பெட்ரோல், சமையல் எரிவாயு விலையுயர்வு: நாடாளுமன்றத்தில் கடும் அமளி!

பெட்ரோல், சமையல் எரிவாயு விலையுயர்வு: நாடாளுமன்றத்தில் கடும் அமளி!
Published on

நாடாளுமன்றத்தின் 2-வது பட்ஜெட் கூட்டத் தொடர் இரு அவைகளிலும் நடந்து வரும் நிலையில், இன்று மக்களவையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் விலையுயர்வு குறித்து உடனடியாக விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்த நிலையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் இந்த வெளி நடப்பில் பங்கேற்றனர்.

மாநிலங்களவையிலும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவைத் தலைவர் வெங்கையா நாயுடு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்ததால், பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் தொடர் முழக்கம் எழுப்பினர்.

அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சிகள் இந்த விலை உயர்வு குறித்து பின்னர் விவாதிக்கலாம் என்ற வெங்கையா நாயுடுவின் ஆலோசனையை ஏற்காத நிலையில், மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை 12 மணிக்கு கூடிய போதும் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்தில் ஈடுபட்டதால், அவை இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

சமையல் எரிவாயு உருளையின் விலை ஆயிரம் ரூபாயை தொடும் நிலையில் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். டீசல் விலை உயர்வு பணவீக்கத்தை மேலும் அதிகப்படுத்தி விலைவாசி உயர்வை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.

இப்படி இரண்டு அவைகளிலும் எரிபொருள் விலை உயர்வு குறித்து கடும் அமளி நடைபெற்றது. நாட்டின் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த கையோடு, இந்த விலை உயர்வை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com