இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கலவரமும் வன்முறையும் வெடித்துள்ளது. இதையடுத்து பிரதமர் பதவிலிருந்து விலகிய மஹிந்த ராஜபக்சே, அங்கிருந்து குடும்பத்துடன் தப்பி வெளிநாடு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் வீடு தீக்கிரையாக்கப் பட்டது.
இந்நிலையில் சொந்த நாட்டு மக்களால் ராஜபக்சே விரட்டப்படுவதைக் கொண்டாடும் வகையில் கோவையில் இன்று இடது சாரி மற்றும் முற்போக்கு அமைப்பினர் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். கோவை சிங்காநல்லூரில் அவர்கள் சாலை நடுவே பட்டாசுகளை வெடித்தும், அப்பகுதி வழியாக செல்வோருக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது:
இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழகர்களை கொன்று குவித்த ராஜபக்சே இன்று தன் உயிருக்கு பயந்து ஒடி ஒளிந்து கொண்டுள்ளார். தன் வினை தன்னை சுடும் என்பது போல, அவர் இன்று தன் சொந்த நாட்டு மக்களாலேயே விரட்டப்படுகிறார். இதனை கொண்டாடும் விதமாகவே பட்டாசுகள் வெடித்தோம்.
–இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.