நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர்: திரௌபதி முர்மு பதவியேற்றார்!

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர்: திரௌபதி முர்மு பதவியேற்றார்!

Published on

நாட்டின்15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று காலையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

நாட்டின் 14-வது ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்த்தின் பதவி முடிவடைந்ததையடுத்து, புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு, இன்று காலையில் நாடாளுமன்றத்தில் பொறுப்பேற்றார்.  அதற்கு முன்பாக அவர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று முந்தைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். பின்னர் இருவரும் அங்கிருந்து புறப்பட்டு தனித்தனி கார்களில் குதிரைப்படையினர் புடை சூழ நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தனர். பின்னர் அணிவகுப்பு மரியாதையுடன் நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வந்த இருவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், எம்.பி.க்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், ராணுவ தளபதிகள் ஆகியோர், புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்கும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

விழா அரங்கினுள் முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு (64) பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அதன் பிறகு 21 குண்டுகள் முழங்க புதிய குடியரசுத் தலைவருக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com