கும்பாபிஷேகம் காண ஹெலிகாப்டரில் வந்த குடும்பம்!

கும்பாபிஷேகம் காண ஹெலிகாப்டரில் வந்த குடும்பம்!
Published on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே  தெற்கு தீத்தாம்பட்டி கிராமத்திலுள்ள ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.இக்கோயிலில் கன்னி விநாயகர், சுப்பிரமணியர் வள்ளி , தெய்வானை ஆகிய கடவுளரும் உண்டு . இக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலையில் சிறப்பு யாகங்கள், பூஜை மற்றும் அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. இந்த விழாவில் ஏராள்மான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையை அடுத்த கும்மிடிபூண்டியிலிருந்து நடராஜன் என்பவர் தன் குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்க, ஊர்மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

இதுகுறித்து நடராஜன் தெரிவித்ததாவது;

எங்களுக்கு பூர்வீகம் இந்த தெற்கு தீத்தாம்பட்டி கிராமம்தான். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை பாலசுப்பிரமணியன் குடும்பத்துடன் கும்மிடிப்பூண்டிக்கு குடிபெயர்ந்து விட்டார். அங்கு நான் இரும்பு கடையும் என் சகோதரர் ராஜதுரை ஜவுளிக்கடையும் வைத்துள்ளோம். எனக்கு சிறுவயது முதலே ஹெலிகாப்டரில் செல்ல ஆசை. அதே போன்று என் மகன் மோகித்துக்கும் ஹெலிகாப்டரில் செல்ல ஆசை. இதையடுத்து என் தந்தை இந்த கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்தார்.

பெங்களூரில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மூலமாக ஏற்பாடு செய்தார். அதன் படி நான், என் மனைவி சுந்தரவள்ளிமகன் மோகித், சகோதரர் ராஜதுரை, உறவினர் அசோக் ஆகிய 5 பேரும் கும்மிடிப்பூண்டியில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக தெற்கு தீத்தாம்பட்டிக்கு வந்தோம்.

இவ்வாறு நடராஜன் தெரிவித்தார்.

ஊர்க்கார மக்கள் ஹெலிகாப்டர் மற்றும் நடராஜன் குடும்பத்தினருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.  நடராஜன் தனது குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் அதே ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com