
கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடைவிதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அங்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.
அங்கு ஹிஜாப் அணிந்து பியூ கல்லூரிகளுக்கு வந்த மாணவியருக்கு எதிராக இந்துத்துவா மாணவர்கள் போராட்டம் செய்தனர். இதையடுத்து வகுப்பிற்கு ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளங்களை அணிந்து வர கூடாது என்று மாநில அரசு கட்டுப்பாடு விதித்தது.
இந்த வழக்கில் கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஹிஜாப் என்பது அடிப்படை மத உரிமைகளில் சேராது. இது இஸ்லாமில் உள்ள அடிப்படை பழக்க வழக்கங்களில் ஒன்று கிடையாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. இதனால் கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும் என்று கர்நாடக உயர்நீத்மன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம், இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் தெரிவித்ததாவது:
இஸ்லாமியர்களின் குரானை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். தவறான முன் உதாரணங்களை காட்டி வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளதால் அந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.
-இவ்வாறு அந்த மனு தாக்கலில் குறிப்பிட்டுள்ளனர்.