ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நுபுர்சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட டெய்லரை கொடூரமாக கொலை செய்து வீடியோ வெளியிட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக செய்தி தொடர்பாளராக இருந்ந நுபுர் சர்மா, கடந்த மே 27-ல் தொலைக்காட்சி விவாதத்தின்போது நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்கு நாடு முழுவதும் கடும் கன்டனம் எழுந்தது. அரபு நாடுகளும் இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, நுபுர் சர்மா கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட உதய்பூரைச் சேர்ந்த டெய்லர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்த 2 நபர்கள் 2 வீடியோக்களும் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து உதய்பூரின் பல பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. டயர்களுக்கு தீவைக்கப்பட்டது.
கொலையாளிகள் அந்த டெய்லரை கொலை செய்த வீடியோவிடன், அந்த கொலைக்கான காரணத்தை விளக்கும் மற்றொரு வீடியோவும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் கொலையாளிகள் தங்கள் பெயரை முகம்மது ரியாஸ், மற்றும் முகம்மது கோஷ் என அறிமுகம் செய்கின்றனர். அதில் அவர்கள் தெரிவித்ததாவது:
நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்ததால் இதுதான் கதி! கூடிய சீக்கிரமே இந்த கத்தி பிரதமர் நரேந்திர மோடியை கழுத்திற்கு வர பிரார்த்திக்கிறோம்.
-இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ராஜஸ்தான் உள்பட பல இடங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதிகளில் 144 தடையுத்தரவு அமல்படுத்தப் பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.