நாட்டின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பிஜேபி-க்கான வேட்பாளர் திரவுபதி முர்மு குறித்து பிரபல பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது:
திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் இதில் பாண்டவர்கள் யார்? கவுரவர்கள் யார்?
–இவ்வாறு பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து ராம்கோபால் வர்மா மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு தெலங்கானா பாஜக தலைவர் கூடூர் நாராயணா ரெட்டி போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து ஐதராபாத் போலீஸ் அந்த புகாரை சட்ட ஆலோசனைக்கு அனுப்பி, அதன்பின் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வர்மா மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், ராம் கோபால் வர்மா உடனடியாக தனது கருத்துக்கு விளக்கம் அளித்து ட்வீட் செய்தார். அதில் அவர் தெரிவித்ததாவது:
திரவுபதி மர்மு குறித்து சும்மா கேலிக்காக சொல்லப்பட்டதே தவிர உள்நோக்கம் எதுமில்லை. மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் திரவுபதி. ஜனாதிபதி வேட்பாளரின் இந்த பெயர் மிகவும் அரிதானது என்பதால், சும்மா ஜாலிக்காக இப்படி சொன்னேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதை சொல்லவில்லை.
-இவ்வாறு இயக்குனர் ராம்கோபால் வர்மா தன் கருத்துக்கு தானே மறுப்பு தெரிவித்துள்ளார்.
லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் கோல்வாலியில் மனோஜ் சின்ஹா என்பவர் வர்மாவுக்கு எதிராக புகாரளித்துள்ளார். இதன்படி ஐடி சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் ராம் கோபால் வர்மா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.