மயிலாப்பூர் தம்பதி படுகொலை; இன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை!
சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஶ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் (மே 7) படுகொலை செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொன்டு செல்லப்பட்டது. இன்று பிரேதப் பரிசோதனை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஶ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா நேற்று முன் தினம் (மே 7) அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினர். அதன்பின்னர் அமெரிக்காவிலிருந்து அவர்களது மகன் சஸ்வத் போனில் தொடர்பு கொண்டபோது, பெற்றோர் இருவரின் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கார் டிரைவர் கிருஷ்ணாவின் போனும் அணைக்கப் பட்டிருந்தது. இதனால் கலவரமான சஸ்வத், சென்னையிலுள்ள தன் உறவினர் ரமேஷ் பரமேஸ்வரனை அனுப்பி பார்க்கச் சொன்னார். அவர் சென்று பார்த்தபோது ஶ்ரீகாந்த் தம்பதி வீட்டில் இல்லை என்பதும் வீடு களேபரமாக காணப்பட்டதாலும் சந்தேகமடைந்து போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், ஸ்ரீகாந்த் வீட்டில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்கிற மதன்லால் கிருஷ்ணா, டார்ஜிலிங்கில் உள்ள தனது நண்பர் ரவியுடன் இணைந்து இந்த கொடூர சம்பவத்தை நடத்தியது தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் இன்னோவா காரில் தப்பிச் செல்லும் வகையில் ஆந்திர மாநிலம் ஓங்கோல் சோதனை சாவடியில் இருப்பது தெரியவந்தை அடுத்து, ஆந்திர போலீஸாரின் உதவியுடன் அவர்களைக் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் விசாரணையில் குற்றவாளிகள் தெரிவித்ததாவது:
ஶ்ரீகாந்த் சமீபத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்த தனது நிலத்தை 40 கோடி ரூபாய்க்கு விற்றதாகச் சொன்னதைக் கேட்டு, அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டோம். அமெரிக்காவில் இருந்து அவர்கள் வீடு திரும்பியபோது நான்தான் கார் ஓட்டி வந்தேன். ஆனால் வீட்டில் அவர்களை கொலை செய்துவிட்டுத் தேடியபோது, பணம் கிடைக்கவில்லை.
அதனால் தங்கம், வெள்ளி ஆகியவற்றை மூட்டை கட்டி எடுத்து கொண்டு, அவர்கள் உடல்களை கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலி அருகில் உள்ள சூளேரிக்காடு பகுதியில் இருந்த அவர்களின் பண்ணை வீட்டில் உடல்களைப் புதைத்தோம். பின்னர் கொள்ளையடித்த நகைகளுடன் நேபாளம் செல்ல முற்பட்டோம்.
-இவ்வாறு அந்த குற்றவாளிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணாவின் தந்தை 20 ஆண்டுகளாக அந்த பண்ணை வீட்டில் காவலாளியாகப் பணிபுரிந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சென்னை தெற்கு கூடுதல் இணை ஆணையர் கண்ணன், மயிலாப்பூர் உதவி ஆணையர் கவுதம் முன்னிலையில் குற்றவாளி கிருஷ்ணா, அவரது கூட்டாளி ரவி ஆகியோரை அழைத்துவந்து போலீசார் 6-அடி பள்ளத்தில் புதைக்கப்பட்டிருந்த இருவரின் சடலங்களை தோண்டி எடுத்தனர்.
தொடர்ந்து அவர்களது உடல் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இன்று பிரேத பரிசோதனை நடததப்படவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.