நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பு 22 ஆக நிலையில், நேற்று ஒரே நாளில் 476 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரு கொரோனா உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா தொற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
–இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாவது:
சென்னை விமான நிலையத்துக்கு வரும் அனைவருக்கும் முக கவசம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அப்படி முககவசம் அணியாத பயணிகள் விமானத்தில் ஏற தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் விமான நிலையத்தின் பல பகுதிகளிலும் "நோ மாஸ்க், நோ எண்ட்ரி" என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
பயணிகள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், பயணிகள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றுகளோடு வரும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப் படுகிறது.
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை சோதனை தீவிரப் படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா பரிசோதனையும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் மீண்டும் தீவிரமாக அமல்படுத்தப் படுகிறது. அந்த வகையில் மாஸ்க் அணியாமல் சென்னை விமான நிலையத்திற்கு வருபவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
-இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.