நாட்டின் புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் இன்று நடக்கவுள்ளது.
நாட்டின் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் இம்மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ளதை அடுத்து, நாட்டின் அடுத்த புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
இத்தேர்தல் ஜூலை 18- ம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப் பட்ட நிலையில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்ற அலுவலகம், மாநில சட்டசபை அலுவலகங்களில் இதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த தேர்தலில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் பெரும்பான்மை பெற்றவர் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் படுவார்.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்முவும் அறிவிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் திரௌபதி முர்முவிற்கு என்டிஏ கூட்டணி கட்சிகள் தவிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் ஆதரவளித்துள்ளன. இதனால் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று திரௌபதி முர்மு வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முடிவுகள் ஜூலை 21-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் வெற்றிபெறும் புதிய குடியரசு தலைவர் ஜூலை 25 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.