இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து புதிய பிரதமராக யார் தேர்வாகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இங்கிலாந்தில் பாலியல் குற்றச்சாட்டு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான கிறிஸ்டோபர் பின்ச்சர் என்பவரை, பிரதமர் போரிஸ் ஜான்சன் துணை தலைமை கொறடாவாக நியமித்ததையடுத்து அந்நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, பின்ச்சர் நியமனத்திற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
ஆனால் போரிஸ் ஜான்சன் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி அடைந்த அந்நாட்டு நிதியமைச்சரும் இந்தியருமான ரிஷி சுனக் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித்தும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் வரிசையாக பல்வேறு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால், போரிஸ் ஜான்சன் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து,தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.மேலும் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை தான் பதவியில் தொடர இருப்பதாக அறிவித்துள்ளார்.
ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியதால், புதிய பிரதமரைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் புதிய பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரூஸ் ஆகீயோரின் பெயர்கள் பரிசீலிக்கப் படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.