தமிழக ஆளுநர் வாகனம் வழிமறிப்பு; நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபிக்கு கோரிக்கை!

தமிழக ஆளுநர் வாகனம் வழிமறிப்பு; நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபிக்கு கோரிக்கை!
Published on

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி விஷ்வேஷ் சாஸ்த்ரி தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தருமபுரம் ஆதினம் சென்றபோது, ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை மன்னம்பந்தல் அருகே சிலர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆளுநரின் வாகனம் அருகே மக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, போராட்டக்காரர்கள் கொடிகளையும் பதாதைகளையும் வீசி எறிந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இச்சம்பவத்தின்போது, ஆளுநரின் வாகனம் மீது கற்கள் வீசப்பட்டதாக கூறப்படுவது உண்மையல்ல என்று காவல்துறை விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் இதுதொடர்பாக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி விஷ்வேஷ் சாஸ்த்ரி, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டதாவது:

தமிழக ஆளுநரின் வாகனத்தை போராட்டக்காரர்கள் வழிமறித்து, அவரை பணி செய்யவிடாமல் தடுக்கும் வகையில் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ஆளுநருக்கோ, அவரின் வாகனத்துக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதே சமயம் ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக இந்திய தண்டனைச் சட்டம் 124-ன் படி அந்த போராட்டக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இவ்வாறு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியான விஸ்வேஷ் சாஸ்த்ரி தனது கடிதத்தில் டிஜிபி-க்கு வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னையிலிருந்து கிளம்பி டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com