சர்வதேச உணவுப் புகைப்பட விருது; வென்றது இந்தியரின் கபாபியானா புகைப்படம்!

சர்வதேச உணவுப் புகைப்பட விருது; வென்றது இந்தியரின் கபாபியானா புகைப்படம்!
Published on

சர்வதேச அளவில் ஒவ்வொரு வருடமும் உணவு தொடர்பான சிறந்த புகைப்படத்துக்கு 'பிங்க் லேடி ஃபுட் போட்டோகிராஃபர்' விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான விருது இந்தியாவைச் சேர்ந்த தேப்தத்தா சக்ரபர்த்திக்கு கிடைத்துள்ளது. காஷ்மீர் கபாப் வியாபாரியை வைத்து இவர் எடுத்த புகைப்படத்துக்கு 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த போட்டோ விருது வழங்கப்பட்டுள்ளது. 

காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள கய்யாம் சவுக் பகுதியில் ஒரு பிரபல கபாப் உணவகத்தில் ஊழியர் ஒருவர் இரவில், தகிக்கும் அடுப்புக்கு அருகே கபாப் தயாரிக்கும் புகைப்படத்தை எடுத்தார் தேப்தத்தா. அந்தப் புகைப்படத்தில் க்ரில் அடுப்பிலிருந்து ஜொலிக்கும் நெருப்பு மற்றும் புகைக்கு மத்தியில் தகிக்கும் கபாப் உணவும், அதைத் தயாரிப்பவரின் உணர்வும் ஜொலிக்கின்றன. இந்த புகைப்படத்துக்கு 'கபாபியானா' என்ற தலைப்பிட்டு, சர்வதேச விருதுப் போட்டிக்கு அனுப்பி வைத்தார். அந்த படம் அனைவரையும் கவர்ந்து, விருதையும் வென்றுள்ளது.

இதுகுறித்து  தொடர்பாக 'பிங்க் லேடி ஃபுட் போட்டோகிராஃபர்' விருதின் நிறுவனர் கரோலின் கூறியதாவது:

அந்தப் புகைப்படத்தில் ஸ்கூவர்களில் இருந்து தெறிக்கும் நெருப்பு, இறைச்சி வேகும் வாசனையையும் நம்மால் உணர முடிகிறது. அந்த உணவின் சுவையையும் கற்பனை செய்ய முடிகிறது. அனல்பறக்கும் புகை மூட்டத்திற்கு நடுவே அந்த ஊழியர் பிறருக்கு தருவதற்காக உணவு சமைப்பது சிறப்பாக படமாக்கப் பட்டுள்ளது. அது ஆன்மாவுக்கான ஆகாரம். இன்றைய உலகில் அன்பு அதிகம் தேவைப்படுகிறது. அதை இந்த புகைப்படம் சிறப்பாக படம்பிடித்து காட்டியுள்ளது.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இந்த விருதிற்கு 60 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் உணவுப் புகைப்படங்களை அனுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com