ஹிஜாப் தொடர்பான அடக்குமுறைக்கு எதிர்வினையாற்ற வேண்டும். 'அல்லாஹு அக்பர்' என கோஷமிட்ட அந்த மாணவி முஸ்கான்  'இந்தியாவின் உன்னத பெண்'.

இந்த பெண் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவைப் பார்த்து மனம் உருகினேன். அவரது துணிவை நான் கவிதை மூலம் பாராட்ட முடிவு செய்தேன்.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  அல் கொய்தா அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன் மறைவுக்கு பிறகு, அப்பதவிக்கு அய்மன் அல் ஜவாஹிரி பொறுப்பேற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தேடப்படும் பயங்கரவாதியாக கருதப்படும் அய்மன் அல் ஜவாஹிரி  தர்போது ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com