தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டம் வன்முறையாக வெடித்ததற்கு சமூக விரோதிகள் ஊடுருவியதன் காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் அன்று கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ''சமூகப் போராட்டம் நடத்துபவர்கள் எல்லாம் சமூக விரோதிகளா? என்று ரஜினிக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்தில் ரஜினி அன்று சொன்னது உன்மையாகி விட்டது என்று ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவியின் மரணம் தொடர்பான விவகாரத்தில் நடந்த வன்முறை தமிழகத்தையே கலங்க வைத்துள்ளது. இந்நிலையில், மாணவர்கள் என்கிற போர்வையில் பல்வேறு அமைப்பினர் இணைந்து திட்டமிட்டு நடத்திய போராட்டம் தான் வன்முறையாக வெடித்திருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மற்றும் கள்ளக்குறிச்சி சம்பவங்களை மேற்கோள் காட்டி ரஜினி ரசிகர்கள், 'அன்றே சொன்னார் ரஜினி' என்றும் 'நான்தாண்டா ரஜினிகாந்த்' போன்ற ஹேஷ்டேக்குகளை பிரபலமாக்கி வருகின்றனர். தமிழக பாஜக செயலாளர் வினோத் பி.செல்வமும் 'அன்றே சொன்னார் ரஜினி' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.