கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் பக்தர்கள் கனகசபையின் மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக அங்கு சமீபகாலமாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவர சிதம்பரத்தில் 1 மாத காலத்துக்கு 144 தடை உத்தரவை கோட்டாட்சியர் ரவி நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது;
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக சிதம்பரம் நகர பகுதியில் எவ்வித போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ நடத்தக்கூடாது. மேலும் கூட்டமாக கூடி ஆலோசனை மேற்கொள்ளுதலும் ஒரு மாத காலத்திற்கு செய்யக்கூடாது.
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 144-ன்படி இந்த தடை உத்தரவு சிதம்பரத்தில் 1 மாதத்துக்கு பிறப்பிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு நேற்று (மார்ச் 24) கோட்டாட்சியர் ரவி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் நேற்று மாலை போடப்பட்ட இந்த 144 தடை உத்தரவு உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோட்டாட்சியர் ரவி தெரிவித்ததாவது:
சிதம்பரம் கோவில் கனகசபை விவகாரம், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கும். எனவே சிதம்பரத்தில் போடப்பட்ட தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுகிறது.
-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.