நாடு முழுவதும் அரசுத் துறைகளை தனியார் மயமாக்குதல், மின்சார திருத்த சட்டம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இரண்டுநாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தாம்பரம் போக்குவரத்து பணிமனையில் மட்டும் 186 மாநகர பேருந்துகளில் 4 பேருந்துகளும், நீண்டதூரம் செல்லும் 44 அரசு போக்குவரத்து பேருந்துகளில் 2 மட்டுமே இயங்கின,
இதனால் தாம்பரம், குரோம்பேட்டை, ஆலந்தூர், பம்மல், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், , சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் ஓடாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது, அப்பகுதியில் பள்ளிகல்லூரி செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்வோர் என பேருந்து நிலையங்களில் காத்துள்ளனர், அதில் பலர் ஆட்டோ, ஷேர் ஆட்டோகளில் செல்லத் துவங்கினர்.
இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சம் வாடகை டாக்ஸி, ஆட்டோ, லோடு ஆட்டோ, சுற்றுலா வேன்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் பங்கேற்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓலா, உபேர் உள்ளிட்ட செயலி மூலமாக முன்பதிவு செய்து பயன்படுத்தும் சுமார் 25 ஆயிரம் வாகனங்கள் இன்றைய வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன.
சென்னையில் தினசரி இயக்கப்படும் 3,400 மாநகர பேருந்துகளில், தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதால் சுமார் 2,600 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இன்றைய தினம் இயங்கவில்லை. சென்னையில் சுமார் 70 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ள நிலையில், பொது வேலை நிறுத்தத்தின் காரணமாக 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இன்றைய தினம் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவடி பணிமனையில் இருந்து தினமும் செல்லக்கூடிய 149 பேருந்துகளில் இன்று 30 பேருந்துகள் மட்டுமே இயங்கியது. அதேபோல் அம்பத்தூர் பணிமனையில் இருந்து 154 பேருந்துகளில் ஒரு பேருந்து கூட இயங்கவில்லை. இதனால் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோகளில் அதிக கட்டணம் கொடுத்துச் செல்லும் கூட்டம் அதிகரித்துள்ளது.