ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடிகர் வில் ஸ்மித், நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் என்பவரை விழா மேடையிலேயே தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு கிடைக்கப் பெற்றது. இந்த விழாவுக்கு வருகை தந்த வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் முடி உதிர்தல் தொடர்பான அலோபீசியா நோயால் தலையில் முடியின்றி காணப்பட்டார்.
இந்த நிலையில் இந்த விழாவின் போது, சிறந்த ஆவணப்படத்திற்கான விருதினை வழங்க பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் மேடைக்கு வந்தார். அப்போது வில் ஸ்மித்திடம் பேசிய அவர், ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் சிகை அலங்காரம் குறித்து விமர்சித்தார். 1997-ம் ஆண்டில் வெளியான ஜி.ஐ. ஜேன் திரைப்படத்தில் நடித்த நடிகை டெமி மூரின் சிகை அலங்காரத்துடன் ஒப்பிட்டு அவரை கேலியாக பேசினார்.
இதனால் கோபம் அடைந்த நடிகர் வில் ஸ்மித், மேடைக்கு சென்று கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.வில் ஸ்மித் தனது இருக்கைக்கு திரும்பிய பின்னரும் ராக் விமர்சித்ததை தொடர்ந்தார். இதனால் ஆத்திரத்தில் உச்சிக்கு சென்ற ஸ்மித், அங்கிருந்தபடியே 'என் மனைவியின் பெயரை உன் வாயிலிருந்து விலக்கிவிடு' என மோசமான வார்த்தைகளால் கிறிஸ் ராக்கை கடுமையாகத் திட்டினார். இதையடுத்து ஆஸ்கார் விருது விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வருடம் சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை "CODA" படம் வென்றது. இதே படத்தில் நடித்த Troy Kotsur சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இவர் கேட்கும் திறன் அற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வருடம் சிறந்த இயக்குனருக்கான விருது ஜேன் கேம்பியன் பெற்றார். இவருக்கு 'The Power of the Dog' என்ற படத்தை இயக்கியதற்காக இந்தமுறை ஆஸ்கார் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.