இந்தியாவில் இருந்து வெளியேறி கைலாசா தீவில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும், சுவாமி நித்தியானந்தா தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக தகவல்கள் பரவிய நிலையில், இதுகுறித்து , நித்யானந்தா சார்பில் தெரிவிக்கப் பட்டதாவது:
சர்ச்சைக்குப் பெயர்போன சாமியாரான நித்யானந்தா மீது பாலியல் புகார்கள் உட்பட பல புகார்கள் குவிந்த நிலையில், . தென்பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவுக்கு அவர் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது. கைலாசா நாடு என்று அறிவிக்கப்பட்ட அத்தீவிலிருந்து நித்யானந்தா தினமும் சமூக வலைதளங்கள் வழியாக சொற்பொழிவாற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில், நித்யானந்தா இறந்து விட்டதாகவும், அவர் ஏற்கனவே பேசிய விடியோக்கள் இப்போது பதிவிடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட விடியோவில் நித்யானந்தா உடல் மெலிந்து நேரில் தோன்றி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது,
என் உடலுக்கு என்ன ஆனதென்றே தெரியவில்லை. எனக்கு 27 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்று அவர்கள் ஆய்வு செய்கிறார்கள். தினப்படி பூஜை மட்டும் நடக்கிறது.
மற்றபடி என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. உணவு கொள்ளவில்லை. தூங்க முடியவில்லை. எனக்கு நன்கு அறிமுகம் ஆனவர்களைக்கூட அடையாளம் காண முடியவில்லை. நான் சாகவில்லை. ஆனால், சமாதி நிலையை அடைந்திருக்கிறேன். விரைவிலேயே பரிபூரண நலம் பெற்று திரும்புவேன்.
-இவ்வாறு நித்யானந்தா பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.