கோவை சின்னியம்பாளையத்தில் தேசிய கயிறு வாரியம் சார்பில் 2 நாள் மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து கயிறு சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர் கலந்து கொண்டுள்ளனர்.
இம்மாநாட்டின் துவக்கத்தில் முதலில் கணபதி ஹோமம் மந்திரம் பாடப்பட்டு, அதன் பின்னரே தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழக அரசு விழாக்களில் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்றும், அச்சமயம் அவையில் உள்ளோர் எழுந்து நிற்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இச்சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிகழ்ச்சியில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே, இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா, தமிழக சிறுகுறு நடுத்தர தொழில்கள் மற்றும் நகர்புற வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கயிறு வாரிய தலைவர் குப்புராமு, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில், கயிறு தொழிலை மேம்படுத்துவது கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடந்த 4 ஆண்டுகளில் சிறந்த முறையில் தொழிலில் ஈடுபட்ட தொழில் முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அரசு நிகழ்ச்சியில் கணபதி ஹோமம் பாடப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, கணபதி ஹோமம் அனைவருக்கும் பொதுவானது என தெரிவிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.