துபாய் சர்வதேச எக்ஸ்போ கண்காட்சி:  தமிழகம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பயணம்!

துபாய் சர்வதேச எக்ஸ்போ கண்காட்சி:  தமிழகம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பயணம்!

Published on

துபாயில் நடைபெறும் சர்வதேச எக்ஸ்போ தொழிற் கண்காட்சியில் தமிழகம் சார்பாக கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று துபாய் செல்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது:

துபாயில் நடைபெறும் சர்வதேச எக்ஸ்போ தொழிற்கண்காட்சியில்  192 நாடுகள் பங்கேற்றுள்ளன. இக்கண்காட்சியில் இந்திய அரசு சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு சார்பில் இக்கண்காட்சியில் கலந்து கொண்டு தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துபாய் செல்ல உள்ளார். இன்று மாலை சென்னையிலிருந்து புறப்பட்டு அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி செல்லவுள்ளார்.  துபாய் எக்ஸ்போவில் தமிழ்நாடு அரங்கை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார். மேலும் தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அங்கு பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களுடனும், முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தவுள்ளார்

-இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் இந்த துபாய் பயணத்தின்போது  சார்ஜாவில் உள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த பயணத்தில் முதல்வருடன் எம்.எம். அப்துல்லா எம்.பி., மற்றும் முதலமைச்சரின் தனி செயலாளர்கள் உள்ளிட்டோரும் செல்கின்றனர்.  இந்த துபாய் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு வரும் 28-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தமிழகம் திரும்புவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com