நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை நியமன எம்.பியாக இசைஞானி இளையராஜாவை மத்திய அரசு தேர்வு செய்ததற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் பலரின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், அப்பதவிகளுக்கு நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
அந்தவகையில் இசைஞானி இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, திரைக்கதை எழுத்தாளரும் இயக்குனருமான விஜயேந்திர பிரசாத் மற்றும் கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா கோவில் நிர்வாகி வீரேந்திர ஹெக்டே ஆகியோரை மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரை செய்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:
இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட 'இசைஞானி' இளையராஜா அவர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்!
–இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், "ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த சாதனையாளர்.
தன் கடின உழைப்பால் கலையுலகில் உச்சம்தொட்டவர். முத்தமிழறிஞர் கலைஞரால் இசைஞானி என்று போற்றப்பட்டவர். மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் ஐயா இளையராஜா அவர்களுக்கு என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.