புத்த பூர்ணிமா சிறப்பு: புத்தர் பிறந்த லும்பினியில் பிரதமர் மோடி தரிசனம்!

புத்த பூர்ணிமா சிறப்பு: புத்தர் பிறந்த லும்பினியில் பிரதமர் மோடி தரிசனம்!

Published on

பிரதமர் நரேந்திர மோடி, புத்த பூர்ணிமாவையொட்டி நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவின் அழைப்பின் பேரில் இன்று ஒரு நாள் அரசுமுறை பயணமாக நேபாளம் சென்றுள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்ததாவது:

பிரதமர் மோடி மேற்கொள்ளும் ஐந்தாவது நேபாள பயணம் இதுவாகும். புத்தரின் பிறப்பு, ஞானோதயம், புத்தரின் முக்தி ஆகிய மூன்றும் மே மாதம் பவுர்ணமி நாளில் புத்த பூர்ணிமா தினமாக பெளத்தர்களால் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இன்று கொண்டாடப்படும் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு புத்தர் பிறந்த இடமான லும்பினியில் தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி நேபாளம் சென்றுள்ளார். அவரை நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.

பின்னர் இருவரும் லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் தரிசனம் செய்தனர். நேபாள அரசின் கீழ் உள்ள லும்பினி வளர்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

தொடர்ந்து புத்த துறவிகள் மடத்தில் புத்த கலாச்சார பாரம்பரிய மைய அடிக்கல் நாட்டு விழாவில் மோடி பங்கேற்கிறார். இதையடுத்து நேபாள பிரதமருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கல்வி, கலாச்சாரம் உறவை வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகள் இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன

-இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாளத்துக்கு பிரதமர் மோடி செல்வதை முன்னிட்டு, இந்தியநேபாள எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com